திருச்சியில் கொரோனா காலத்திலும் கட்டுக்குள் அடங்காத சரக்கு -கஞ்சா..
திருச்சியில் கொரோனா காலத்திலும் கட்டுக்குள் அடங்காத சரக்கு -கஞ்சா..
கொரோனா பெரும் தொற்று காரணமாக தமிழகத்தில் நாளுக்கு நாள் முழு ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு வருகிறது. மேலும் ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய கடைகளிலிருந்து அனைத்து கடைகளும் மறு உத்தரவு வரும் வரை மூடிட மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் திருச்சி மாநகர மாவட்ட பகுதிகளில் சரக்கு மற்றும் கஞ்சா விற்பனை என்பது வெகு ஜோராக இருந்து வருகிறது..
சட்டத்திற்கு புறம்பாக சரக்கு, கஞ்சா விற்பனை செய்வது கள்ளச்சாராயம் காய்ச்சுவது என இருந்து வரும் நிலையில் திருச்சி போலீசார் தொடர்ந்து ரைடு அடித்த வண்ணம் பல்லாயிரம் ரூபாய் மதிப்பிலான சரக்கு பாட்டில் பெட்டிகளையும் கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதில் திருச்சி மாநகர பகுதியில் கொரோனா காலகட்டத்தில் மட்டும் சுமார் 125 கிலோ கஞ்சா தனிப்படை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளான தென்னூர், தில்லை நகர் காந்தி மார்க்கெட், கருவாட்டு பேட்டை, ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் ,எடமலைப்பட்டி புதூர், பாலக்கரை, கண்டோன்மெண்ட் ஆகிய பகுதிகளில் புலங்குவதை கண்டறிந்து சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
ஆனால் திருச்சி மாநகர மாவட்ட பகுதிகளில் உட்பட்ட ராம்ஜி நகர் பகுதிகளில் சரக்கு மற்றும் கஞ்சா விற்பனை தலைதூக்கி நடைபெற்று வருகிறது. இதனை மாநகர போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க செல்லும்போது மாவட்ட காவல் எல்லைக்கு தப்பித்து விடுவதாகவும், மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட போலீசார் பிடிக்க வரும்போது மாநகர எல்லைக்குள் தலைமறைவாகி விடுவதுமாய் இருந்து வருகிறது. இருப்பினும் சமீபத்தில் மாநகர கமிஷனர் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் ராம்ஜிநகர் பகுதியில் ரைடு அடித்து பண்டல் பண்டலாக கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
தடைசெய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சா திருச்சியில் கண்மூடித்தனமாக புழக்கம் ஏற்பட்டு பல்வேறு பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளை குறிவைத்து மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக என்.ஐ.பி எனப்படும் போலீசார் பெரிய இடங்களிலிருந்து சிபாரிசு வருவதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் இருந்து வருகின்றனராம்..
மேலும் மாநகர பகுதிகளில் நடக்கும் கொலை கொள்ளை செயல்களில் பின்னடைவில் கஞ்சா போன்ற போதைப் பொருள் முதற்காரணமாக இருந்து வருகிறது..
கடந்த 2 நாட்களுக்கு முன்பு உறையூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆதி நகர் பகுதியில் 26 கிலோ கஞ்சா பொட்டலங்கள் உடன் ஹரிஹரன் எனும் 20 வயது நபர் சிக்கினார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த மதன் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோரை தனிப்படை போலீசார் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்..
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் தடைசெய்யப்பட்ட கஞ்சா மது பாட்டில்களை விட பண்டல் பண்டலாக சிக்கி வருகிறது. போக்குவரத்து போன்ற எதுவும் இயங்காத நிலையில் இவ்வளவு கஞ்சா பொருட்கள் எங்கிருந்து எப்படி வருகின்றது என்கின்ற கேள்வி போலீசார் இடையே இருந்து வருகிறது. இருப்பினும் வடமாநிலங்களில் இருந்து வரக்கூடிய பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில் ரயில் போக்குவரத்து மட்டும் இயங்கிய வண்ணம் இருந்து வருகிறது. அதிலும் ஹவுரா, கேரளா, செல்லக்கூடிய ரயில்களும் புலகத்தில் இருந்து வருவதால் உளவுத்துறை வட்டாரங்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக மாநகர துணை காவல் ஆணையரிடம் அங்குசம் செய்திக்காக பேசியபோது..
திருச்சியில் கொரோனா காலத்திலும் சரக்கு மற்றும் கஞ்சா போன்றவை விற்பனையாகி வருகிறது. இதனை தடுக்கும் விதமாக மாநகர காவல் ஆணையர் உத்தரவின் அடிப்படையில் தனிப்படை போலீசார் கொண்ட குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சமீபத்தில் கிடைத்த தகவலின் அடிப்படையில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை நடைபெறுவதையும் கண்காணிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட ஹோட்டல் மற்றும் பார்களை ரெய்டு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
–ஜித்தன்