‘கர்ணன்’ படம்; பார்த்துவிட்டு பட்டாக்கத்தியுடன் அலப்பறை : 4 பேர் கைது – ஒருவர் தலைமறைவு!
‘கர்ணன்’ படம்; பார்த்துவிட்டு
பட்டாக்கத்தியுடன் அலப்பறை :
4 பேர் கைது – ஒருவர் தலைமறைவு!
நடிகர் தனுஷ் நடித்து அண்மையில் வெளியான ‘கர்ணன்’ படத்தை பார்த்துவிட்டு, ஒரத்தநாடு அருகேயுள்ள மேல உளுர் கிராமத்ததைச் சேர்ந்த 5 இளைஞர்கள் கையில் பட்டாக்கத்தியுடன் ரோட்டில் ‘அலப்பறை’ செய்ததுடன், அதை வீடியோ எடுத்து சமூகவலைத்தலத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் 4 பேரை கைது செய்து, தலைமறைவாக உள்ள மற்றொரு இளைஞரை தேடி வருகின்றனர்.
மேல உளுர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன்கள் முகேஷ்குமார் (21) மற்றும் சந்தோஷ்குமார் (20), முருகானந்தம் என்பவரின் மகன் தங்கமுத்து (23), ஷண்முகம் என்பவரின் மகன் கபிலன் (20), குமார் என்பவரின் மகன் வெங்கடேசன் (2) ஆகிய 5 பேரும் கையில் பட்டாக்கத்தி ஏந்தியவாறு அப்பகுதியில் உள்ள ரோட்டில் அலப்பறை செய்துள்ளனர். இக்காட்சிகளை சந்தோஷ்குமார் வீடியோ எடுத்துள்ளார். மேலும், அவ் வீடியோ காட்சிகளை, கர்ணன் படத்தில் வரும் ஒரு பாடலின் பின்னணி இசையுடன், சமூகவலைத்தலத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தலங்களில் வைரலானது.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்பேரில், ஒரத்தநாடு உட்கோட்ட டிஎஸ்பி பழனியின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அத்தனிப்படை போலீஸார் வெங்கடேஷன் தவிர ஏனைய நான்கு நபர்களையும் கைது செய்தனர்.
நடிகர் தனுஷ் நடித்து அண்மையில் வெளியான ‘கர்ணன்’ படத்தை பார்த்துவிட்டு தூண்டப்பட்டு, அதனால் ஏற்படும் விளைவுகளை அறியாமல், விளையாட்டுத்தனமாக செய்துவிட்டதாக அவ் இளைஞர்கள் விசாரணையின்போது போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும், இச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் (பட்டாக்கத்தி), மொபைல் ஃபோன் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்டுள்ள நால்வரில், முகேஷ்குமார் பிஎஸ்சி (பயோ டெக்னாலஜி) படித்துள்ளார். அவரது தம்பி சந்தோஷ்குமார் பிஇ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். தங்கமுத்து ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ளார். கபிலன் பி.லிட் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு திரைப்படத்தை வெறும் பொழுதுபோக்கு சாதனமாக பார்க்காமல் அத்திரைப்படத்தில் வருவதுபோல கையில் பட்டாக்கத்தி ஏந்தியபடி அலப்பறை செய்துவிட்டு, தற்போது தங்களது வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கிறார்கள் இந்த இளைஞர்கள்.