எதை நோக்கி பேனாவை கையிலெடுத்தீர்கள்?
எடுக்கவில்லை. கொடுத்தார்கள். ஆனால் நான் கெட்டியாக பிடித்துக் கொண்டேன். சமகால என் வகுப்புத் தோழர்களுக்கு, எம் குடும்ப உறுப்பினர்களுக்குக் கிடைக்காத இலக்கியப் பயணத்தில் நான் காலடி வைக்கத் தொடங்கியதும் இந்தத்துறையில் வெற்றி எளிதல்ல என்கிற விமர்சனமே முதலில் வந்தது. பாராட்டுகிறவர்களிடம் மட்டும் பயணச்சுவடுகளைப் பகிர்ந்தேன். எழுத்தாளன் என்கிற அடையாளம் கிடைத்தபிறகு பயணம் எளிதானது. எந்தப்பறவையும் கிளையில் அமர்ந்திருக்கும்போது இந்தக்கிளை உடைந்துவிடுமோ என்று பயப்படுவதில்லை. காரணம் அது அமர்ந்திருப்பது கிளையை நம்பி அல்ல. தன் சிறகை நம்பியே. அப்படித்தான் எழுதுகோல் எனக்கு கிளை. என் இலக்கு என் நம்பிக்கை.
உங்கள் இலக்கு விருது பெறுதலா?
விருதுகள் எனக்கு எப்போதுமே எனக்கு இலக்கு அல்ல. அவை மட்டுமல்ல.. கவிஞர், கவிமுரசு, கவி ஓடம். என்ற முன்னோட்டிலும்கூட எனக்கு உடன்பாடில்லை. அவையெல்லாம் மாலை மாதிரி, அடுத்தவர் இட்டால்தான் மரியாதை. ஆனால் பெயர் ஆடை மாதிரி. அதை நாம்தாம் சரியாக அணிந்து கொள்ள வேண்டும். நான் மாலைகளைவிட ஆடைக்கு மதிப்புத் தருபவன். இலக்கு பற்றி கேட்கிறீர்கள் அதற்குள் வருகிறேன். சமகால இளைஞர்களின் காதல் கவிதைகளில்தாம் எம் பயணமும் தொடங்கியது. ஆனால் அதை மடைமாற்றம் செய்ய பலர் ஏணியாகவும், தோணியாகவும் இருந்தனர். இளையோருக்கு ஆளுமை மாதிரிகளை அடையாளப்படுத்தும் இலக்குத் தெளிவில் என் எழுத்தை மாற்றினேன். என் வாழ்நாளில் ஒரு இலட்சம் ஆளுமை மாதிரிகளை இளையோருக்குள் கொண்டுசெல்லும் தெளிவோடு இயங்குகிறேன்.
தன்னம்பிக்கையுடன் எழுதுவது மட்டும்தான்
உங்கள் எழுத்துப்பணியா?
எழுத்தாளனை எப்படிச் சுருக்குவீர்கள். அவன் உடலால் ஆனவனல்ல.. மனத்தால் வாழ்பவன். அவன் ஏகாந்த பயணி. எனது முல்லை பெரியாறு நூலில் கர்னல் பென்னிக்குக் முதன்மையாகி நின்றார். கிறித்தவர்கள் பற்றிய தொடரில் அழியாத் திருஉடல் வரம் பெற்ற புனிதர்கள் முன்நின்றனர். கிடைக்கிற வாய்ப்புகளில் இந்தப் பிரபஞ்சத்தில் நகமும் சதையுமாக உலவிய மாமனிதர்கள் அணிவகுப்பர். புத்தரின் வினாவுக்கான பதில் அரசமரத்தில் இருந்து கிடைக்கவில்லை. அவர்தேடலில் இருந்துதான் கிடைத்தது. அரசமரத்திற்கடியில் இருந்து கிடைத்திருந்தால் அதற்கு கீழ் அமர்கிற எல்லோருக்குமே கிடைத்திருக்க வேண்டும். புத்தரின் தேடல்தான் போதிமரம். அதுபோல நம்மைச் சுற்றி இருக்கிற மனிதர்களே நமக்கு போதிமரங்கள். அந்த போதிமரங்களைப் போற்றுவதே போதுமானது. அதுதான் எனது பணியெனக் கருதுகிறேன்.
நீங்கள் போதிமரமாய் புகழ்ந்து
எழுதுபவர்கள் மாறிவிடுகிறார்களே?
சமகாலத்தில் உள்ள மனிதர்களை எழுதும்போது அந்தச் சிக்கல் வருவது இயற்கை. எல்லாமுமே சமகால நியாமின்றி வேறில்லை. நாம் உயரத்தூக்கிப் பிடிப்பவர்கள் வழி மாறலாம். நிறம் மாறலாம். எனவே மனிதர்களைவிட அவர்களின் பண்புக்கே நான் முதன்மை தந்து எழுதுகிறேன். நேர்மைக்காக ஒருவரை அடையாளப்படுத்துகிறேன்.. அவர்அரசியலில் தவறான முடிவெடுக்கலாம். ஒருவரின் துணிச்சலைப் போற்றுகிறேன் பிற்காலத்தில் அவர் புகழுக்கு இரையாகலாம். எனவே நான் தனி மனிதர்களைப் பொற்றுவதில்லை. அவரவர்அந்த நேரத்தில் செய்த செயல்களுக்காகவே அடையாளப்படுத்துகிறேன். அவர்கள் சமூக நலனுக்கு எதிராக இளையோரை தவறாக வழி நடத்தத் தொடங்கினால் முதலில் அவரை விமர்சிப்பது என் எழுதுகோலே.
உங்கள் வெற்றிக்கு காரணம் யார்?
