சாம்பவான் ஓடை சிவராமன் -19

சமகால வரலாற்றுத் தொடர்

0

“போலீஸ் பொதுமக்களுக்கா? பண்ணையாருக்கா?”
“ரெண்டு பேருக்காந்தான்னு சட்டம் சொல்லுது.ஆனா இப்ப நாங்க வந்து இருக்கது பண்ணையக் காப்பாத்த’ அவரு தானே எங்கள கூப்புட்டு இருக்காரு.”
ஆங்கிலேயனுக்கு அடிமை வேலை செய்யும் இந்தியருக்கெல்லாம் தாங்களும் வெள்ளையன் என்றே நினைப்பு. சீனிவாசராவ் கேள்விக்குப் போலீஸ் இவ்வாறு கூறினார்.

கொடிக்கம்பு என்பதை விடக் கொடி கட்டி இருந்தவை எல்லாம் தடிக்கம்புகளாகவே இருந்தன. சிவராமனும் ஒரு பெரிய தடிக்கம்பில் செங்கொடியைக் கட்டி முன்னால் பிடித்துக் கொண்டு நிற்கின்றான். கால் ஓரிடத்தில் தரிக்கவில்லை. வாயும் எதையாவது பேசவேண்டும் என்று துடிக்கிறது. மற்ற தலைவர்கள் நிற்கும் இடத்தில் பேசுவதற்கும் சங்கடமாக இருந்தது. தாங்க முடியாத ஆத்திரத்தில் கத்த ஆரம்பித்தான்.

https://businesstrichy.com/the-royal-mahal/

“ப… பண்ணையாருங்களக் காப்பாத்த ஒ… ஒங்கத் தாத்தா வந்தாலும் முடியாது. வீ…வீணா எதுக்கு ஆசைப்படுறீங்க”
மற்றவர்கள் இரத்தம் கொதிக்கப் பயங்கரமான கோபத்துடன் நின்ற போது இவன் மட்டும் ஆத்திரம் தாங்காமல் கத்தினான். போலீஸ் அதிகாரி ஒரு முறை முறைத்தார். முழுமையாகக் கூட்டம் கூடி ஏதாவது அசம்பாவிதம் நடப்பதற்கு முன்னால் இவர்களை வெளியேற்றி விடத் திட்டம் போட்டார்.
எங்களால ஒங்கள எதுத்துக்கிட்டு முன்னேறிப்போக முடியும். இருந்தாலும் சட்டத்த மதிக்கிறோம். இந்த ஊருல கொடி ஏத்தாம மட்டும் போக மாட்டோம்.”
வேதையன் உறுதியாகப் பேசினான். ஆமா, ஆமா கூட்டத்தில் நின்றோர் பயங்கரமாக முழங்கினார்கள்.

 

“செ… செங்கொடி – வாழ்க”
“பா… பாட்டாளி வர்க்கம் – ஒன்று படுவோம்”
“ப… பண்ணை அடிமைத் தனம் – ஒழிக”
“போ… போலீஸ் அடக்கு முறை – ஒழிக”

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

சிவராமன் ஆவேசத்துடன் கத்தினான். கூட்டத்தில் நின்றோர் வானைப் பிளக்கும் அளவிற்குத் தொண்டையைக் கொடுத்து முழங்கினார்கள். இதற்கு ஒரு முடிவு காணாமல் போவதில்லை என்று சாலையில் உட்கார்ந்து மறியலில் இறங்கி விட்டார்கள்.

தென்பிறையில் விவசாய சங்கம் ஆரம்பிக்கப்பட்டு சேரி மக்களிடையே ஒரு விழிப்புணர்வைத் தூண்டி விட்டார்கள். அவர்கள் நம்பும்படி களப்பால் ஒப்பந்தமும் மன்னார்குடி மாநாடும் பல நன்மைகளை வாங்கித் தந்தன.
ஆணுக்கு அரை மரக்கால் நெல் முக்கால் மரக்காலாகவும், பெண்ணுக்கு கால் மரக்கால் அரை மரக்காலாகவும் கூலி உயர்த்தப்பட்டது. தப்பு செய்தவர்களைத் தண்டிப்பதாகக் கூறி அடிக்கப்பட்ட சாட்டை அடியும் சாணிப்பால் கொடுப்பதும் நிறுத்தப்பட்டன. இவற்றைப் போலவே இன்னொரு கொடுமையான செயல் வேலைக்குப் போகும் நேரம். விடிவதற்குள்ளாக வேலைக்குக் கிளம்பி, இருட்டிய பின்பே குடிசைக்கு வர வேண்டும்.

