அரசு வேலைவாய்ப்பளிக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சி..!

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

அரசு வேலைவாய்ப்பளிக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சி..!

எம்.ஏ தமிழ் இலக்கியம் படித்திருக்கும் இவர், துப்பாக்கி சுடும் போட்டியில் தமிழக அளவில் தொடர்ந்து 3 வருடங்கள் முதலிடமும், அகில இந்திய அளவில் ஓர் தங்கப்பதக்கமும் தேசிய அளவில் வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளார். சர்வதேச துப்பாக்கி சுடும் கழகத்தில் நடுவர். நேஷனல் பைபிள் அசோசியேஷன் ஆஃப் இந்தியா பயிற்சியாளர். திருச்சி மாவட்டம் ரைபிள் கிளப் பொதுச் செயலாளர். தேசிய துப்பாக்கி சுடும் போட்டிகளில் ரேஞ்ச்ஆபீசர் மற்றும் நடுவராக இருந்து போட்டிகளை நடத்தி வருகிறார். தற்போது திருச்சியில் ஆச்சார்யா ஷூட்டிங் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் ஆக கடந்த நான்கு வருடங்களாக பயிற்சியளித்து வரும் இரத்தினம் அசோக் அவர்களை சந்தித்து உரையாடினோம்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

துப்பாக்கி சுடும் பயிற்சி எப்போதிலிருந்து ஆரம்பித்தது அதன் வரலாறு பற்றி கூறுங்கள்..?
“நம் நாட்டின் மீது எதிரிகள் படையெடுக்கும் போது அவர்களை எதிர்க்கும் ஆற்றலை பொது மக்களுக்கும் பெற வேண்டும். அதற்காக பொதுமக்களுக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கவேண்டும்” என இந்திய பாராளுமன்றத்தின் சபாநாயகராக இருந்த ஜீ.வி.மாவ்லங்கர், 1952ம் ஆண்டு ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். தீர்மானமானது 1958ம் ஆண்டில் தான் பாராளுமன்றத்தில் நிறைவேறியது.
மாவட்ட ஆட்சியர் தலைவராகவும் எஸ்.பி துணைத் தலைவராகவும், கொண்ட இப்பயிற்சி மையமானது சென்னை, விசாகப்பட்டினம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டத்தில் முதற்கட்டமாகவும் திருச்சி மதுரை போன்ற பகுதிகளில் இரண்டாம் கட்டமாகும் துப்பாக்கி சுடும் பயிற்சி பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டது. இப்படித்தான் துப்பாக்கி சுடும் பயிற்சியானது தொடங்கியது.

துப்பாக்கி சுடும் பயிற்சி உங்களுக்கு எப்படி கிடைத்தது ?
அந்த காலத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி சாதாரண மனிதர்களுக்கு அவ்வளவு எளிதில் கிடைக்காது. கிடைக்காது என்பதைவிட அந்த பயிற்சிகளை பார்ப்பதற்கான அனுமதி கூட கிடையாது. பெரிய பெரிய பணக்காரர்களுக்கும் பண்ணையார்கள் பெரும் முதலாளிகளுக்கு மட்டும் இந்த பயிற்சி வழங்குவார்கள்.

3
இரத்தினம் அசோக்
இரத்தினம் அசோக்

திருச்சியில் உள்ள ஒரு துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் என்னை சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டார்கள். நான் தினமும் பயிற்சி மையத்தின் வாசலில் நின்று கொண்டு பயிற்சிக்கு வருபவர்களை எல்லாம் பார்த்துக் கொண்டு இருப்பேன். இப்படியாக மூன்று வருடங்கள் சென்ற நிலையில் ஒருவர் இரக்கப்பட்டு என்னை பயிற்சியில் சேர்த்துக் கொண்டார். முதல் முறையாக சுடும்போதே 100/84 பாயிண்ட் எடுத்தேன். அங்கே நீண்ட நாட்கள் பயிற்சி எடுத்தவர்கள் கூட 100/60 தாண்டவில்லை என்பதால் அதன் பிறகு அவர்களால் என்னை தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. 1989ம் வருடம் நடைபெற்ற போட்டியில் பரிசினை தட்டி வந்தேன். தொடர்ந்து 1994ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக பரிசினை தட்டிக் கொண்டு வந்தேன்.

