காலணா பெறாத நிலம் கால் கோடிக்கு… கணக்கு முடிக்க நினைக்கும் நியோமேக்ஸ்! வீடியோ

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

காலணா பெறாதநிலம் கால் கோடிக்கு…கணக்கு முடிக்க நினைக்கும் நியோமேக்ஸ்

நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த பணம் எப்போது கிடைக்கும்? என்ற ஏக்கத்தோடு, காத்திருக்கும் முதலீட்டாளர்களின் தலையில் பேரிடியை இறக்கி வைத்திருக்கிறது, நியோமேக்ஸ் நிறுவனம். ”பணமாக திருப்பித்தர இயலாது. எங்கள் கைவசம் உள்ள நிலங்களை வேண்டுமானால் பிரித்து தருகிறோம்.” என நீதிமன்றத்தில் தெனாவெட்டாக அறிவித்திருக்கிறார்கள், அந்நிறுவனத்தின் இயக்குநர்கள். மேலும், “வாடிக்கையாளர்களுக்கும் தங்களுக்கு மான இந்த பிரச்சினையைத் தீர்த்து வைக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும்” என்றும் நியோமேக்ஸ் தரப்பில் வேண்டுகோள் விடுத்திருப்பது இம்மோசடி வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

வீடியோ லிங்

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

 

3

வழக்கு கடந்த வந்த பாதை

4

”முதிர்வுகாலம் முடிந்தும் முதலீடு செய்த பணத்தை திருப்பித் தரவில்லை. சொன்னபடி, அடிமனையும் பத்திரம் செய்து தரவில்லை.” என்பதுதான் நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு எதிரான பிரதான குற்றச்சாட்டு. நியோமேக்ஸில் முதலீடு செய்த தொகை ரூ.73.50 இலட்சத்தை முதிர்வுகாலம் முடிந்தும், திருப்பித் தராமல் ஏமாற்றிவிட்டதாக, தூத்துக்குடி கோவில்பட்டியைச் சேர்ந்த ஜெயசங்கரேஸ்வரன் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் குற்ற எண்: 3/2023 இன்படி வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.

முதற்கட்டமாக, மதுரையில் உள்ள நியோ மேக்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய ஆவணங்களை ஆராய்ந்தபோதுதான், நியோமேக்ஸ் நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களை உருவாக்கி வைத்துக்கொண்டு தமிழகம் முழுவதும் பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தியிருப்பது அம்பலமானது. இதனையடுத்துதான், நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களான தியாகராஜன், பழனிச்சாமி, நாராயணசாமி, மணிவண்ணன், கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், வீர சக்தி, அசோக் மேத்தா பன்சாய், சார்லஸ், செல்லம்மாள் ஆகியோர் மீது U/s. 406, 420, r/w 34 IPC & 5 Of TNPID Ac t இன்படி மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணையை முடுக்கிவிட்டனர்.

வீடியோ லிங்

பின்னர், டி.எஸ்.பி. குப்புசாமி தலைமையிலான போலீசார், நெல்லை, திருச்சி, மதுரை, கோவில்பட்டி, விருதுநகர் என நியோ மேக்ஸ் நிறுவனத்தின் அலுவலகங்கள், இயக்குநர்களின் வீடுகள், முகவர்களின் வீடுகளில் அதிரடி சோதனையை மேற்கொண்டு, 62 அசல் பத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றினர். நியோ மேக்ஸின் 17 கிளை நிறுவனங்களுக்கும் ‘சீல்’ வைத்தனர்.

நியோ மேக்ஸின் 17 கிளை நிறுவனங்களுக்கும் ‘சீல்’
நியோ மேக்ஸின் 17 கிளை நிறுவனங்களுக்கும் ‘சீல்’

கைப்பற்றப்பட்ட ஆவணங்களிலிருந்து மோசடியின் பரிமாணம் போலீசாருக்கு பிரமிப்பை ஏற்படுத்திய நிலையில்தான், நியோமேக்ஸ் நிறுவனத்தின் மிரட்டலையும் மீறி பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாகவும், சுதந்திரமாகவும் புகார் அளிப்பதற்கான வாய்ப்பை வழங்கும் விதமாக மதுரை ஆயுதப்படை மைதானத்தில் ஜூலை 22 அன்று சிறப்பு முகாம் நடத்தி புகார்களை பெற்றனர். அன்று ஒருநாளில் மட்டும் 80 பேர் புகார் மனு அளித்திருந்தனர். இதுவரை, நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக 152 பேர் புகார் அளித்துள்ளனர்.

