மொராய்சிட்டி “ஆக்கிரமிப்பு” செய்தியின் மறுப்பும், எதிரொலியும்..
கடந்த பிப் 25-மார்ச் 9ம் 2022 தேதியிட்ட அங்குசம் செய்தி இதழில், “திருச்சி மொராய்ஸ் சிட்டி ஆக்கிரமிப்பு நீதிமன்ற தீர்ப்பு நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம்”எனும் தலைப்பில் திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள செப்கோ பிராப்பர்ட்டி நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டு வரும் மொராய்ஸ் சிட்டி ஆக்கிரமிப்புகளை குறித்து, “சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அகற்ற உத்தரவு எனும் தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
இந்நிலையில், கடந்த 5.3.2022 அன்று செப்கோ பிராப்பர்ட்டி நிர்வாகம் சார்பில் அவரது வழக்கறிஞர் மூலம் சட்ட அறிவிப்பு ஒன்றை நமக்கு அனுப்பியுள்ளார். அதில், மேற்படி செய்தியில் குறிப்பிட்டது போல், தங்களது நிறுவனம் எவ்வித ஆக்கிரமிப்பும் செய்யவில்லை என்றும், அந்த ஆக்கிரமிப்பை அகற்றிட சென்னை உயர்நீதிமன்றம் எவ்வித தீர்ப்பும் வழங்க வில்லை. அந்தச் செய்தி உள்நோக்கத்துடனும், அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியாகி இருப்பதாகவும், அதற்காக இழப்பீடு வழங்கிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. நாம் வெளியிட்ட செய்தியில், செப்கோ ப்ராபர்ட்டிஸ் நிறுவனத்தின் ஆக்கிரமிப்புகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் “தீர்ப்பின்” அடிப்படையில் அகற்றப்பட்டதாக குறிப்பிட்டது தவறு என்பதையும், அப்படி எவ்வித தீர்ப்பும் இல்லை என அந்நிறுவனத்தின் தரப்பின் கருத்தை அங்குசம் ஆசிரியர் குழு ஏற்கிறது. அதில் எவ்வித உள்நோக்கமும், அவதூறு பரப்பும் எண்ணமும் இல்லை. இனிவரும் காலங்களில் செய்தியை வெளியிடுவதில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவோம்” என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்நிலையில், “அங்குசம் செய்தி” இதழில் குறிப்பிட்டு இருந்த, திருச்சி, கொட்டப்பட்டு கிராமத்துக்கு உட்பட்ட திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை அருகிலுள்ள, பழையபுல எண்.226 வார்டு. ‘AW”,பிளாக்-12, நகரளவை எண். 2 அரசு புறம்போக்கு நிலத்தை செப்கோ ப்ராபர்ட்டி நிறுவனம் ஆக்கிரமித்திருந்தாகவும், அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிட வருவாய்துறை நோட்டீஸ் வழங்கியதாகவும், அந்நிறுவனம், தங்களின் ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றிக் கொள்வதாக ஒப்புதல் அளித்திருப்பதாக இதுதொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வருவாய்துறையினர் அறிக்கை தாக்கல் செய்தனர். தொடர்ந்து அந்நிறுவனம், ஓப்புக்கொண்டபடி ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ளாத காரணத்தால் கடந்த 25.03.2022 அன்று திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார் மற்றும் கோட்டாட்சியர் தவச்செல்வம் மேற்பார்வையில், திருச்சி கிழக்கு தாசில்தார் கலைவாணி தலைமையில் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராமநிர்வாக அலுவலர் ஆகியோர் முன்னிலையில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பினை அகற்றியுள்ளனர். செப்கோ பிராப்பர்ட்டி நிர்வாகம் நடத்திவரும் மொராய்ஸ் சிட்டி வீட்டுமனை விற்பனைப் பிரிவு பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நாம் வெளியிட்ட செய்தியில், எவ்வித உள்நோக்கமும், அவதூறு பரப்பும் வகையிலானது இல்லை என்பதை அங்குசம் செய்தி மீண்டும் நிரூபித்துள்ளது.