4

துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உருவானது எப்படி..?
துப்பாக்கி சுடும் வீரராக இருந்த நான் பின்னர் பயிற்சியாளராக மாறிவிட்டேன். அப்புறம் ரேஞ்சராவும் இருந்தேன். பயிற்சி மையத்தை (ரைபிள் கிளப்) நானும் சிலரும் சேர்ந்து நடத்தி கொண்டு இருந்தோம். அதை சரியாக நடத்த முடியாததால் 2000ல் அதை மூடிவிட்டோம். பின்னர் மாவட்ட ஆட்சியர் சவுண்டையா இருந்த நேரத்தில் அவர் அனுமதியோடு, அவரது தலைமையில் 2009ம் வருடம் ஆர்.பி‌‌.எப் ரேஞ்சரில் மறுபடியும் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தோம். ரொம்ப நல்லா போயிட்டு இருந்தது. அந்த காலகட்டத்தில் தொடர்ந்து ஐந்து வருடங்கள் நிறைய பரிசுகளை வாங்கிட்டு இருந்தோம். ஒராண்டில் பத்திற்கு மேற்பட்ட பரிசுகளை தட்டி வந்தோம். என்றாலும் சரியான முறையில் எங்களுக்கு உதவி கிடைக்காததால் படிப்படியாக அந்த மையத்தை மூடும் நிலை ஏற்பட்டது. இப்போது ஆச்சார்யா ஷூட்டிங் அகாடமி என்ற பெயரில் 2017ல் இந்த பயிற்சி மையத்தை தொடங்கினேன்.

துப்பாக்கி சுடும் பயிற்சியில் சேர்வதற்கான தகுதிகள் என்ன…?
பத்து வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள் தொடங்கி, வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் பயிற்சி தருகிறேன். பயிற்சியில் சேரவேண்டும் என்றால் காவல்துறை சான்றிதழ் வேண்டும். குழந்தைகளுக்கு அந்த சான்றிதழ் தேவையில்லை. பெற்றோர்கள் ஒப்புதல், உடல் தகுதி இரண்டும் போதும்.

பிற பயிற்சி மையத்தை காட்டிலும் 10 மடங்கு குறைவான கட்டணத்தில் தான் நாங்கள் பயிற்சியளிக்கிறோம். ஆர்வம் உள்ள ஏழை மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் என்றால் மானிய உதவியோடு வெப்பன்ஸ், டார்கெட்கார்டு குண்டு இதெல்லாம் கூட ஏற்பாடு செய்து தருகிறேன். திறமையானவர்கள் என்றால் உதவி செய்ய தயாராக இருக்கிறோம்.


பயிற்சி நேரம் எப்போது..?
மாலை ஐந்து மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை தினமும் பயிற்சி தருகிறோம். ஞாயிறுகிழமைகளில் காலை எட்டுமணியிலிருந்து மதியம் ஒரு மணி வரை பயிற்சி நடைபெறுகிறது.

பொதுவாக பயிற்சி நடக்கும் போதும் ஏதும் அசம்பாவிதம் ஏற்படுமா..? மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கும்…?
இது வரை 380 மாணவர்களுக்கு மேல் பயிற்சி பெற்று இருக்கிறார்கள். எந்த அசம்பாவிதமும் நடந்ததில்லை. டார்கெட்கார்டு மாட்டுவது கூட மேன்வல் செயல்பாடு கிடையாது. மிசின் தான். அதோடு அவர்களுக்கான முதல் வகுப்பே பாதுகாப்பு முறைகள் தான்.
ஒரு பிள்ளைக்கு ஒரு டிரைனர் கட்டாயமாக இருப்பதால் மிகவும் பாதுகாப்பான பயிற்சி பள்ளியாக இந்த அகாடமி இருக்கிறது. நேஷனல் ரைபிள் கிளப் அசோசியேஷனில் பயிற்சி சான்றிதழ் பெற்ற டிரைனர் தான் பயிற்சி கொடுக்கிறார்கள். நான் இன்டர்நேஷனல் ஸ்போர்ட்ஸ் பெடரேசனில் பயிற்றுனருக்கான சான்றிதழ் பெற்றிருக்கிறேன். நானுமே முதன்மை பயிற்றுனராக பயிற்சி தருகிறேன். இது மட்டுமல்லாமல் நடுவராக இருக்கும் தகுதிக்கான சான்றிதழும் பெற்றிருக்கிறேன்.