நியோமேக்ஸ் நிறுவனங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்
நியோமேக்ஸ் நிறுவனங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்

3வது முறையாக, அதிரடி சோதனைகளை நடத்தி முடித்திருக்கும் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இதுவரை, 138 மோசடியான நியோமேக்ஸின் கிளை நிறுவனங்களை அடையாளம் கண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். 20 நிறுவனங்கள் மூலம் 106 கம்பெனிகளுக்கு பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதையும் கண்டறிந்துள்ளனர். நியோமேக்ஸ் நிறுவன மோசடி தொடர்பாக இதுவரை 20 நிறுவனங்களின் இயக்குநர்கள் உள்ளிட்டு 62 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னணி இயக்குநர்கள் தலைமறைவாகிவிட்ட நிலையில், அந்நிறுவனத்தின் கிளை இயக்குநர்கள் மற்றும் ஏஜெண்டுகளாக செயல்பட்ட சகாயராஜ், சைமன்ராஜா, கபில், இசக்கிமுத்து மற்றும் அந்நிறுவனத்தின் ஸ்தாபகர்களுள் ஒருவரான பத்மநாபன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வீடியோ லிங்

 

வேவு பார்த்த ஏஜெண்ட் ! வட்டிக்கு விட்டு சம்பாதித்த டைரக்டர் !
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற புகார் மனு பெறும் முகாமில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரித்ததில், அவர்கள் வேவு பார்க்க வந்த நியோமேக்ஸ் முகவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களை வைத்து, அலேக்காக பத்மநாபனை தூக்கியிருக்கிறார்கள். கையோடு, நியோமேக்ஸ் இயக்குநர்களுள் ஒருவரான பாலசுப்பிரமணியனுக்கு சொந்தமான மதுரையில் உள்ள ராம்ஸ் அபார்ட்மெண்டிலும் அதிரடியாக சோதனையிட்டிருக்கிறார்கள். ஹார்ட் டிஸ்குகள் உள்ளிட்டு ஆவணங்களையும் அள்ளியிருக்கிறார்கள். மதுரையில் உள்ள பெரும் தொழிலதிபர்கள் ஏழெட்டு பேரும் நியோமேக்ஸ் நிறுவனத்தில் பணத்தை போட்டு சிக்கியிருக்கிறார்களாம். நியோமேக்ஸ் வழியே வசூலித்த பணத்தை காண்டிராக்ட்காரர்களுக்கு கோடிக்கணக்கில் வட்டிக்கு விட்டு பெரும் தொகை சம்பாதித்திருக்கிறார் பாலசுப்பிரமணியன். இதுதொடர்பான ஆவணங்களும் சிக்கியிருப்பதாக தெரிகிறது.

போலீசின் கைது நடவடிக்கைக்கு அஞ்சி ஓடி ஒளிந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னணி இயக்குநர்கள், மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் CRL. O.P. (MD) 11672 & 11680 இன்படி முன்ஜாமீன் வழங்கக்கோரி மனுதாக்கல் செய்தனர். மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் குற்ற எண்: 3/2023 இன்படி, குற்றஞ்சாட்டப்பட்ட கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், வீரசக்தி உள்ளிட்ட பத்து பேரின் சார்பில் இந்த முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. முதலில், ஜூன்-30 அன்று, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் முன்ஜாமீன் மறுக்கப்பட்டது. 2வது முறையாக, மீண்டும் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர். வீரசக்தி தவிர்த்த மற்ற இயக்குநர்கள் சார்பில் (CRL. O.P. (MD) 13071 ஒரு மனுவும் வீரசக்தி சார்பில் (CRL OP(MD) 13465/2023) தனி மனுவாகவும் தாக்கல் செய்திருந்தனர். இவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாதென்று எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு மாவட்டங் களைச் சேர்ந்த பாதிக்கப் பட்டவர்களின் தரப்பில் 40-க்கும் மேற்பட்டோர் இடை யீட்டு (intervenors) மனு தாக்கல் செய்திருந்தனர். ஆக மொத்தம் 51 வழக்குகளும் ஒன்றாக்கப்பட்டு நீதிபதி ஜி.இளங்கோ வன் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. ஜூலை-17 மற்றும் ஜூலை 28 ஆகிய தேதிகளில் வழக்கு விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், இறுதி முடிவுக்காக ஆக-4 அன்று தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. வழக்கு தொடுத்து ஒருமாதம்கூட ஆகாத நிலையில்; எத்தனை பேர் முதலீடு செய்திருக் கிறார்கள்; எவ்வளவு பணம் வசூலித்திருக்கிறார்கள்; என்ற விவரம் முழுமையாக தெரியாத நிலையில் ஜாமீன் வழங்கக்கூடாதென்று அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னாவே நேரில் ஆஜராகி கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்திருக்கிறார். மேலும், வெளிநாடுகளிலும் பணத்தை முதலீடு செய்திருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