என் உழைப்பும் தேடலும் முதன்மையானது. கிறுக்கல்களை வாசித்து இவர் என் தம்பி “கவிஞர்“ என அந்தக்காலத்தில் தம் நண்பர்களிடம் அறிமுகப்படுத்திய என் மூத்த சகோதரர்ஜோசப்நாதன் முதன்மையானவர். அந்த அங்கீகாரம் என் நம்பிக்கை முட்டைகளை சுற்றியிருந்த பல பாம்புகளிடமிருந்து காத்தது. காதல் கவிதை, நடிகைகளின் முகவரிகள் என ஒரு கையெழுத்துப் பிரதியை அவர் கையில் கொடுத்தபோது, பாராட்டி விட்டு ”புதிதாக முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ள மாணவரின் படைப்பு.. வாழ்த்துவோம் வாசித்தபின்..” என்று எழுதி வைத்த எங்கள் கல்லூரி அதிபர்அருள்தந்தை அன்ட்டோ எனத் தொடங்குகிறது அந்தப்பட்டியல்.
ஒருசேர தாய் தந்தையரை இழந்தபிறகு நான் இருப்பதற்கும் இயங்குவதற்கும் காரணமான அருள்தந்தை சிங்கராயர் எனது வாழ்வில் எத்திசையில் பயணிப்பது என்ற நேரத்தில் தன் விரலை திசைகாட்டியாகத்தந்த அண்ணன் முனைவர் பெஸ்கி என் இலக்கைக் கிழக்காக வழிகாட்டும் என் ஆய்வு நெறியாளர் முனைவர்ஆ.ஜோசப் சகாயராஜ் என்னை அடையாளப்படுத்தி என்னைவிட அதிகமாக என்னை நம்புகிற வெற்றிமொழி வெளியீட்டக நிறுவனர் சகோதரத்தோழன் தமிழ்தாசன் எந்தத் தடையும் இல்லாது என் இலக்கியப் பயணத்தில் தன் அத்தனை விருப்பங்களையும் பலியிட்டுக் கொள்கிற என் இணையர்ஆசிரியை மெர்ரி டயானா, என் மகன் யுகன் அந்தப் பட்டியல் நீண்டது, நான் சிலை என்றால் சிற்பிகள் ஏராளம்… சிற்பி என்றால் ஆசான்கள் ஏராளம்… ஏராளம்…
எப்படி உங்களால் சாதிக்க முடிந்தது?
அப்படியொன்றும் சாதித்துவிடவில்லை நான். ஆனால் நிறைவாக இருக்கிறது என் மனது. போராடும்போது வீண்முயற்சி என்பவர்கள் வெற்றிபெற்ற பிறகு விடாமுயற்சி என்று பாராட்டுவார்கள். என் முகத்துக்கு நேரே என்னை விமர்சிக்காத எவரைப்பற்றியும் கண்டுகொண்டதில்லை. கிடைக்கிற வாய்ப்பை இயன்றவரை பயன்படுத்துவேன். அடுத்தவர் வாய்ப்பைப் பறிப்பதுமில்லை, தடுப்பதுமில்லை. கொடுக்கிற பணியை திறனுடன் செய்வது வழக்கம். அங்கீகாரம் மறுக்கப்படும்போது அந்த இடத்தில் இருந்து நகர்ந்துவிடுவது வழக்கம். என் தரப்பு நியாயத்தை தெளிவுபடுத்துவது, முட்டுக்கட்டையாக நிற்பது,
முணங்குவது, என நேரத்தை விரயமாக்குவதில்லை. காரணம் முணங்குவது அங்கேயே தேங்கும்.. அது சாக்கடையாகும். முழங்குவது ஓடும் நதியாகும். நான் நதியாகவே இருக்க ஆசைப்படுகிறேன்.
தேடல்தான் உங்கள் வாழ்க்கை என்று சொல்லலாமா?
என் வாழ்க்கை அல்ல.. எல்லோர் வாழ்க்கையும் அதுதான். ஊடக கல்வியாளர் மௌலியன் சொல்லுவார் ”செத்த மீன்கள்தாம் ஆற்றோடு போகும்” என்று. தேடல் தான் நம்மை இயக்கும். தேடல் நம்மை வளைக்காது, உடைக்கும் முட்டை உடைவதற்கு இரண்டு வழிகள் தான் இருக்கின்றன. ஒன்று வெளியிலிருந்து உடைக்கப்பட வேண்டும் அல்லது உள்ளிருந்து உடைய வேண்டும். உள்ளிருந்து உடைதலே உயிராக உருப்பெறும். அடுத்திருப்பவரிடமிருந்து கற்றுக் கொள்ளுதல் மிக அவசியமானது. அதற்கான பயணமாக என் தேடல் அமைகிறது.
இளை யோரை அணிதிரட்டுதலே உங்கள் பணியாக இருக்கிறது. அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
உறவுகளில் நெருப்பாக இருங்கள். நெருப்பை அழுக்கால் ஒன்றும் செய்ய இயலாது. எவ்வளவு எதார்த்தமாக இருக்க இயலுமோ அவ்வளவு எதார்த்தமாக இருங்கள். ஆனால் அது உங்கள் ஆளுமையை ஒரு துளி உரசிப்பார்க்கிறது என்றால் சமரசம் செய்யாதீர்கள்.
இரண்டாவது வாசிக்காமல், ஆய்வு செய்யாமல் யாரோ ஒருவர் கத்துவதைத் ”தத்துவம்” என்று எண்ணி நீர்த்துப் போகாதீர்கள். நாளைய சமூகத்தைத் தாங்க எங்களுக்கு தக்கைகள் தேவையில்லை. தூண்கள் வேண்டும். நீங்கள் தூண்களாக உருப்பெற பலப்படுங்கள்.
சந்திப்பு : இப்ராகிம் & பாரத்