ஜீசஸ் எனும் சிநேகிதன் !

0

ஜீசஸ் எனும் சிநேகிதன்

———————-

33 வயதிலேயே இறந்து போனவன் நீ. உண்மையில் சாகடிக்கப்பட்டவன். 70 எல்லாம் சாகும் வயதா என அங்கலாய்க்கப்படும்  இந்தக் காலத்தில் 33 ல் உலகில் இல்லாமல் போய் இரண்டாயிரம் ஆண்டுகளாக இருந்து கொண்டிருக்கிறாய் கிறிஸ்துவாக. உண்மையில் எனக்கு உன் கிறிஸ்து அவதாரத்தின் மீது எவ்வித ஆர்வமுமில்லை. எல்லாம் நிறுவனமயமாக்கப்பட்ட இன்னொன்று தானே. ஆனால் ஜீசஸ் எனும் அந்த இளைஞன் மீது அளவு கடந்த சிநேகமும் ப்ரியமும் உண்டு.

நீ ஒரு சிந்தனையாளன். உண்மையில் சொல்லப்போனால் புரட்சியாளன். எல்லோரும் ஆட்டு மந்தைகளாக இருந்த காலகட்டத்தில் சொந்த சிந்தனைகள் கொண்டு மக்களை விழிப்புற வைத்தவன். கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக் கூடாது என கலகம் செய்தவன்.

அனைத்து மதகுருமார்களின் பிழைப்புக்கு வேட்டு வைத்து பகையை சம்பாதித்தவன். உன்னால் ஏன் எல்லோரும் போல் அன்று இருக்க முடியவில்லை என்பதற்கு காரணம் நீ பிறப்பிலேயே விதி சமைப்பவன் எனும் உயர்வோடு பிறந்ததால் இருக்கலாம். மானுடனாகத்தான் பிறந்தாய். உன் பிறப்பு பின்னால் புனிதப்படுத்தப்பட்டு இருக்கலாம், அம்மா கன்னி மேரி என. ஆனால் என் நினைப்பில் நீ ஒரு நல்ல மகன், சிநேகிதன், மாணவன், குடும்ப நலன் பேணும் உறுப்பினன்.

உன் இளம்பிராயத்தில் உன்னோடு காடுமேடெல்லாம் சுற்றியலையும் ஆசை எனக்கிருந்ததுண்டு. ஏனெனில் படித்த பள்ளிகள் பலவும் உன் பேர் சொல்லி புகழ் பாடி நடந்தவைகள் தானே. ஞாயிறு அப்பம் கிடைத்ததில்லை. வருத்தமும் இல்லை. ஆனால் கையை உயர்த்திய உன் சிநேக முகமும் நானிருக்கிறேன் வாடே எனும் வாஞ்சை பொழியும் கண்களும அன்றைக்கே எனக்குள் ஊறிப்போனவை.

இந்த உலகம் கொடியது. இக்கட்டுகள் கொண்டது. மூடநம்பிக்கைகளால் இறுக்குண்டது. நியாயங்களும் தர்மங்களும் ஆளுக்கும் காலத்திற்கும் ஏற்ப மாறுபவை. அன்று நீ புரட்சி பேசிய பொழுது துணுக்குற்றிருக்கும். நானே கடவுளின் மகன் என நீ அறிவித்துக் கொண்ட பொழுது அது முடிவு செய்திருக்கும் உன் முடிவுரையை. உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் கைக்கொள்வது அளவு கடந்த அதிகாரமும் அடக்குமுறையும். ஆனால் நீ உணர்ந்தே செய்தது அன்பும் கருணையும். அதனால் தான் எளிதில் பழிபோட்டு போட்டுத் தள்ளி விட்டார்கள். உன்னை கிறிஸ்துவாக உலகம் முழுக்க பரப்ப உன்னை மதமாக மாற்றியவர்கள் கைக்கொண்ட வன்முறையை கூட நீ தொடவில்லை. தெரிந்திருக்காது உனக்கு.

என் அங்கலாய்ப்பு எல்லாம் வேறு ஜீசஸ். நீ வாழ்ந்திருக்க வேண்டும். நீக்கு போக்காக இருந்து மெல்ல மெல்ல உன்னை நிலைப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். நேரம் வருகையில் உன்னை நிரூபித்து மொத்த நாட்டையும் மக்களையும் வென்றிருக்க வேண்டும். நீ ஒரு நல்ல ஆண்மகன். கருணையும் சிநேகமும் கொண்டிருக்கும் பேராண்மை நிறைந்தவன். நீ ஒரு துடிப்பான இளைஞன். சுயம்பு. 33ல் பிழைத்திருந்தால் உன் வாழ்வு அவ்வளவு சுவாரசியமானதாக இருந்திருக்கும். காதலித்திருப்பாய். கல்யாணம் கட்டியிருப்பாய்.  நீ திருமணம் புரிந்து பிள்ளைகள் பெற்றிருக்க வேண்டும். உன் மனைவியை அவர் விருப்பப்படி இருக்கவும் வாழவும் உணர்வித்திருப்பாய்.  உன் மகனுக்கு எப்படி வீடு நிர்வாகம் செய்வதெனவும் அப்பமும் திராட்சை ரசமும் எப்படி சமைப்பதெனவும் வெகுநிறைவாக  சொல்லிக்கொடுத்திருப்பாய்.