 

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற நியோமேக்ஸ் மோசடி புகார் மேளா
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற நியோமேக்ஸ் மோசடி புகார் மேளா

வீடியோ லிங்

நியோமேக்ஸ் தரப்பு வாதம்

”நியோமேக்ஸ் நிறுவனத்திற்கென்று தென் தமிழகத்தில் 16 லே-அவுட்களில் 2800-க்கும் மேற்பட்ட ஏக்கரில் DTCP அப்ரூவல் பெற்ற 9 கோடி சதுர அடி வீட்டு மனைகள் இருந்தது. கடந்த 12 ஆண்டுகளில் வாடிக்கையாளர்களுக்கு விற்றது போக, தற்போது 2600-க்கும் ஏக்கரில் 7 கோடி சதுர அடி மனைகள் கைவசம் இருக்கின்றன. 16 புராஜெக்டுகளில் 4.6 கோடி சதுர அடி மனைகள் பதிவுக்கான தயார் நிலையில் இருக்கின்றன. நியோமேக்ஸில் முதலீடு செய்தவர்களுக்கு நிலத்தை பதிவு செய்து தர தயாராக இருக்கிறோம்” என்று நீதிமன்ற விசாரணையின்போது, புள்ளி விவரங்களை அடுக்கியதோடு நிறுத்தவில்லை. ”ஒருவேளை பணமாக திரும்பப்பெற வேண்டுமென விரும்பினால் உரிய உரிமையில் நீதிமன்றத்தில் தகராறை தீர்த்துக்கொள்ள வேண்டும்.” என்று பெரிய குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது நியோமேக்ஸ். பிதாமகன் திரைப்படத்தில் சூரியா பேசிய காமெடி வசனத்தைப் போல, “நியோமேக்ஸ் நிறுவனத்தை நம்பி முதலீடு செய்த உங்களின் மன தைரியத்தை பாராட்டி..” காலணா பெறாத நிலத்தை கால் கோடி கொடுத்தவனுக்கு பத்திரம் பதிவு செய்து தரப்போகிறது, நியோமேக்ஸ். கூடவே, நியோமேக்ஸ் வாடிக்கையாளர் களுக்கும் தங்களுக்குமான இந்த நில ’பஞ்சாயத்தை’ தீர்த்துவைக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை ஆணையராக நியமிக்க வேண்டுமென்று கோரிக்கையையும் முன்வைத்திருக்கிறது.

திருச்சி சிறுகனூரில் நியோமேக்ஸ் நிலம் 28.07.2023 அன்று எடுக்கப்பட்ட படம்
திருச்சி சிறுகனூரில் நியோமேக்ஸ் நிலம் 28.07.2023 அன்று எடுக்கப்பட்ட படம்
திருச்சி சிறுகனூரில் நியோமேக்ஸ் நிலம் 28.07.2023 அன்று எடுக்கப்பட்ட படம்
திருச்சி சிறுகனூரில் நியோமேக்ஸ் நிலம் 28.07.2023 அன்று எடுக்கப்பட்ட படம்

நியோமேக்ஸ் நிதி நிறுவனமா? ரியல் எஸ்டேட் கம்பெனியா?