கதிரோன் தோன்றினான்
கவலைக் கொண்டு ஏங்கினோம்
உடையோ கோவணம்
உணவோ நீராகாரம்
இந்த வரிகளைக் கூட்டம் நடக்கும் இடங்களில் பாடுவார்கள். இந்த நான்கு வரிகளும் சேரி மக்களின் கண்ணீரையும் வியர்வையையும் சேர்த்துத் தொடுக்கப்பட்ட மாலை.

தங்களுக்கு ஏன் இந்த வம்பு என்று சாட்டையால் அடித்தாலும் சாணிப்பால் கொடுத்தாலும் அட்டையைப் போலச் சுருங்கி அடங்கி நடுங்கிக் கிடந்தவர்கள் மனம் செந்தீயில் குளிர் காய ஆரம்பித்தது. ஆங்காங்கே சங்கம் தோன்றிய பிறகே சேரி மக்கள் குடிசைகளில் நிம்மதியாகத் தூங்க முடிந்தது. என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று பயந்து வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு விடிவு கிடைக்கப் போகின்றது என்று நம்பினார்கள். எங்காவது கூட்டம் நடக்கின்றது கொடி ஏற்றுகிறார்கள் என்றால் ஒட்டு மொத்தமாகக் கிளம்பினார்கள். அமாவாசைக் கூட்டம் போட்டு நடக்க வேண்டியவற்றைப் பேசினார்கள்.

 

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே – நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

பாரதியின் இலக்கணத்திற்கு இலக்கியமாகத் திகழ்ந்தார்கள். படுக்காளி மாடுகளுக்குத் தார் போடாமல் தட்டி எழுப்பும் அன்புள்ளம் கொண்டவர்களாக அவர்களை வழிநடத்தும் தோழர்கள் இருந்தார்கள். அனாதைக் குழந்தைகளாக இருந்த சேரி மக்களை வாரி அணைக்கும் அப்பாவிகளாக இருந்தார்கள். இப்படிப்பட்ட ஒரு நல்ல சூழல் சேரி மக்களுக்கு அமைந்ததால் உடனடியாக இல்லாவிட்டாலும் ஓரளவு இந்தப் பண்ணை அடிமைத்தனத்திற்குச் சாவுமணி அடிக்கப்பட்டு விட்டது என்று நினைத்தார்கள். அதற்காகப் பசியை மறந்தார்கள். கூலி இல்லை என்றாலும் பரவாயில்லை எனக் கூட்டங்களுக்குக் கிளம்பினார்கள். எவ்வளவு தூரமாக இருந்தாலும் நடந்து போவதற்குப் பயப்படவில்லை.
வடபாதிமங்கலம் பண்ணையில் ஒரு வினோதமான முறையில் பண்ணைத் தொழிலாளர்களுக்குத் தண்டனை கொடுத்து இருக்கிறார்கள். கீழத் தஞ்சையிலுள்ள பண்ணைகளில் சாட்டையடி சாணிப்பால் என்பவை பொதுவான தண்டனைகளாக இருந்தாலும் ஒவ்வொரு பண்ணைக்கும் வித்தியாசமான தனித்தனி தண்டனை முறைகளும் இருந்தன.

