55 வயதிலும் வளைகின்ற ரப்பர் மங்கை…!
55 வயதிலும் வளைகின்ற ரப்பர் மங்கை…!
சிவகாசி மாநகரில் யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தி வருபவர் ஞானவாணி. வயது 55. இந்த வயதிலும் தனது உடலை பன்முகக் கோணங்களில் வளைத்து வளைத்து யோகா செய்து, ஒரு ரப்பர் மங்கையாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். இத்தனைக்கும் அவர் தனது பால்ய வயதில் இருந்து தொடர்ச்சியாக முறைப்படி யோகா கற்றுக் கொண்டவரும் இல்லை. ஆனால், இன்றைக்கு அவர் இந்தியாவின் தேசிய அளவிலான யோகா போட்டிகளுக்கான தலைமை நடுவராகப் பணியாற்றி வருகிறார்.
கணவன் இடையே ஏற்பட்ட மணமுறிவு காரணமாக தனது மகன்கள் இருவருடன் தனியாக வாழ்க்கையை எதிர் கொள்ளத் தொடங்கிய ஞானவாணி, “என் இல்லற வாழ்விலே ஏற்பட்ட இடர்பாடு தான் என்னை யோகாவில் வைராக்கியம் கொள்ளத் தூண்டியது” என்கிறார். ஞான வாணியிடம் பேசினேன்.
“மணமுறிவுக்குப் பின்னர் என் உடல்நலத்திற்காக அக்குபஞ்சர் பயிற்சி பெற்றேன். அங்கு யோகா பயிற்சியும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சிறுவயதில் பள்ளி நாட்களில் அவ்வப்போது யோகா வகுப்புகளுக்குச் சென்று வந்தது நினைவில் வந்தது. யோகாவும் பயின்றேன். யோகா மீது ஒரு பிடிப்பு ஏற்பட்டது. ‘இனி யோகா தான் என் வாழ்க்கை’ என்று முடிவு செய்து, தொலைதூரக் கல்வியில் ‘டிப்ளமோ இன் யோகா’ பயின்று தேர்ச்சி பெற்றேன். எம்.எஸ்சி., யோகாவும் தேர்ச்சியடைந்தேன். மாநில அளவிலான யோகா போட்டிகளில் 2010-&2011ல் முதலிடம் பிடித்தேன். மாநில அளவிலும் தேசிய அளவிலும் இதுவரை பல பரிசுகளும் விருதுகளும் பெற்றுள்ளேன்.

என் வீட்டு மாடியில் யோகா வகுப்புகள் நடத்தினேன். இதுவரை சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் என்னிடம் முறைப்படி யோகா பயிற்சி பெற்றுச் சென்றுள்ளனர். என்னிடம் யோகா பயிற்சி பெற்றவர்கள் தனியாக யோகா வகுப்புகள் ஆரம்பித்து மற்றவர்களுக்கு கற்றுத் தருவது மனமகிழ்ச்சி தரும் விஷயமாகும். கல்லூரிகளில் கெஸ்ட் லெக்சரராகச் சென்று மாணவ மாணவியர்க்கு யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறேன்.
NATIONAL YOGA SPORTS FEDERATION (NYSF) என்பது மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு அமைப்பாகும். அதில் தேசிய அளவிலான யோகா போட்டிகளின் நடுவராக 2012ல் நான் தேர்வு செய்யப்பட்டேன். தேசிய அளவிலான யோகா போட்டிகளுக்கு நடுவராக இயங்கி வந்துள்ளேன். சமீப ஆண்டுகளில் தலைமை நடுவராக தேர்வாகி, அகில இந்திய யோகா போட்டிகளுக்கான தலைமை நடுவராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். பல கிராமங்களில் நேரடி முகாமிட்டு கிராமப்புற மக்களுக்கு இலவசமாகவே யோகா பயிற்சி தந்து, யோகா முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
நுரையீரல் ஆக்சிஜன் அளவு குறைந்து போனதே கொரோனா மரணங்களுக்கு மிக முக்கிய காரணமாகும். நுரையீரல் பாது காப்புக்கும் அதன் செயல் பாட் டுக்கும் மிக எளிய மூச்சுப்பயிற்சி யும், யோகாவும் பக்கபலமாகும்.
“இந்த 55 வயதிலும் உடலைப் பலவித கோணங்களில் வளைத்து நெளித்து, யோகா செய்து வரும் சூட்சுமம் என்ன? என்ற கேள்வி எழுப்பிய போது, “சூட்சுமம் என்று எதுவுமே இல்லை. யோகா மீது என்றுமே தீராத காதல் தான். தொடர் பயிற்சிகள்.. உடலையும் வயிறையும் நாம் சொன்னபடிக் கேட்கும் விதமாக வைத்திருப்பது.. புதிது புதிதாக ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்கிற தொடர் முயற்சிகள்.. மனம் தளராமை.. இவைகள் தான் என்னுடைய 55வது வயதிலும் இந்த உடலை வளைத்து நெளித்து ஒடித்து பலவித கோணங்களில் என்னை யோகா ஆசனங்கள் இடவைத்துக் கொண்டிருக்கின்றன. சிவகாசி லயன்ஸ் சங்கத்தினர் எனக்கு “சிவகாசியின் ரப்பர் மங்கை” விருது கொடுத்துச் சிறப்பித்துள்ளனர்” என்றார் சிரித்துக் கொண்டே. வாழ்த்துக்களுடன் விடைபெற்றேன்.
