திருச்சி மாநகராட்சி வார்டு 17-ல் ரவுண்ட்அப் ! கவுன்சிலரு வார்டுக்கு என்ன தான் செஞ்சாரு ?

0

திருச்சி மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று ஓராண்டு காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகளால் நலத்திட்ட பணிகள் எவ்வளவு நடைபெற்றுள்ளது என்பதை கண்டறிய “அங்குசம் செய்திக்குழு” திட்டமிட்டது.

சத்யமூர்த்தி நகர், மதுரை வீரன் கோவில் தெரு, அந்தோணியார் கோவில் தெரு, வேதாந்திரி நகர், அண்ணா நகர், நாகசுந்தரம் நகர், காமராஜர் நகர் குடிசைப்பகுதி, வடக்கு தாராநல்லூர், வேலுபிள்ளை தோப்பு, கல்லு மந்தை, உப்பிலிய தெரு, செக்கடி பஜார், அக்ரஹாரம் (தாராநல்லூர்), தெற்கு தாராநல்லூர், பி.எஸ். நகர் ஆகிய பகுதிகளை கொண்டது 17வது வார்டு.

https://businesstrichy.com/the-royal-mahal/

சுமார் 17 ஆயிரம் மக்கள் தொகையை கொண்டது. இதில் 60% குடிசைப்பகுதியினர், வறுமை விளிம்பு நிலையில் உள்ள பல்வேறு சமூகத்தை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் வசித்து வருகின்றனர். இந்த 17வது வார்டின் கவுன்சிலர் ந.பிரபாகரன். இவர் மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டு காலம் முடிவடைந்ததையொட்டி அவர் வார்டுக்கு என்ன பணிகள் செய்தார் என்பது குறித்து நேரில் சந்திந்து கேட்டபோது,

ந.பிரபாகரன் மாமன்ற உறுப்பினர் 17ம் வார்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி
ந.பிரபாகரன் மாமன்ற உறுப்பினர் 17ம் வார்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

விடுதலை சிறுத்தை கட்சியின் முதல் வார்டு கவுன்சிலர்

பள்ளி படிப்பின்போதே, அம்பேத்கர் மற்றும் பெரியாரின் மீதும் மிகுந்த பற்று இருந்தது. கல்லூரி படிப்பை முடித்த பின்னர் வளர்ந்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலைவர் திருமாவளவனின் சமூக அக்கறை மீது மதிப்பு ஏற்பட்டு கடந்த 25 ஆண்டு காலமாக கட்சியில் இணைந்து படிப்படியாக உயர்ந்து உள்ளேன். ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட தலைவராக 13 ஆண்டு காலமும் மாநில மாணவர் அணி மற்றும் தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணைச்செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை திறம்பட செய்துள்ளேன். திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே மாமன்ற உறுப்பினராக உள்ளேன்.

வாக்குறுதிகளில் 50% நிறைவேற்றியாச்சு…

தேர்தலின் போது, பள்ளி கல்லூரி மாணவ, மாணவர்கள் பயன்பெறும் வகையில் நூலகம், படிப்பகம், உடற்பயிற்சி கூடம், விளையாட்டு அரங்கம், மற்றும் சமுதாயக்கூடம், அடிப்படை வசதிகளான தார்ச்சாலை, சிமெண்ட் சாலை மற்றும் பழுதடைந்த பாலங்களை சரிசெய்வது, மின் இணைப்பு இல்லாத பகுதியில் மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது, சமூகத்திற்கெதிரான சட்ட விரோத செயல்கள் நடைபெறா வண்ணம் தடுப்பது, குறிப்பிட்ட பகுதிகளில் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமாராக்கள் பொருத்துவது, தங்குதடையின்றி குடிநீர் வழங்குவது, பொது கழிப்பிடங்களை தூய்மையாக பாராமரிப்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி தருவதாக கூறினேன். தற்போது, பதவியேற்று ஓராண்டு முடிவடைந்த நிலையில் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளில் 50% வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளேன்.