 

புருசன் ஏதோ தவறு செய்கிறான் அல்லது தவறு செய்ததாக பண்ணையார் நினைத்துக் கொள்கிறார். உடனடியாக அவனைப் பிடித்துக் கட்டுவார்கள். அவன் பெண்டாட்டி உடனடியாக வரவழைக்கப்படுவாள். கலயத்தைக் கொடுத்து அதில் அவள் சிறு நீரைப் பெய்து வரச் சொல்வார்கள். சூடு ஆறுவதற்குள் அவன் அதைக் குடித்தாக வேண்டும். குடிக்க மறுத்தால் மயங்கும் வரை அடித்து, “தண்ணீ தண்ணீ” என்று முனகும் போது அந்தச் சிறு நீரைக் கொடுத்து குடிக்கச் சொல்வார்கள்;. இப்படிச் செய்வது ஒரு பண்ணையின் வழக்கம்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இன்னொரு பண்ணையில் ஆளைப் பிடித்து வருவார்கள். அவன் சற்றும் எதிர்பார்த்து இருக்க மாட்டான். மண்டையில் முகத்தடியால் ஒரே அடிதான் சாமிக் கிடாயை ஒரே வெட்டில் வீழ்த்த வேண்டும் என்பதைப் போல ஒரே அடியில மூளை சிதறி வெளியே வர வேண்டும். நூற்றுக்கணக்கான குழிகள் தென்னம்பிள்ளை போடுவது என்ற பெயரில் வெட்டிக் கிடக்கும். இழுத்துக் கொண்டு போய் உள்ளே தள்ளி தென்னம்பிள்ளையும் போட்டு விடுவார்கள்.

பண்ணை ஆளை அடித்துக் கொல்வார்கள். உடனடியாக்க் கசாப்புக் கடையில் ஆடு கழித்து எடுக்கப்படுவதைப் போலக் கண்டந்துண்டமாக வெட்டுவார்கள். வயதான மாடு ஒன்று சாகடிக்கப்படும். மாடு ஒன்று செத்துப் பண்ணையில் இருந்து வெளியே தூக்கி வரப்பட்டால் ஒரு ஆள் போய் விட்டான் என்று பொருளாம். இப்படி செய்வது வேறொரு பண்ணையின் செயல்.

ஒரு பண்ணையில் ஆளைப்பிடித்துக் கட்டி போடுவார்கள். சூட்டுக்கோலை நன்றாகக் காயப்போட்டு பண்ணையாரின் தலையெழுத்தைச் சூடு போட்டு விடுவார்கள். செத்த நாயைப் போல வண்டியில் கட்டிப் பாதையில் இழுப்பார்கள்.
இப்படி எத்தனையோ முறைகளில் சேரி மக்களைத் தண்டித்துக் கொடுமைப் படுத்தினார்கள். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் பண்ணையாளர்கள் எல்லோரும் பயங்கரமான கடவுள் பக்தர்கள்.

 

அன்பே உருவானவர் கடவுள் என்று சொல்லிக் கொண்டே எப்படி இப்படிப் பட்ட அட்டூழியங்களை எல்லாம் செய்ய மனம் வருகின்றது என்று சிவராமன் நினைத்துப் பார்ப்பான்.
தாயிடம் வளராமல் தாதியரிடம் வளர்ந்தது ஒரு காரணமாக இருக்கலாம் என நினைத்தான்.
அந்தக் காலத்தில் அரசர்கள், தவறு செய்தவர்கள் அல்லது பிடிக்காதவர்களைக் கழுமரத்தில் ஏற்றுவார்களாம். கழுமரம் என்பது தென்னங்குருத்தைப் போல நுனி கூர்மையாகவும், போகப் போகப் பெரிதாகவும் இருக்குமாம். கழுவில் ஏற்ற வேண்டியவனைத் தூக்கி நடு வயிற்றில் இருக்கும்படி மாட்டி விடுவார்களாம். அவன் பாரமே அவனுக்கு எமனாக அமைந்து கொஞ்சம் கொஞ்சமாக்க கழுமரத்தில் உடம்பு இறங்கக் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் போகுமாம்.