நரிக்குறவர்கள் இயற்கையிலேயே வேட்டுவ குணம் உடையவர்கள். அவர்களுக்கு பயிற்சி அளித்தால் இந்தியாவிற்கு நிறைய பதக்கங்கள் கிடைக்கும் தானே..?
சமீபத்தில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கூட அந்த கருத்தை முன்வைத்தார். அதற்கான வேலைகள் நடக்கிறது. என்றாலும் கூட அவர்கள் துப்பாக்கியை சுடும் முறை வேறு. நாம் துப்பாக்கி சுடும் முறை வேறு. அவர்கள் துப்பாக்கியில் பால்ரஸ் போன்ற குண்டுகளை பயன்படுத்துவார்கள் ஒரே நேரத்தில் 50 முதல் 400 குண்டுகள் வரை போட்டு சுடுவார்கள் இது பரவலாக ஒரு வட்டவடிவில் வெளியேறி மரத்தின் கிளையில் உள்ள அத்தனை பறவைகளையும் தாக்கும். நம்முடைய துப்பாக்கியில் ஒரே ஒரு குண்டுதான் போட்டு சுடுவோம். இது குறிப்பார்த்து சுடும் முறை. அது ஒரு டார்கெட் கார்டில் உள்ள வட்டவடிவ கோட்டின் உள்ள நடுப்புள்ளியை குறிவைத்து தாக்கும். அந்த முறையில் சுடுவதற்கு நரிக்குறவர்கள் பயிற்சி பெற வேண்டும்.

எந்த மாதிரியான துப்பாக்கிகளை பயன்படுத்துகிறீர்கள்…?
10 மீட்டர் வரை பாயும் பேசிக் லெவல் ஏர்கன் தான் முதற்கட்ட டிரைனிங்கிற்கு பயன்படுத்துகிறோம். இந்த துப்பாக்கியை மாநில அளவிலான போட்டிகளில் பயன்படுத்தலாம். அதற்கடுத்த தேசிய அளவிலான போட்டிகளுக்கு பீஸ்ட்சைடு ஏர்கன் பயன்படுத்துகிறோம். பாயிண்ட் 177 மாடல் மட்டும் பயன்படுத்துகிறோம்.

ஒரு நிமிடத்திற்கு 600 வேகம் மட்டுமே பயன்படுத்துகிறோம். பெரும்பாலும் 500 வேகம் தான். 10 மீட்டர் இடைவெளியில் பாயும். ஏர் சவுண்ட் கூட குறைந்த அளவில் தான் பயன்படுத்த வேண்டும். இதனை நாங்கள் முறையாக கடைபிடிக்கிறோம். எங்கள் பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பதக்கங்கள் வாங்கி வந்து உள்ளனர்.


இந்த விளையாட்டிற்கு அரசின் அங்கீகாரம் எப்படி உள்ளது..?
பொருளாதாரம் சார்ந்த எந்த உதவிகளையும் அரசு செய்வதில்லை. ஆனால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் போலீசார் கண்காணிப்பில் தனியார் தான் இதை நடத்துகிறது. முன்பெல்லாம் அரசு வேலை கிடைக்காது. ஆனால் இப்போது விளையாட்டுத் துறை மூலமான வேலைவாய்ப்புகளில் (SPORTS QUOTA) துப்பாக்கி சுடும் போட்டியும் சேர்க்கப்பட்டுள்ளதால் 2% லிருந்து 5% வரை அரசு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. வெற்றிப் பெற்றவர்களுக்கு பணமுடிப்பும் கிடைக்கிறது. தமிழ்நாடு அளவில் வென்றால் ரூ.3 லட்சம் வரை பரிசு பணம் கிடைக்கிறது.

மேலும் இந்த விளையாட்டில் வெற்றி பெற்றவர்கள் எந்த வரியும் இல்லாமல் வெளிநாட்டில் இருந்து துப்பாக்கிகளை இறக்குமதி செய்யலாம். அதோடு திறமை இருந்தால் புரவுண்சார்ட் லைசென்ஸ் எடுத்தால் ரூ.18 லட்சம் மதிப்புள்ள துப்பாக்கியை வெறும் ரூ.3 லட்சத்தில் வாங்க முடியும். இதன் மூலம் ஒருவர் வருடத்திற்கு மூன்று துப்பாக்கிகள் வாங்க முடியும்.
துப்பாக்கி சுடும் போட்டியில் இந்த முறை இந்தியாவிற்கு பதக்கம் வாங்கித் தந்ததால் அரசின் கவனம் இதன் மீது விழுந்துள்ளது. இந்தியாவில் தமிழ்நாட்டின் பங்கு சிறப்பாக உள்ளது. உலகளவில் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்களில் 15 பேர் இந்தியாவில் உள்ளனர். அதில் தமிழகத்தில் மட்டும் 11 பேர் உள்ளனர். இதற்கு முன் ஹாக்கிக்கு கொடுத்த அக்கறையை தற்போது துப்பாக்கி சுடும் விளையாட்டிலும் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. நாடு முழுவதும் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கும் திட்டம் உள்ளது. இன்னும் நடைமுறைபடுத்தவில்லை என்றாலும் முன்னெடுப்பு உள்ளது

-காவியசேகரன் செல்வி

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.