”நாங்கள் நிதிநிறுவனம் அல்ல. DTCP, RERA அனுமதி பெற்று ரியல் எஸ்டேட் தொழில்தான் செய்கிறோம். தமிழகத்தில் எங்களுக்கு நிறைய புராஜெக்ட்டுகள் இருக்கின்றன. அவற்றுக்காக, அவர்கள் அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார்கள்.” என்று நீதிமன்றத்தில் பச்சையாக புளுகியிருக்கிறது நியோமேக்ஸ். வெளிப்படையான விளம்பரங்கள் செய்து பணத்தை பெறாமல், எம்.எல்.எம். கம்பெனிகளின் பாணியில், ஆளுக்கு ஏற்றார்போல ஆடம்பர ஹோட்டல்களில் பிரமிப்பை காட்டி கவிழ்ப்பதில் தொடங்கி, திண்ணைப்பேச்சு பேசி மயக்குவது வரையில் தந்திரமான முறையில் பணத்தைக் கறந்திருக்கிறது, நியோமேக்ஸ். இதற்காக, எந்த ஒரு பிட் நோட்டீசும் வழங்கப்படுவது கிடையாது. திட்டங்களை விளக்கி சொல்வதற்கான அச்சிட்ட காகிதம் மட்டுமே அவர்கள் கையில் இருக்கும். அதைக் காட்டி, வாயில் வடை சுட்டிருக்கிறார்கள். பேச்சு வாக்கில்கூட, வட்டிப்பணம் என்று சொல்வதில்லை. போக்குவரத்து செலவு, அலவன்ஸ், ஆஃபர், டிவிடென்ட், இலாபத்தில் பங்கை பிரித்து தருகிறோம் என்று ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக சொல்லி வசூலித்திருக்கிறார்கள்.

நியோமேக்ஸின் வசிய பிளான்
நியோமேக்ஸின் வசிய பிளான்

திருச்சி மாவட்டத்தில் ஊட்டத்தூர் என்ற சிறிய கிராமத்தில் மட்டும் 17-க்கும் மேற்பட்டோர்கள் நியோமேக்ஸில் முதலீடு செய்திருக்கிறார்கள். அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் ஒரு ரவுண்ட் போட்ட பணம் இரட்டிப்பாக கிடைத்த சந்தோசத்தில், மேலும் கடன்பட்டு இரண்டாவது ரவுண்டில் இருபது இலட்சங்களுக்கு மேல் முதலீடு செய்திருக்கிறார். வாத்தியாரே சொல்றாரு. நம்ம மாமாதானே சொல்றாரு. அவரே இருக்காரு என்பது போன்ற நம்பிக்கை அடிப்படையிலான பிணைப்போடு, பெரும்பாலும் ஒன் டு ஒன் ஆக இந்த டீலிங்கை நடத்தியிருக்கிறது, நியோமேக்ஸ். மிக முக்கியமாக முகம் தெரியாத யாரோ ஒரு நபரிடம் கொடுத்து ஏமாந்துவிட்டேன் என்று எவரும் சொல்லிவிட முடியாது. வேண்டுமானால், ”உன்னால் நான் கெட்டேன். என்னால் நீ கெட்ட” என்று இரயில் பெட்டி போல வரிசையாய் ஒருவரை ஒருவர் பார்த்து சொல்லிக்கொள்ள வேண்டியதுதான். வாடிக்கையாளரைப் பொறுத்தமட்டில், தனது நேரடி ஏஜெண்டை தவிர அதற்கு மேல் யார் இருக்கிறார்கள் என்ற விவரம் தெரியாது. அந்தக் குறிப்பிட்ட ஏஜெண்டுக்கும் தனது டீம் லீடருக்கு மேல் யார் இருக்கிறார் என்ற விவரம் தெரியாது. வாடிக்கையாளர்கள் – ஏஜெண்ட் – டீம் லீடர் – டீம் மேனேஜர் – ஏரியா மேனேஜர் என பக்காவான படிநிலையில் கட்டமைத்திருக்கிறார்கள்.

