துரை வைகோக்கு ஆதரவும் எதிர்ப்பும் – மதிமுக அரசியல் நிலவரம்!

0

திமுகவில் கலைஞர் ஆளுமையாக வளர்ந்து கொண்டிருந்த அதே காலகட்டத்தில் மற்றொரு நபரும் தனி அடையாளமாக உருவெடுத்திருந்தார், அவர் தான் இன்று மதிமுகவின் பொது செயலாளராக உள்ள வைகோ. கலைஞருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுகவிலிருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கினார்.

திமுகவில் இருந்து அவர் புரியும் போது திமுக மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து விட்டது, இனி திமுக ஆட்சியை பிடிக்க முடியாத நிலை ஏற்படும், வைகோவின் அரசியல் பார்வை கலைஞரை தோற்கடித்து விடும் என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் அந்த காலகட்டத்தில் எழுந்தன.
இந்த கருத்துக்கள் எழுவதற்கு வைகோவின் அன்றைய செயல்பாடுகளும் முக்கிய காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படி உருவான மதிமுக பல்வேறு வளர்ச்சிகளையும் வீழ்ச்சிகளையும் பல்வேறு காலகட்டங்களில் சாதித்திருக்கிறது. இந்நிலையில் தற்போது திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்று 4 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது மதிமுக. மிக நீண்ட நாள் கழித்து மதிமுக நிர்வாகிகள் சட்டமன்றத்திற்கு சென்றிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தனை ஆண்டுகால அரசியல் அனுபவமும், பேச்சாற்றலும், நடைப் பயணங்களும், வளர்ச்சிகளும், வீழ்ச்சிகளும் என்று சந்தித்த வைகோ தற்போது தீவிர அரசியலில் இருந்து சற்று விலகி இருக்கிறார் என்று அவருடைய தம்பிகளால் கூறப்படுகிறது. அதே சமயம் கட்சியின் நிர்வாகிகளிடம், அடுத்து கட்சிக்கு தலைமை யார் என்ற கேள்வியும் ஒருசேர தொடங்கியிருக்கிறது. இதனால் பல்வேறு மாவட்ட செயலாளர்கள், மாவட்ட முன்னணி நிர்வாகிகள் பலரும் தலைவருக்கு பிறகு கட்சியை வழி நடத்துவது யார் என்ற கேள்வியை பெரிதாக எழுப்பி வருகின்றனர். இதில் சிலர் கட்சியின் தலைமைக்கு கேட்கும்படி தங்கள் கருத்துக்களை பதிவு செய்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் வைகோவின் மகன் துரை வைகோ தற்போது பொது வெளியில் அதிக அளவில் வெளிப்படத் தொடங்கி இருக்கிறார். மேலும் இவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திலும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது அதைவிட அதிகமாக பொதுவெளியில் செயல்படத் தொடங்கியிருக்கிறார் துரை வைகோ, இவ்வாறு 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு மாவட்ட நிர்வாகிகள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் தனது முகத்தை பதிவு செய்து வந்துள்ளார்.

இப்படி துரை வைகோவின் அரசியல் வரவு ஒரு சிலரை கைதட்டி வரவேற்க செய்திருக்கிறது, ஒரு சிலரை கோபமுகத்தோடு வெறுக்க செய்திருக்கிறது. தலைவருக்குப் பிறகு கட்சியை வழிநடத்தவும் செயல்படுத்தவும் வலுவான தலைமை வேண்டும் என்று எதிர்பார்த்திருந்த தொண்டர்கள் மத்தியில் துரை வைகோவின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் கட்சி மாறலாம் என்று கணித்து இருந்த சில மாவட்ட செயலாளர்கள் கூட அண்ணன் துரை வைகோவின் பின்னால் அணிதிரள்வோம் என்று வீர முழக்கங்கள் எழுப்பி இருக்கின்றனர்.

அதேசமயம் குடும்ப அரசியலுக்கு எதிராக களம் கண்டவர் தான் வைகோ, தன் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று கூறிய வைகோவே தற்போது தன் மகனை அரசியலில் களமிறக்கி உள்ளார். இது நல்ல உதாரணம் கிடையாது. மேலும் அவர் கட்சியில் எந்தவித பொறுப்பும் வகிக்கவில்லை அப்படியிருக்க அவரை முன்னிலைப்படுத்தி கட்சி செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எதிர்ப்புக் குரல்களை பதிவு செய்து வருகின்றனர் மற்றொரு தரப்பினர்.
தமிழ்நாடு முழுவதும் ஒரு பகுதி ஆதரவாகவும் ஒரு பகுதி எதிர்ப்பாகவும் துரை வைகோவின் அரசியல் தொடக்கம் அமைந்திருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம் துரை வைகோ அரசியலில் எந்த அளவுக்கு நிலைத்து நிற்பார் என்று.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.