18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு
18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு
சென்னை: எம்பி தேர்தல்… மெகா கூட்டணி… இதெல்லாம் விடுங்க… நடக்க போகும் இடைத்தேர்தலில் அதிமுக அரசு தப்புமா என்பதுதான் சந்தேகம் நிறைந்த கேள்வியாக எழுந்துள்ளது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் தொகுதி 18 காலியாக உள்ளது. திருவாரூர் எம்எல்ஏவாக இருந்த கருணாநிதி மற்றும் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏகே போஸ் இவர்கள் மறைந்துவிட்டதால், அந்த தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன.
இதுபோக, ஓசூர் எம்எல்ஏ பாலகிருஷ்ணா ரெட்டி குற்றவழக்கில் தண்டனை பெற்றதால் அவரது பதவி பறிக்கப்பட்டு, அந்த தொகுதியும் காலி என அறிவிக்கப்பட்டது. ஆக மொத்தம் 21 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயத்தில் தேர்தல் ஆணையம் உள்ளது.
213 உறுப்பினர்கள்
ஆனால் இதில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடைபெறும் என நேற்று ஆணையம் தெரிவித்திருந்தது. இப்போது பிரச்சனை என்னவென்றால், தமிழக சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 234. இதில் 21 உறுப்பினர்கள் இல்லை. 19 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டனர். திருவாரூர், திருப்பரங்குன்றம் உறுப்பினர்கள் மறைவால் அவை காலியாக உள்ளன. ஆக மொத்தம் தற்போது உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை 213.
பெரும்பான்மை பலம்
பெரும்பான்மை பலத்துக்கு 116 எம்எல்ஏக்கள் தேவை. ஆனால் தற்போது அதிமுகவிடம் தற்போது 114 பேர்தான் உள்ளனர். அதில் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோரும் அடங்குவர். அதேசமயம், அதிமுகவின் பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகிய 3 எம்எல்ஏக்களும் தினகரன் ஆதரவாளர்கள் ஆவர்.
சபாநாயகர்
திமுகவுக்கு 88, காங்கிரஸ் 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1, சுயேட்சை (டி.டி.வி.தினகரன்)1, சபாநாயகர் 1, காலி இடங்கள் 21 இடங்கள் உள்ளன. இதை வைத்து பார்த்தால் அதிமுகவின் பலம் தற்போதைக்கு 108 ஆக மட்டும் தான் உள்ளது. இதில் சபாநாயகர் சேர்க்கப்படவில்லை.
சிக்கலில் எடப்பாடி அரசு
எனவே கடும் சிக்கலில் உள்ளது எடப்பாடி அரசு. வருகிற இடைத் தேர்தலில் அக்கட்சி குறைந்தது 9 இடங்களில் வென்றாக வேண்டும். அப்படி நடந்தால்தான் ஆட்சியைக் காப்பாற்ற முடியும். ஒரு இடம் குறைந்து வென்றால் கூட ஆட்சி கவிழ்ந்து விடும் அபாயம் உள்ளது. எனவே லோக்சபா தேர்தலை விட சட்டசபை இடைத் தேர்தல்தான் அதிமுகவுக்கு மிக மிக முக்கியம். அதனால்தான் காலில் விழுந்தாவது தேமுதிகவை இழுக்க வேண்டும் என்று இத்தனை நாள் காத்திருந்து அறுவடை செய்துள்ளது.
ஆபத்துதான்
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு என்பது ஒரு எதிர்பாராத ஆபத்துதான். ஒருவேளை 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தியிருந்தால் சிக்கலை அதிமுக சமாளிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இப்போதைய 18 தொகுதிகளுக்கும் தேர்தல் என்பது ஒரு வகையில் ஆபத்துதான். இந்த 18-ல் எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள் என்பது அடுத்த கேள்வி!