ஏஜெண்டுகளை குஷிப்படுத்த இன்ப சுற்றுலா
ஏஜெண்டுகளை குஷிப்படுத்த இன்ப சுற்றுலா

பாதிக்கப்பட்டவர்களின் தரப்பிலிருந்து அணுகுவதைப் போல, பெரம்பலூர் மாவட்ட டீம் மேனேஜர் சந்திரசேகரிடம் நாம் பேசியதிலிருந்து இந்த விசயங்கள் உறுதியாகியிருக்கின்றன. வெளி நாட்டில் சம்பாதித்த பணத்தை நியோமேக்சில் முதலீடு செய்திருக்கும் சந்திரசேகர் நியோமேக்ஸ் நிறுவனம் தன்னை ஏமாற்றிவிடாது என்று திடமாக நம்புகிறார். தனக்கு கீழ் இருப்பவர்களுக்கும் அதே நம்பிக்கையை விதைக்கிறார். படிநிலைக்கு ஏற்ப கமிஷன் கொடுத்து, வலைபின்னலை தமிழகமெங்கும் விரிவுபடுத்தி யிருக்கிறது நியோமேக்ஸ். பல்வேறு சலுகைகள், தாஜ்மஹாலுக்கு உல்லாச சுற்றுலா என ஆள்பிடித்துக் கொடுப்பவர்களை குளிப்பாட்டியிருக்கிறது. திருச்சி BHEL – இல் 300-க்கும் மேல் நியோமேக்ஸில் சேர்த்துவிட்ட ஏஜெண்ட் ஒருவர் குறைந்தது 30 கோடிக்கும் மேல் சம்பாதித்திருப்பார் என்றும் அதை வைத்து தனியே பிளாட் போட்டு விற்கும் அளவுக்கு போய் விட்டார் என்றும் சொல்கிறார்கள்.

எல்லாமே இ.எம்.ஐ.!
நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களுள் ஒருவரான, திருச்சி ஆப்பிள் மில்லட் வீரசக்திக்கு சினிமாப்படம் எடுக்க வேண்டுமென்பது அவரது நீண்ட நாள் கனவு என்றும்; அதுவும் அவரது சொந்தப் பணத்தில்தான் சினிமாப் படத்தையும் தயாரித்தார் என்றும்; நியோமேக்ஸை வைத்து அவர் பெரிய அளவில் சம்பாதித்து விடவில்லை என்றும்; அவருக்குச் சொந்தமானதாக சொல்லப்படும் ஆப்பிள் மில்லட், கார், வீடு எல்லாமே கடனில் வாங்கப்பட்டது என்றும்; அதற்காக மாதா மாதம் இ.எம்.ஐ. கட்டி வருகிறார் என்றும் புலம்புகிறார்கள் அவரது நெருங்கிய நண்பர்கள்.

வீடியோ லிங்

https://www.youtube.com/watch?v=P83rmKdY7y8

வாடிக்கையாளர்களை வசியம் செய்த நியோமேக்ஸ்

”பொட்ட புள்ளய வச்சிருக்கோம். நாளைக்கு கண்ணாலம் காட்சினா ஆகும்”னு பாமரத்தனமாக பணம் போட்டவர்களும் இருக்கிறார்கள். ஓரளவு காசு பணம் புழங்கும் அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், போலீசு அதிகாரிகள் போன்றவர்களும் இருக்கிறார்கள். முதலீடு போட்ட பணத்தை வெளியில் சொன்னால் சிக்கல் என்று கமுக்கமாக கையாளுபவர்களும் இருக்கிறார்கள். பேசினால், பணம் போய்விடுமோ என பயப்படுபவர்களும் இருக்கிறார்கள். இவர்களின் தன்மைக்கேற்ப, நம்பிக்கையூட்டுவது தொடங்கி வாட்சப்-பில் மிரட்டுவது வரையில் ஆளுக்கு ஏற்றார் போல கையாண்டுவருகிறது, நியோமேக்ஸ்.

”ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே, நியோமேக்ஸ் அலுவலகத்துக்குப் பூட்டு போட லாம்னு கிளம்பிட்டேன். ”நானும்தான் முதலீடு போட்டிருக்கிறேன். கொஞ்சம் பொறுமையா இரு”னு எங்க டீம் ஹெட் சொன்ன வார்த்தைக்கு கட்டுப்பட்டுதான் அமைதியா இருக்கேன்” என்கிறார், பாதிக்கப்பட்ட நபர் ஒருவர்.” ”இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் பொறுமையாயிருப்பது? சிறுகனூர் வீட்டுமனைத் திட்டம் என்று விளம்பரப்படுத்தியே பத்து வருசமாச்சு. இன்னும், பிளாட்கூட போடாமல் பொட்டல் காடாகவே கிடக்கிறது.” என்கிறார், அவர். அதிகவட்டிக்கு ”ஆசைப்பட்ட”க் குற்றத்துக்காக, நம்பி ஏமாந்தவன் கழுத்துக்குமேல் இறங்கத் தயாராகயிருக்கும் பொறியை மறைத்துவிட்டு, வாயில் கவ்வியிருக்கும் மசால் வடையோடு கணக்கை முடிக்கப் பார்க்கிறது, நியோமேக்ஸ்.

– வே.தினகரன், ஷாகுல் படங்கள்: ஆனந்த்.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.