அண்ணா நகர், நாகசுந்தரம் நகரில்…

அண்ணாநகர் பகுதியில் ரூ.25 இலட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை, மற்றும் அண்ணாநகர் விஸ்தரிப்பு வேதாந்திரி நகரில் ரூ.25 இலட்சம் மதிப்பில் தார்சாலை, போடப்பட்டது. வேதா£ந்திரி நகரில் நீண்ட நாட்களாக தெருவிளக்கு இல்லாமல் இருந்தது. முதன்முறையாக அப்பகுதியினருக்கு 36 தெரு விளக்குகள் அமைத்து கொடுத்தேன். நாகசுந்தரம் நகர் குடிசைப்பகுதியினருக்கு புதியதாக தெருவிளக்குகள் அமைத்து தந்தது, அண்ணாநகர் ரெட்டைவாய்க்கால் பகுதியில் ரூ.10 இலட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் தூர்வாரி சுற்றுசுவர் எழுப்பி முடியும் நிலையில் உள்ளது. குறுக்கு சாக்கடைகள் கட்டும் பணி ஒவ்வொரு மாதமும் மாதாந்திர நிதியின் மூலம் செய்து தருகிறேன்.

சத்தியமூர்த்தி நகரில்…

சத்தியமூர்த்தி நகரில் பாராளுமன்ற உறுப்பினரின் நிதியிலிருந்து ரூ.8 இலட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் மினி உயர்கோபுர மின்விளக்கு அமைத்தது மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.11 இலட்சம் மதிப்பில் நூலகம் அமைந்துள்ளேன்.

காமராஜ் நகரில்…

காமராஜர் நகர் பகுதியில் ஆண்கள் கழிப்பறை இரண்டு கட்டமாக ரூ.30 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. காமராஜர் நகர் குடிசைப்பகுதியில் முதன்முறையாக தெருவிளக்கு அமைத்து கொடுத்துள்ளேன்.

செக்கடி பஜாரில்…

செக்கடி பஜார் வேலுபிள்ளை தோப்பில் முதன்மை சாலை ரூ.50 இலட்சம் மதிப்பில் கான்கீரிட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தேவர் பூங்கா அருகில் ரூ.12.60 இலட்சம் மதிப்பில் புதிய பாலம் அமைக்கும் பணி, அண்ணாநகர் ஜெகஜோதி மாரியம்மன் கோவில் அருகில் ரூ.16.70 இலட்சம் மதிப்பில் பாலம் ஆகியவை கட்டப்பட உள்ளது.

பி.எஸ்.நகரில்

மேலும், பி.எஸ். நகரில் 20 ஆண்டு காலமாக குடிநீர், மழைநீர் வடிகால், சாலை வசதி, கழிவுநீர் வெளியேற்றம் ஆகிய எவ்வித அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்து வருகிறது. இப்பகுதியை மாநகராட்சியுடன் இணைந்து அனைத்து அடிப்படை வசதிகளையும் விரைவில் செய்து தர உள்ளேன். மற்றும் அனைத்து மழைநீர் வடிகாலுக்கான குறுகிய, சிறிய பணிகளை ரூ.50 இலட்சம் மதிப்பில் செய்து தர உள்ளேன். அனைத்து மண்சாலைகளையும் கான்கிரீட் சாலைகளாக மாற்றுவது, பழுதடைந்த தார் சாலைகளை நிதி பெற்று கான்கிரீட் சாலைகளை மாற்ற தீவிரமாக முயற்சித்து வருகிறேன்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ரேஷன் கடை வைக்க மாமன்றத்தில் குரல்

எனது வார்டு பகுதியில் நியாயவிலைக்கடைகளே இல்லை. எனது வார்டு மக்கள் 16-வது வார்டு மற்றும் 18வது வார்டு பகுதியில் உள்ள கடைகளில் தான் பொருட்கள் வாங்கி வருகின்றனர். (ரேஷன் கடை கட்டுவதற்கான இடம் மாநகராட்சியிடம் கைவசம் உள்ளது) சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரிடம் தலா ஒரு கடைகள் என 2 கடைகள் அமைத்து தர கோரிக்கை வைத்து வருகிறேன். இதுகுறித்து மாநகராட்சி கூட்டத்திலும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறேன். உப்பிலிய தெருவில் உள்ள பொது கிணறு ரூ.1 இலட்சம் மதிப்பில் தூர்வாரப்பட்டு மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து உள்ளது.

மாதந்தோறும் உதவித்தொகை

ஆதரவற்றோர், முதியோர், விதவைகள் ஆகியோர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் அமைத்து மேயர் அன்பழகன் மேற்பார்வையில், 180 பேர் கண்டறியப்பட்டு அவர்கள் ஒவ்வொரு மாதமும் உதவித்தொகை பெற்று வருகின்றனர். தூய்மை பணியாளர்கள் குறையை உரிய முறையில் அதிகாரிகளிடம் தெரிவித்து அவர்கள் குறையை தீர்த்து வைப்பதில் தனிகவனம் செலுத்தி வருகிறேன்.

