பிரபல இளைஞர்கள் பட்டையை கிளப்பும் கவியாட்டம்

0

தூங்காத கண்ணொன்று….

மெர்குரி விளக்குகளின்
மஞ்சளொளி பூசிய
சாலையின் ஓரம்
நீட்டி நெளித்து
ஆழ்ந்த நித்திரையினை
அணைத்தபடி
செம்பழுப்பு நிற நாயொன்று

2 dhanalakshmi joseph

நேற்றைய மனிதர்களோடு
கோபித்துக் கொண்டதுபோல்
முகம் திருப்பிக் கொண்ட சூரியன்
சமாதானத்திற்கு வர
இன்னும் இருக்கிறது
நான்கு மணி நேரம்

சுவற்றிலொரு பல்லி
எதைக்கண்டோ உச்சு’ கொட்டுகிறது
எதிரிலிருந்த கொசுவிற்கு
சரியில்லை சகுனம்

- Advertisement -

- Advertisement -

பதிலுக்கு சிரிக்கத் தோன்றவில்லை
முன்னிரெண்டு எத்துப்பற்களை
உதட்டை இழுத்து மூடியிருக்கலாம்
ரசனையற்று இருக்கிறது
மாமாவின் புகைப்படம்

கடைசிப் பக்கம் படித்துவிட்டால்
கதை முடிந்துவிடும் இன்னும் கொஞ்சம்
உயிரோடிருக்கட்டும் அந்தக் கதாபாத்திரம்

துரத்தியனுப்பும் குறிக்கோளோடு
தூக்கத்திற்கு காவலிருக்கிறது
ஈசல் மொய்ப்பாகும் எண்ணங்கள்

விழித்துக் கொண்டிருக்கும்
ஒரு மனிதனைத் தாங்க முடியாமல்
திணறுகிறது அந்த நள்ளிரவு

– கனகா பாலன், சென்னை

 

 

அதிதனே…!

குமிழியிட்டுக் குமிழியிட்டுக்
குதித்தெழும் உணர்வுகளைக்
குறைத்து ஒளித்தலே
பெரும்பாடெனக்கு…

குற்றமுள்ள மனமே
குறுகுறுக்கும் என்பது போல்
குறு முனகலிலும் உன் பெயரே
எதிரொலிக்கிற தெனக்கு…

குழிவோ சுழிவோ
குறிப்போ எதுவோ
குவிந்து விடுகிறதுன்
நினைவுகளெனக்கு…

குழைவதும் உழல்வதும்
குளிகையால் தீருமோ
குளறுபடி குறையுமோ
மீட்சியுண்டோவெனக்கு…

எப்போதுமே
குமிழியிட்டுக் குமிழியிட்டுக்
குதித்தெழும் நின் நினைவலைகளைக்
குறைத்து ஒளித்தல் மட்டுமே
பெரும்பாடுதானெனக்கு…
-தேவி குணாபாலா வழக்கறிஞர், விருதுநகர்

 

4 bismi svs

என்னவளே… அடி என்னவளே…

தாழிடப் படாமல் மூடிய கதவை
காற்று வந்து மெல்ல தட்டிவிட்டு
செல்லும் போதெல்லாம்
என் நெஞ்சில் கண்மணியே
உந்தன் கொஞ்சல் ஞாபகம்

பூத்து சிரிக்கும் கொய்யா பூவை
தேன் சிட்டு வந்து முத்தமிட
மனம் மகிழும் கொய்யா மணத்தில்
கோதையே உந்தன் தேகவாசம் ஞாபகம்

கனிந்து தொங்கும் பப்பாளி பழத்தை
காக்கையொன்று கடித்து சுவைக்க, வெடித்து
சிதறிய சிவப்பு நிறத்தில் சின்னவளே
உந்தன் சிற்றிடை ஞாபகம்

பால்நுரை தெறிக்க ஓடும் நதியில்
துள்ளும் மீன் கெண்டையொன்று
எதிர்நீச்சலடித்து பாய்ந்து வர
தூயவளே உந்தன்
பௌர்ணமி முகம் ஞாபகம்

மானோ மயிலோ
மரகதச் சிலையோ
கலையோ அழகோ
கவிதை மொழியோ
கண்ணே மணியே யென
ஓசை வந்ததிசையெல்லாம்
திரும்பி பார்க்கிறேன் பவளக்கொடியே
உந்தன் காதல் மொழி ஞாபகம்

ஞாபகத்தை சாபமாக்கி சங்கமித்தாய்
எங்கோ மணமுடித்து
சாவில் கூட உன் ஞாபகம்
தசையெறிந்து சாம்பலாகும் வரை
யாருக்கு தெரியும் சாம்பலில் கூட
தொடரலாம் உன் ஞாபகம்..
– ஜீவா விவேகாநந்தன்,
சென்னை

அழகே உன்னை…

வானத்தில் வண்ணம் தீட்டும்
கண்களுக்குள் ஜொலிக்கிறது
கருப்பு வெள்ளை நட்சத்திரங்கள்

இதழில் கசிந்த முத்தங்களின்
வண்ணத்தை பூசிக்கொண்டு
உதிர்கிறது உன் கூந்தல் பூக்கள்

மலைச்சாரலில் கலந்து மழையாய்
பொழிகிறது உன் சிரிப்பின்
சாரல் துளி

சமநிலையில்லா பள்ளத்தாக்கில்
காற்றோடு நடனமாடுது
உன் தலைமுடியின் கால்கள் தவழும்
மேகத்தை விளையாட
இழுத்து உன் நெற்றி பொட்டை
அதன் கன்னத்தில் வைக்கிறாய்

உன் மூக்குத்தி திருகாணியில் திருகி
திரும்புகிறது இயற்கையின் ஆன்மா…

– கவிஞர் பாக்கி, எஸ்.பி.பட்டினம்

போர்வையை
மடித்து எடுத்துச் சென்றுவிட்டார்கள்
குளிர்காய்ந்தவர்கள்…..
நிர்வாணத்தை பிள்ளைக்கு
கொடுத்துவிட்டு….
அனாதை குழந்தை
– ஸ்ரீவாரி, திண்டுக்கல்

அம்மி மிதித்து
அருந்ததியை பார்த்தேன்
அவளையும் பிடித்திருந்தது..!
– சுகுமார் கவி, மைசூர்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.