“அழகை பராமரிப்பதும், திறமையை வளர்த்துக் கொள்வதும் அவரவர் கையில்..” “திருச்சியின் புன்னகை”யுடன் ஒரு சந்திப்பு..!
“அழகை பராமரிப்பதும், திறமையை வளர்த்துக் கொள்வதும் அவரவர் கையில்..” “திருச்சியின் புன்னகை”யுடன் ஒரு சந்திப்பு..!
சமீபத்தில் திருச்சியில் “தி மேஜிக் டச்” என்ற அமைப்பின் சார்பில் ‘மிஸ் திருச்சி’ மற்றும் ‘மிஸஸ் திருச்சி’ என்ற அழகிப்போட்டி நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஜோ மைக்கேல், ‘பிக்-பாஸ்’ புகழ் திரைப்பட நடிகை சனம் செட்டி, ஃபேஷன் கொரியோகிராபர் விக்னேஷ் சந்திரசேகர் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்ற இப்போட்டியில் திருச்சியை சேர்ந்த சுகன்யா நேசகுமாரி “மிஸஸ் பியூட்டி ஸ்மையில் 2022 (MRS Beautiful Smile 2022) என்ற பட்டத்தினை வென்றார். ‘மனத்தின் அழகு முகத்தின் புன்னகையில் தெரியும்’ எனக் கூறும் புன்னகையால் வென்ற சுகன்யாவை சந்தித்து பேசினேன்.
“திருமணத்திற்கு முன்பு, எம்.பி.ஏ முடித்த நான், அது சம்பந்தமான எந்த வேலைக்கும் போகாமல், புதுக்கோட்டையில் உள்ள ஒரு லோக்கல் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றினேன். திருமணம் ஆனதும் கணவருடன் திருச்சியில் செட்டிலாகிவிட்டேன். இரண்டு குழந்தைகள்.
இன்றைய காலகட்டத்தில் வெறும் பிள்ளைகள் வளர்ப்பு மட்டும் ஒரு தாயின் கடமையில்லை. அவர்களுக்கு நாம் ரோல்மாடலாக இருக்க வேண்டும் என்று உணர்ந்தேன். அதோடு குடும்ப பொருளாதாரத்திலும் கணவருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ‘ஈவண்ட் மேனேஜ்மென்ட்’ செய்துக் கொண்டு இருக்கிறேன். மணப்பெண் அலங்காரம் சிறந்த முறையில் செய்து தருவதும் என் நோக்கம்.
நண்பர் ஒருவர், ‘திருச்சியில் அழகிப்போட்டி நடக்கிறது. நீ கலந்துக் கொள்’ என்று பத்திரிகையில் வெளிவந்த விளம்பரத்தினை காட்டி கூறினார். ‘இதில் கலந்துக் கொள்வதால் தொழில்ரீதியான வாய்ப்புகள் வலுப்படும்’ என்றும் கூறினார். இதையடுத்தே போட்டியில் பங்கேற்க முடிவு செய்தேன். போட்டிக் குழுவினர் இரண்டு நாள் முழுமையாக பயிற்சியளித்தனர். உடல்மொழி எப்படி இருக்க வேண்டும். எப்படி நடப்பது, திரும்புவது, முகத்தை எப்படி வைத்துக் கொள்வது, மற்றவர்களை பார்க்கும் கண்பார்வை என்பது போன்ற பல பயிற்சிகளை அளித்தனர். சென்னை, மும்பை என்று அழகி போட்டிகளை நடத்திய அனுபவமிக்கவர்கள் பயிற்சியாளர்கள் என்பதால் அவர்கள் கொடுத்த உற்சாகத்தால் என்னிடம் இருந்த சிறு பயமும் போய்விட்டது.
அழகி போட்டிகளில் அழகு தான் முதன்மை என்றபோதிலும் அறிவு சார்ந்த கேள்விகளும் கேட்கப்படும். என்னிடம், ‘பாலின சமத்துவத் துடன் பிள்ளைகளை வளர்ப்பது எப்படி.? என்ற கேள்வி கேட்கப்பட்டது. “பிள்ளைகளுக்கு எதிர்பாலின உணர்வை புரிந்துக் கொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும். பெண் பிள்ளைகளுக்கு ஆண்பிள்ளைகள் மரியாதை கொடுக்கவேண்டும்” என பதிலளித்தேன். நிறைவில் “மிஸஸ் பியூட்டி ஸ்மையில் 2022” பட்டம் வென்றேன்.
அழகிப்போட்டியில் கலந்து கொள்கிறேன் என்று சொன்ன போது, ‘இது தேவையா..? என்றனர் சிலர். கலந்துக் கொண்ட பிறகு, ‘பரவாயில்லை.. ரொம்ப நல்லாவே பர்ஃபாம் செய்த…’ என்ற பாராட்டுக்கள் குவிந்தது. சிறு வயதிலிருந்து என் தந்தை கொடுத்த தன்னம்பிக்கை, என் கணவரின் ஒத்துழைப்பு, உற்சாகம் கூட இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
திருமணத்திற்கு பிறகு நம் அழகும் திறமையும் குறைவதால் வாய்ப்புகளும் குறைந்து விடும் என்றெல்லாம் நினைக்கக் கூடாது. அழகை பராமரிப்பதும் திறமையை வளர்த்துக் கொள்வதும் நம் கையில் தான் இருக்கிறது. சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என்றால் பெண்கள் தாழ்வுமனப்பான்மையை புறந்தள்ளி, ‘என்னாலும் முடியும்’ என்ற எண்ணத்துடன் வெளியே வர வேண்டும்” என்றார்.
-காவிய சேகரன்