 

சிவராமனிடம் வடபாதி மங்கலப் பண்ணையில் தண்டனை தரும் முறையைப் பற்றி விளக்கினார்கள். போகும் இடங்களிலும் ஓய்வாக இருக்கும்போதும் சேரி மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றி அறிந்து கொள்ளவே மிகவும் ஆர்வம் காட்டுவான். அச்செய்திகள் செங்குளவிகள் சேர்ந்து வந்து இவனைக் கொட்டுவதைப் போல இருக்கும்.
வடபாதி மங்கலத் தண்டனை முறையைக் கேட்டதும் அந்த ஊரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழுந்தது. நாளைக் கடத்தாமல் மறுநாளே அந்த ஊரை நோக்கி நடந்தான்.

 

பண்ணையாருக்குப் பங்களாக்கள் திருவாரூரில் இருந்தன. பண்ணையை கவனித்துக் கொள்ள அங்கு பழைய பங்களா இருந்தது. இப்போது பெரிய பங்களா ஒன்று நவீன முறையில் கட்டப்பட்டு வருகின்றது.
பார்க்க நினைத்த இடத்தை அடைந்தான். அந்த இடம் பார்க்க அழகான ஒரு பூந்தோட்டமாக இருந்தது. அந்த குளு குளு இடத்தில்தான் இவன் கேள்விப்பட்ட கொடுமைகளும் நிகழ்ந்து இருக்கின்றன.

உட்காருவதற்காக நிறைய சிமெண்டுப் பெஞ்சுகள் கட்டப்பட்டு இருந்தன. பண்ணையார் எங்கு போனாலும் தண்டனை கொடுக்கும் நேரத்திற்கு வந்து அவருக்கு போடப்பட்டிருக்கும் நாற்காலியில் அட்டாணிகால் போட்டு அமர்ந்து இருப்பாராம். குடும்பத்தில் உள்ளவர்களும் விருப்பப்பட்டால் வந்து உட்கார்ந்து பார்க்கலாம். சுற்றிலும் சேரி மக்களும் மற்றவர்களும் நின்று பார்ப்பார்கள். பண்ணை வாரிசுகளுக்கு மனதில் ஏற்றிக் கொள்ளவும் மற்றவர்களுக்குப் பயம் காட்டவும் இப்படி செய்வது பயன்பட்டது.

புருசன் மீது குற்றம் சுமத்தப்பட்டாலும் சரி பெண்டாட்டியின் மீது குற்றம் சுமத்தப்பட்டாலும் சரி இருவரும் அந்தத் தோட்டத்திற்கு கொண்டு வரப்படுவார்கள். மரங்களாக இருந்தால் நிலையாக ஆண்டாண்டு காலமாக வைத்துக் கொள்ளமுடியாதாம். அதனால் இரண்டு பெரிய கல் தூண்கள் நடப்பட்டிருந்தன. இருண்டும் இப்போதுள்ள பண்ணையார்களின் மூதாதையர் காலத்தில் நடப்பட்டவையாம்.

இருவரையும் இரண்டு தூண்களிலும் எதிரும் புதிருமாகக் கட்டுவார்களாம். யார் குற்றம் செய்தார்களோ அவர்களுக்கு சாட்டையடி விழும் புருசனுக்கு அடி விழுந்தால் பெண்டாட்டி கதறிக் கதறி அழுவாள். இதுபோன்று பெண்டாட்டிக்கு அடி விழுந்தால் புருசன் நெஞ்சம் வெடிக்க விம்மி விம்மி அழுவான். பண்ணையார் பார்த்து ரசித்துக் கொண்டு இருப்பார். அடி வாங்குபவர் மயங்கி தலை தொங்கும் வரை அடி விழும்.

 

தொழிலாளர்களுக்கு அச்சம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எந்தப் பண்ணையையும் நிறுவனத்தையும் சரியாக நடத்த முடியாது. அச்சம் வாடையைப் போல குறைவாக இருக்க வேண்டும். அணைப்பு தென்றலைப் போல அதிகமாக இருக்க வேண்டும் என்று எண்ணினான்.
அந்த இடத்தைப் பார்த்துவிட்டு அவ்வூரில் உள்ள சேரிக்குச்சென்றான்.

தொடரும்…

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.