வெடித்தது மோதல், மீண்டும் உடையுமா அதிமுக..?

0

வெடித்தது மோதல், மீண்டும் உடையுமா அதிமுக..?

திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கிய அண்ணா இறந்த பிறகு கலைஞர் தலைமையை ஏற்று செயல்பட்டுவந்த திமுகவின் மீது எம்ஜிஆருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக திமுகவிலிருந்து பிரிந்து அதிமுக தனிப்பெரும் கட்சியாக உருவானது. பிறகு நடைபெற்ற தேர்தல்களில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக மிகப்பெரிய வெற்றி பெற்று எம்ஜிஆர் முதல்வராக அரியணை ஏறுகிறார்.

பிறகு எம்ஜிஆர் மரணிக்க ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும், எம்ஜிஆரின் மனைவியான ஜானகி அம்மாள் தலைமையில் ஒரு அணி என்று அதிமுக இரண்டாக உடைகிறது. அதன் பிறகு தேர்தலில் வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஜெயலலிதா கட்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறார். ஜெயலலிதா கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று கட்சியை மிகப்பெரிய அளவில் வளர்த்தார். இந்தியாவின் பிரதமராக இருந்த வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியை கலைத்தவர் ஜெயலலிதா என்று கூறி, இந்தியா முழுக்க பெரிய ஆளுமையாக உருவெடுத்தார் ஜெயலலிதா. தமிழகத்தில் இருந்த கட்சியை இந்திய அளவில் ஒரு பெரும் கட்சியாக ஜெயலலிதா கொண்டு சென்றார் என்று அப்போது கூறப்பட்டது.

அப்படியாக இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக அதிமுகவை ஜெயலலிதா உயர்த்தினார்.மேலும் தொடர்ச்சியாக இரண்டு முறை முதல்வராக பொறுப்பேற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் ஜெயலலிதாவின் மரணம் வெற்றிக் கொடியை பறித்துக் கொண்டிருந்த அதிமுகவிற்கு மிகப்பெரிய அடியாக அமைந்தது.
கடந்த ஆறு ஆண்டுகளாக வெற்றியை மட்டுமே கண்ட அதிமுக தோல்வியை சுவைக்க ஆயத்தமானது. ஜெயலலிதாவின் உற்ற தோழியாக இருந்த சசிகலா அதிமுகவின் தலைமையை ஏற்றார். அப்பொழுது தமிழக நிதி அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவின் தலைமையை ஏற்க மறுத்து ஜெயலலிதா சமாதியின் முன் தியானத்தில் ஈடுபடுகிறார்.

அப்பொழுது கட்சி மீண்டும் இரண்டு அணிகளாகப் பிரிந்து. அன்று அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருந்த சசிகலா எடப்பாடி கே பழனிசாமி தமிழகத்தின் முதல்வராக்குகிறார்.

இப்படி அதிமுக பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் மீது சுமத்தப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. அதனால் சசிகலா சிறை செல்கிறார்.
இந்த சமயத்தில்தான் அதிமுகவிற்கு துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்படுகிறார்.

பிறகு அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்க எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் ஓரணியாக இணைந்து. சசிகலாவின் குடும்பத்தை அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குகின்றனர். ஏன் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப் படுகின்றார் சசிகலாவும் அவர் குடும்பத்தினரும் மற்றும் ஆதரவாளர்களும்.


பிறகு எடப்பாடி கே பழனிசாமி கட்சிக்கு துணை ஒருங்கிணைப்பாளர் ஆகவும், ஆட்சிக்கு முதல்வராகவும் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் கட்சிக்கு ஒருங்கிணைப்பாளர் ஆகவும் ஆட்சிக்கு துணை முதல்வராகவும் செயல்பட உடன்பாடு ஏற்பட்டதன் அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுகவை கைப்பற்றுகின்றனர்.

இதற்கு மத்தியில் ஆளக்கூடிய பிஜேபி அரசு தான் காரணம், அவர்கள் உதவியுடனே அதிமுகவை ஓபிஎஸ் இபிஎஸ் கைப்பற்றினார்கள், இதன் மூலம் பிஜேபி அரசு தமிழகத்தில் தனக்கு வேண்டிய திட்டங்களை செயல்படுத்த முயற்சிக்கிறது என்று பரவலான கருத்தும் தற்போது வரை நிலவி வருகிறது.

இதனால் சசிகலாவின் ஆதரவாளர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற ஒரு கட்சியை தொடங்குகின்றனர். அதற்கு துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்படுகிறார்.இந்நிலையில்தான் ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற தொகுதியயான ஆர்கே நகர் தொகுதியில் டிடிவி தினகரன் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

இப்படி அமமுக சென்று கொண்டிருக்க, அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் இணைந்த அன்று முதலே குழப்பங்கள் வெளிப்பட ஆரம்பித்துவிட்டன. அமைச்சர்கள் இடையே கருத்து வேறுபாடு, முன்னுக்குப் பின் முரணான செய்திகள், ஓபிஎஸ்-க்கு ஆதரவான அணி, இபிஎஸ் ஆதரவான அணி என்று பல்வேறு குழப்பங்கள் தொடர்கதையானது. இது தற்போது பூதாகரமாக வெடித்து இருக்கிறது. காரணம் என்ன என்று பார்க்கும் பொழுது தேர்தல் மட்டுமல்ல. சிறைக்குச் சென்ற சசிகலா விடுதலையாக இருப்பதுமே என்று தெரியவருகிறது.

ஆதரவாளர்கள் மட்டும் சண்டை போட்டுக் கொண்டு இருந்த நிலையில் இன்று ஒருங்கிணைப்பாளரும் துணை ஒருங்கிணைப்பாளருமே நேரடியாக சண்டையிட தொடங்கியிருக்கின்றனர். அடுத்த தேர்தலில் முதல்வர் யார், கட்சிக்கு யார் தலைவர் என்று இருவேறு கருத்துக்கள் பூதாகரமாக வெடிக்க இன்று நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு கூட்டம் படத்திலேயே முடிவடைந்திருக்கிறது.

மேலும் கூட்டத்தில் OPS: உங்களை (EPS) முதல்வர் ஆக்கியது சசிகலா; என்னை முதல்வர் ஆக்கியது அம்மா…EPS: உங்களையும் (OPS) என்னையும் (EPS) இரண்டு பேரையும் முதல்வர் ஆக்கியது சசிகலாதான்… என்று இருவருக்கும் என்று உரையாடல் நடை பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக அரசு வரக்கூடிய ஆறு மாதமாவது தொடருமா என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து அரசியல் விமர்சகர்களிடம். கேட்கும்பொழுது சசிகலா வந்தவுடன் அதிமுக ஓரணியாக இணையும். அப்பொழுது ஓபிஎஸ் அணியோ அல்லது இபிஎஸ் அணியோ அதிமுகவில் இருந்து வெளியேறும். என்று கூறினார்கள்.

-மெய்யறிவன்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.