மக்களுக்காக மருத்துவ முகாம்

வார்டு பகுதியில் டாக்டர்.ஜானகிராம் தலைமையில் காது, மூக்கு, தொண்டை மருத்துவமுகாம், டாக்டர்.ரொகையா குழுவினர் பங்களிப்புடன் மகளிர் சிறப்பு மருத்துவமுகாம், தனலெட்சுமி சீனிவாசன் கல்லூரியுடன் இணைந்து இதயம், சிறுநீரகம் பிரச்சனைகள் தொடர்பாக கண்டறிதல் மற்றும் தீவிர சிகிச்சை முகாம் உட்பட பல்வேறு மருத்துவ முகாம்கள் நடத்தி உள்ளேன்.

இசேவை மையத்துடன் புதிய கட்டிடம்

மாமன்ற உறுப்பினருக்கான அலுவலகம், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இ-சேவை மையத்துடன் ரூ.25 இலட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. வார்டு மக்களின் குறைகளை கேட்டறிய 17வது வார்டு நிறை குறைகள், 17வது வார்டு களப்பணிகள் என 2 வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து அதில் கண்டறியப்படும் குறைகளை சில நிமிடங்களிலே நேரில் ஆய்வு செய்து உடனடி தீர்வு காணப்படுகிறது.


காலையில்… மாலையில்… வார்டு உலா

காலை வார்டு பகுதிகளை நேரில் பார்வையிடுவது, மாலையில் தெருவிளக்குகள் சரிவர எரிகிறதா என்பதை ஆய்வு செய்வது ஆகியவற்றை தினசரி வேலையாக வைத்துள்ளேன்.

இளைஞர்களின் ஆதரவால்..

எனது வெற்றிக்கும், மக்கள் பணி சிறப்பாக நடைபெறுவதற்கும் என் பகுதியை சேர்ந்த அம்பேத்கர் மன்றம் மற்றும் இளைஞர்களின் ஆதரவு பெரும் பங்கு வகிக்கின்றது. அவர்களை ஊக்குவிக்கும் விதமாக வேதாந்திரி நகர் பூங்கா வில் சொந்த செலவில் உடற்பயிற்சி கருவிகள் வழங்கி உள்ளேன்.

வார்டில் புதிய நூலகங்கள்

வார்டு பகுதியில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் பெயரில் புதிய நூலகங்கள் அமைப்பது மற்றும் பழைய நூலகங்களை புதுப்பிப்பது, ஈ.பி.ரோட்டில் சிமெண்டிலான அம்பேத்கர் சிலை உள்ளது. அதனை புதிய வெண்கல சிலையாக இளைஞர்களின் ஒத்துழைப்புடன் அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்டுள்ளேன்.

வார்டை கண்காணிக்க…

வார்டு பகுதியில் சமூக குற்றங்கள் நிகழாமல் தடுக்க சிசிடிவி கேமராக்கள் அமைக்க சில நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும்.

ரெட்டை வாய்க்காலோரம் நடைபாதை

மேலும், 10 வார்டுகளில் பயணிக்கும் ரெட்டைவாய்க்கால் (ஒரு காலத்தில் பாசன வாய்க்காலாக இருந்தது) மதில் சுவர் கட்டி நடைப்பாதை அமைப்பதற்கான ஓராண்டு காலமாக மேயர் மற்றும் ஆணையரிடம் வலியுறுத்தி வருகின்றேன். சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கூடுதல் நிதி பெற்று சமுதாயக்கூடம், படிப்பகம் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் விரைவில் நிறைவேற்றுவேன்.

 

அரசியல் பயணம்
2000- – தனியார் மயமாக்குதலை கண்டித்து திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டம்
2001 – திண்ணியம் சம்பவத்தை கண்டித்து நடைபெற்ற பொதுக்கூட்டம்
2005 – மூன்றாவது மொழிப்போர் மாநாடு மற்றும் அணிவகுப்பு (திருச்சி ஜி-கார்னரில் நடைப்பெற்ற முதல் அரசியல் மாநாடு)
200 – உழவர் சந்தையில் நடைபெற்ற சான்றோர்களுக்கு விருது வழங்கும் விழா ஆகியவற்றுக்கு ஒருங்கிணைப்பாளராக…
2019 – தேசம் காப்போம் மாநாடு
2020 – தேசம் காப்போம் அணிவகுப்பு (பல லட்சம் பேர் பங்கேற்பு) ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு குழுவில் ஒருவராக சிறப்பாக பணியாற்றி உள்ளேன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.