உன் மகளுக்கு தச்சு வேலையின் அனைத்து உத்திகளையும் படிப்பித்திருப்பாய். உன் நிறை வாழ்வு உலகை வேறு பக்கம் நிச்சயம் மாற்றியிருக்கும். ஆணும் பெண்ணும் எப்படி வாழ்வில் இயைந்து வாழ்ந்து உய்வதென உலகுக்கு காட்டிக்கொடுத்திருப்பாய். ஆணும் பெண்ணும் சமம் எனும் சிந்தனைக்கு இன்னைக்கு இரண்டாயிரம் வயதாகி இருக்கும். ஒரு நல்ல ஆண்மகனின் காமம் என்பது அவன் காதலை விடவும் வெகு அழகானது. நேர்த்தியானது. அபூர்வமானது. மனிதனாகப் பிறந்த நீ அதை இந்த உலகிற்கு காட்டி சென்றிருக்க வேண்டும். இந்த உலகம் நிச்சயம் வேறு பாதைக்கு சென்றிருக்கும் நீ இருந்து வாழ்ந்து காட்டியிருந்தால். பாவத்தின் பின்னாலும் மன்னிப்பின் பின்னாலும் மனித சிடுக்குகள் மறைத்து நிச்சயம் வாழ்ந்திருக்காது.

ஊராருக்கு ஞானமளிக்க காடுமேடெல்லாம் பிள்ளை குட்டிகளோடு திரிந்திருப்பாய். நீ தொட்ட நீர் திராட்சை ரசமாகி இருக்காது. உன் அனைவருக்கும் சமமான பகிர்ந்தளிப்பே அவர்களுக்கு ரசமென இனித்திருக்கும். நீ தொட்ட குஷ்டரோகி உடனே குணமடைந்திருக்க மாட்டார். ஆனால் உன் தயக்கங்கள் அற்ற வாஞ்சையான அணைப்பும் ஆறுதலும் பிறரையும் அவரை அரவணக்க செய்து தகுந்த சிகிட்சையை பெற வைத்திருக்கும். மேஜிக் காட்டி புனிதர் பட்டம் பெற்றவனல்ல நீ. உன் சொற்களும் செயல்களும் பரிசுத்தமானவை. மக்களை நிச்சயம் வென்றெடுத்திருப்பாய். நிறுவனமயமாக்கப்பட்டு அல்ல. தன்னையே உங்களுக்கானவன் நான் என நிரூபித்தலின் மூலம்.

உனக்கு பின்னாக உன் மனைவி உன்னை உன் வாழ்வை வழிமொழிந்திருக்கக்கூடும். உன் மகனும் மகளும் என் அப்பாவின் வாழ்வு இதுவென சிலாகித்து எழுதி சென்றிருக்க வேண்டும். இது எதுவுமே இல்லாமல் போய்விட்டாயே என்பதே என்னை அதிகம் அலைக்கழிக்கிறது. உற்ற நண்பனின் குறை வாழ்வென்பது காலத்துக்கும் இருந்து குடையும் ஒரு துயரம்.

ஒரு சிநேகிதனாக அதுவே என்னை துயரத்தில் ஆழ்த்துகிறது. நீ இளமையை கடந்திருக்க வேண்டும். உன் வாழ்வு பாடமாகி இருக்க வேண்டும். ஆனாலும் இந்த உலகம் அப்பொழுதும் உன்னை இறையாகத்தான் மாற்றியிருக்கும். இதையெல்லாம் செய்ய முடியாமல் பின்பற்ற வழியில்லாமல் இருக்கும் பெரும்பான்மை குற்றவுணர்வை போக்கிக்கொள்ள கண்டுபிடிப்பதுதான் இறையாய் கடவுளாய் தூக்கி வைக்கும் செயல். உனக்கு மட்டுமல்ல. ராமன் கிருஷ்ணன் யாராகிலும் இதுவே விதி. வகுத்ததை செய்யமுடியாமல் போகையில் தூக்கிவைத்து கும்பிட்டுவிட்டால் தப்பித்தோம் என்பது போக புனிதத்தில் பங்கும் போட்டுக் கொண்டோம் என்பதுதான் இந்த உலகை மதங்களின் மீதாக இயங்க வைக்கும் சூத்திரம்.

நீ மூன்றாம் நாள் உயிர்தெழுந்தாயா என்பது எனக்கு தெரியாது. நான் நம்பவுமில்லை. ஆனால் நீ இருந்திருப்பின் உன்னைவிட உற்சாகமான தோழமையான ஆத்மார்த்தமான ஒரு மனிதனை இந்த உலகம் அதன் பின்  கண்டிருக்காது. கூடவே இரு என் தோழனே.. சிநேகிதனாக வழிநடத்து. சிறுமைகள் செய்கையில் மண்டையில் தட்டி சொல்லிக்கொடு. துயரத்தில் உழல்கையில் மார்போடு அணைத்துக் கொள். விரக்தியில் துவள்கையில் உன் களங்கமற்ற சிரிப்பினாலும் சினேகத்திட்டுகளாலும் ஆற்றுப்படுத்து. இதற்கு நீ எனக்கு கிறிஸ்து என்னும் கடவுளாக இருக்க வேண்டிய தேவையே இல்லை எனக்கு. ஜீசஸ் எனும் துடிப்பான அன்பும் கருணையும் வாஞ்சையும் மட்டுமே கொண்ட ஒரு கூட்டாளியாக இரு போதும். நல்லது சொல்லிக் கொடுக்கும் சிநேகித சிந்தனையாளனாக இரு போதும்.

என் மனதிற்குள் நீ சிலுவையில் அறையப்பட்டு 33ல் மாண்டு போனவனல்ல. அந்த சிலுவையிலேயே விளையாடி களிக்கும் ஒரு சிநேகிதன். வாழ்வின் துயர்களை எப்படி அலைக்கழியாமல் அல்லறுறாமல் விளையாட்டாய் கையாண்டு மகிழ்வாய் இருப்பது என காட்டிச் செல்லும் கூட்டாளி.   அப்படியே இரு என்றைக்கும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் சிநேகிதனே…

– இளவஞ்சி

Leave A Reply

Your email address will not be published.