கரூர் பேருந்து நிலையங்களில் சரக்கு விற்பனை “ஜோர்”..
கரூர் பேருந்து நிலையங்களில் சரக்கு விற்பனை ஜோர்..
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு என்பது நாளுக்கு நாள் கடுமையாக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து வகையான அத்தியாவசிய கடைகளும் போக்குவரத்தையும் தடை செய்து கொரோனா தொற்றிலிருந்து மக்களை எச்சரிக்கையாக இருக்கும் வண்ணம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும் அத்தியாவசிய கடைகளாக மளிகைக் கடைகள் மற்றும் இதர கடைகள் அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை ஒரு வார காலத்திற்கு மூடப்பட்டிருக்கிறது. இதில் டாஸ்மாக் கடைகளும் அடங்கும், இந்நிலையில் கரூர் மாவட்ட பேருந்து நிலையங்களில் உள்ள சாப்பாடு ஹோட்டல்களில் சரக்குகள் விற்பனை பிளாக்கில் வெகு ஜோராக நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இரவு பகல் முழுவதும் 24 மணி நேரமும் சரக்கு கேட்போருக்கு உடனடியாக கிடைக்கும் வண்ணம் ப்ளாக்கில் ஒரு கும்பல் ரூபாய் 500 லிருந்து 600 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர். இதற்கு அந்த ஹோட்டல் உரிமையாளர்களும் உடந்தையாக இருந்து கல்லா கட்டி வருவதாக கூறுகின்றனர்.
இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததா என்றால் விற்பனை செய்பவர்கள் மொத்தமாக அங்கு உள்ள ஹோட்டல்களிலும் மற்ற இதர கடைகளிலும் பிரித்து வைத்து விற்பனை செய்து வருவதால் போலீசாரால் தகவல் ஏதும் வரவில்லை என்கின்றனர். மேலும் கரூர் மாநகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் நிலையில் அவர் தீவிரமாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு செயலாற்றிக் கொண்டு இருப்பதால் இது மாதிரியான செயல்பாடுகள் நடந்து வருவதை அவர் கண்டு கொள்வதில்லை என்று அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர்.
மேலும் தகவல் தெரிவிக்க வேண்டிய காவல் நிலைய உளவுத்துறை அதிகாரிகளும் இவை அனைத்தும் தெரிந்தும் அமைதியாக இருந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக கரூர் மாவட்ட எஸ்.பி இன்ஸ்பெக்டர் செல்வராஜ்யிடம் அங்குசம் செய்திக்காக பேசியபோது…
கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் அதிதீவிரமாக வாகன சோதனை முதற்கொண்டு, கொரோனா காலகட்டத்தில் ஏற்படக்கூடிய சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை தீவிரமாக விசாரணை செய்து வழக்கு பதிந்து வருகின்றோம். அதிலும் சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வது, மது பாட்டில்கள் கடத்துவது, கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை ரகசியமாக கண்காணித்து தனிப்படை போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் கரூர் மாவட்ட பேருந்து நிலையங்களில் சட்டத்திற்கு புறம்பாக இரவு பகல் முழுவதும் சரக்கு விற்பனை என்பது நடந்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர் மீது போலீசார் விரைவில் நடவடிக்கை மேற்கொள்வர் என்றார்..
–ஜித்தன்