ரூ.27 லட்சம் ஏமாற்றிவிட்டதாக முன்னாள் DSP மீது வழக்குப்பதிவு!
ரூ.27 லட்சம் ஏமாற்றிவிட்டதாக
முன்னாள் DSP மீது வழக்குப்பதிவு!
மெத்தை வியாபாரம் செய்வது தொடர்பாக கொடுத்திருந்த ரூ.27 லட்சத்தை திருப்பித் தராமல் நம்பிக்கை மோசடி செய்து ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் ஓய்வுபெற்ற DSP மீது தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள பரவாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி.
தஞ்சாவூரில் மருத்துவக் கல்லூரி சாலை பகுதியில் வசித்துவரும் இவர் கடைசியாக தஞ்சாவூர் மாவட்ட க்யூ பிராஞ்ச் டிஎஸ்பி-யாக பணிபுரிந்து ஓய்வுபெற்றார்.
ஓய்வுபெற்ற பின்னர்,‘Saara Mattress’ என்ற பெயரில் சொந்தமாக மெத்தைகள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது அலுவலகம் தஞ்சாவூரில் டேனியல் தாமஸ் நகரில் உள்ளது. புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் பகுதியில் தொழிற்சாலை உள்ளது.
இந்நிலையில், வியாபாரம் தொடர்பாக தான் கொடுத்திருந்த பணத்தை நம்பிக்கை மோசடி செய்து திருப்பித் தராமல் ஏமாற்றிவிட்டதாக பரவாக்கோட்டையைச் சேர்ந்த பொற்பாவை என்ற பெண் சில தினங்களுக்கு முன்னர் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்-திடம் புகார் மனு அளித்தார்.
அதை உரிய நடவடிக்கைக்கு மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார் எஸ்.பி.
வழக்குப் பதிவு
இதையடுத்து, அப் புகாரின் அடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி குற்றஞ்சாட்டப்பட்ட ஓய்வுபெற்ற க்யூ பிராஞ்ச் டிஎஸ்பி ராஜேந்திரன் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 406 (நம்பிக்கை மோசடி செய்தல்), 420 (ஏமாற்றுதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
வெளிநாடு வாழ் இந்தியர்
புகார்தாரரான பொற்பாவையும் பரவாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது கணவர் கோபி என்ற கோபிநாதன் மலேசியாவில் வசித்துவரும் வெளிநாடு வாழ் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஓய்வுபெற்ற டிஎஸ்பி ராஜேந்திரனை தொடர்பு கொண்டு கேட்டபோது, தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.
“நான் காவல்துறையில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் ‘Saara Mattress’ என்ற பெயரில் மெத்தைகள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறேன்.
இந்நிலையில், தாமாகவே என்னைத் தொடர்பு கொண்ட கோபிநாதன் என்னுடைய நிறுவனத்தில் கொஞ்சம் பணம் முதலீடு செய்வதாகவும் பங்குதாரராக சேர்த்துக் கொள்ளுமாறும் கேட்டார்.
அத்திட்டத்தை ஏற்க நான் மறுத்துவிட்டேன்,” என்கிறார் ராஜேந்திரன்.
அதன் பின்னர், எனது தொழிற்சாலையில் Non Branded mattress-களைத் தயார் செய்து கொடுப்பது என்றும் அவற்றை அவர் ‘Surya Mattress’ என்ற பெயரில் டிஸ்டிரிபியூட் செய்து கொள்வது என்றும் அதற்கு செக்யூரிட்டி டெபாசிட்டாக ரூ.50 லட்சம் அவர் தர வேண்டும் எனவும் பேசி இருதரப்பிலும் ஒப்புக்கொண்டு அதற்கான ஒப்பந்தம் செய்து கொண்டோம்.
இதையடுத்து அவர் மலேசியாவில் இருந்து வங்கி பரிவர்த்தனை மூலம் இரண்டு மூன்று தவணைகளில் மொத்தம் ரூ.40 லட்சம் மட்டுமே அனுப்பி வைத்தார்.
இது 2019ம் ஆண்டு கோவிட் நோய்த் தொற்று பரவுவதற்கு முன்பு நடைபெற்றது.
கோவிட் லாக்டவுன்
அவர் எங்களிடம் கொடுத்த பணத்தில் நாங்கள் மெத்தைகள் தயாரிப்பதற்கான மூலப் பொருள்களை வாங்கி தொழிற்சாலையில் வைத்திருந்தோம்.
அக்காலக்கட்டத்தில் திடீரென கோவிட் நோய்த் தொற்றுப் பரவி இந்தியா முழுமைக்கும் லாக்டவுன் அமலில் இருந்ததால், எங்களது தொழிற்சாலையும் இயங்கவில்லை.
அதனால் இரண்டு ஆண்டுகளாக அம் மூலப்பொருள்கள் அனைத்தும் பயன்படுத்தப்படாமல் வேஸ்ட் ஆகிவிட்டன. அந்த வகையில் எங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது.
இதற்கிடையில், தனது மகளின் படிப்புக்கு பணம் தேவைப்படுவதாகக் கூறி கோபிநாதன் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் 2021-ம் ஆண்டு ரூ.10 லட்சம், இன்னொரு முறை ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.13 லடசம் திருப்பிக் கொடுத்துள்ளேன்.
அவருக்கு மீதி ரூ.27 லட்சம் மட்டுமே நான் தரவேண்டியுள்ளது.
நஷ்டத்தை ஏற்க மறுப்பு
ஆனால், அவருக்காக மூலப் பொருள்கள் வாங்கி வைத்ததன் மூலம் எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தில் கொஞ்சத்தை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டதற்கு அவர் ஏற்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில், அவரை நான் பணமோசடி செய்துவிட்டதாக பொய்யாக புகார் அளித்துள்ளார்.
ஏற்கெனவே சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் காவல்துறையில் இதேபோல ஒரு புகார் மனு அளித்தார்.
அம்மனுவை தஞ்சாவூர் டவுன் டிஎஸ்பி, இதே மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
அப்போது, இது சிவில் வழக்கு எனக்கூறி அம் மனு மீது மேல்நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டனர்.
மீண்டும் புகார்
இந்நிலையில் இப்போது மீண்டும் அதே குற்றச்சாட்டைக் கூறி கோபிநாதன் மனு அளித்துள்ளார்.
அதனடிப்படையில் அடிஷனல் எஸ்.பி. ஜெயச்சந்திரன் என்னிடம் விசாரணை நடத்தினார். அவ் விசாரணையின்போது எனது தரப்பு நியாயத்தை அவரிடம் தெரிவித்துவிட்டேன்.
ஆனால் தற்போது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக நீங்கள் சொல்கிறீர்கள்.
இதுபோன்ற சிவில் வழக்கில் எந்த அடிப்படையில் என் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் எனத் தெரியவில்லை என்கிறார் ராஜேந்திரன்.