வாழ்வாதாரத்தை அழிக்கும் வனத்துறையினர் ! பட்டியலின மக்கள் குற்றச்சாட்டு !
காட்டுப்பகுதியில் வசிக்கக் கூடிய பளியர் இன மக்களை அப்புறப்படுத்தும் நோக்கத்தோடு காடுகளில் தீ வைத்து எரித்து விட்டு தீயை அணைக்க சொல்லி வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்தும். குடிநீர் குழாய்களை வெட்டி அகற்றிவிட்டு வீட்டை காலி செய்ய சொல்லி மிரட்டி வருவதாக வனத்துறையினர் மீது குற்றச்சாட்டு.
தேனி மாவட்டம் போடி தாலுகா, அகமலை, கரும்பாறை பகுதி சடையன் மகன் பாண்டியன் என்ற பாப்பையா காடுகளை சார்ந்து வாழும் பளியர் பட்டியல் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்.
கடந்த 5 தேதி மாலை 5.31 மணிக்கு கரும்பாறை கிராம எல்லைக்குட்பட்ட தேனி வனத்துறையினர் பாப்பையா என்பவருக்கு போன் செய்து காடுகளில் தீப்பற்றி எரிகிறது அதனை உடனே சென்று காட்டு தீயை அணைப்பது போன்று வீடியோ எடுத்து அனுப்புமாறு கூறினார்.

உடனடியாக பாப்பையா என்னிடம் சாதாரண போன் உள்ளது என தெரிவித்தார். அப்பொழுது வனத்துறையினர் பக்கத்து தோட்டக்காரர் முத்துகிருஷ்ணனின் தொலைபேசியை பயன்படுத்தி கொள்ளுமாறு கூறியதின்படி இரண்டு பேரும் சேர்ந்து வீடியோ எடுத்து வனத்துறையினருக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் வனத்துறையினர் பாப்பையாவை வனத்தில் தீ வைத்தது நீ தான் என உன்னை கைது செய்ய வேண்டும் உன்னுடைய ஆதார் கார்டை எடுத்து வா என மிரட்டினர்.
அதற்கு பாப்பையா நான் தீ வைக்கவில்லை என தெரிவித்தும், பாப்பையாவை வனத்துறையினர் அழைத்து சென்று போதை வஸ்துக்களை பயன்படுத்த சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.
அதற்கு நான் எந்த விதமான போதை வஸ்துகளும் அனுபவிக்க மாட்டேன் என தெரிவித்த அவரை வனத்துறையினர் 3 மணி நேரம் விசாரணை என்ற பெயரில் அலைக்கழிப்பு செய்தனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பின்னர் வனப்பகுதியில் பாப்பையா விவசாயத்திற்கு பயன்படுத்தும் குடிநீர் ஆதார பைப்புகளை முழுவதையும் வனத்துறையினர் துண்டு துண்டாக வெட்டி விட்டனர்.
தொடர்ந்து பாப்பையாவை தேனி வனசரக அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்து நீ தான் காட்டுக்குள் தீ வைத்தாய் என எழுதி வாங்கினார்.
மேலும் அவரிடம் வனப்பகுதியில் இருந்து உங்களை அப்புறப்படுத்தவே இது போன்று தொடர்ந்து அச்சுறுத்தல் செய்வோம் என மிரட்டி உள்ளனர்.
தொடர்ந்து வனப்பகுதி வசிக்கக்கூடிய பளியர் இன மக்களை அப்புறப்படுத்த அவர்கள் மீது பொய் வழக்கு போட முயற்சி செய்தல், குடிநீர் பைப்புகளை உடைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வரும் வனத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பளியர் இன மக்கள் புகார் மனு அளித்தனர்.
— ஜெய்ஸ்ரீராம்.