சீட்டிங் பெண்ணுக்காக போலீஸை மிரட்டும் எஸ்.பி. மனைவி

-எம்.எஸ்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பலரிடமும் கடன் வாங்கி ஏமாற்றும் பெண்ணிற்கு ஆதரவாக ஒரு போலீஸ் எஸ்.பி.யே விசாரணை அதிகாரியை  மிரட்டுகிறார்.  இதனால், மோசடி பெண் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறிவருகிறோம் என்று போலீஸாரிடமிருந்தே கதறல்கள் வர, விசாரிக்க ஆரம்பித்தோம்.

மோசடியில் ஈடுபடும் பெண் கோகிலா. சென்னை, எம்.ஜி.ஆர் நகர், பம்மல் நல்லத்தம்பி தெருவைச் சேர்ந்தவர் இந்த  கோகிலா. ஏலச்சீட்டு நடத்துவது, தண்டலுக்கு விடுவது, வட்டிக்கு விடுவது என பல்வேறு கொடுக்கல் வாங்கல் வேலைகளை செய்து வருகிறார்.   தனது மோசடிகளிலிருந்து தப்பிக்க அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், போலீஸ் உயரதிகாரிகள் என சமூகத்தில் அந்தஸ்தான பதவியில் இருப்பவர்களின் வீடுகளில் வீட்டு வேலைக்கு சேர்வது தான் கோகிலாவின் டெக்னிக். பலரிடமும் பணத்தை வாங்கிக்கொண்டு திருப்பிக் கொடுப்பதில்லை. அப்படியே, பணம் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டால்,   ‘நீங்க கடன் கொடுக்கல. அதிக வட்டிக்கு பணம் கொடுத்தீங்கன்னு சொல்லி உங்களையே ஜெயிலுக்கு அனுப்பிடுவேன்’ என்றெல்லாம் மிரட்டுவார்.

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

கடந்த 2016ஆம் ஆண்டு கோகிலா தனது கணவருடன் சேர்ந்து அதே தெருவைச் சேர்ந்த சுந்தரி என்பவரிடம்  ரூ.1 லட்சம் கடன் வாங்கியுள்ளனர்.  கோகிலாவிடம்   பத்திரம் எழுதி பணம் கொடுத்துள்ளார். என்றாலும் பல மாதங்களாகியும் பணம் கிடைத்தபாடில்லை.   இது குறித்து பணம் கொடுத்து ஏமாந்ததாக புகார் கொடுத்த  சுந்தரியை தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது,  “பலரிடமும் பணத்தை வாங்கிவிட்டு, ‘தன்னை யாரோ ஒருத்தர் ஏமாத்திட்டாங்க. அதனால தான் பணத்தை திருப்பி தர முடியல’ என்று ரொம்ப நாளாகவே இழுத்தடித்துக் கொண்டிருந்தார் கோகிலா.

நடையாய் நடந்து கெஞ்சி கூத்தாடியதில் ஆயிரம், ஆயிரம் ரூபாயாக   7,000 ரூபாய் வரை கொடுத்தார். எப்போது கேட்டாலும், அப்புறம் தருகிறேன் என்று சொல்வாரே தவிர, கொடுக்கமாட்டார். வேற வழியில்லாமல் தான் சென்னை, எம்.ஜி.ஆர் நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தேன்.  அப்போது, சம்பந்தமே இல்லாமல் ஒரு பெண்ணை அழைத்து வந்து இவருக்குத் தான்  கடன் வாங்கிக் கொடுத்தேன். இவர் கொடுத்தால் தான் நான் திருப்பிக் கொடுக்க முடியும் என்று புது கதையை அவிழ்த்துவிட்டார் கோகிலா.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

“அந்த பெண் யார் என்றுகூட எனக்கு தெரியாது. நான் உன்னிடம் தானே கடன் கொடுத்தேன்” என்று போலீஸ் நிலையத்தில் கூறினேன்.   பின்னர் கடன் வாங்கியதை ஒப்புக்கொண்ட கோகிலா. ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாயாக கொடுத்துவிடுவதாக ஒப்புக்கொண்டார். முதலில் ரூ.3,000 கொடுத்தார், பிறகு 2,000 ரூபாய் தான் உள்ளது என்று கொடுத்தார். பிறகு, கொடுக்கவில்லை. 4, 5 மாதங்களாக கொடுக்கவே இல்லை. போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கேட்ட போது,  புதிதாக எஸ்.பி.கிட்ட வேலைக்கு சேர்ந்து கொண்டு அவர் பெயரைச் சொல்லி  மிரட்ட ஆரம்பித்தார். இது குறித்து நான் காவல்நிலையத்தில் சொன்னதும், இந்த வழக்கை எஸ்.ஐ பாலமுருகனிடம் ஒப்படைத்தார் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பூமாறன்.

கோகிலாவை அழைத்து விசாரித்த பாலமுருகன், “மாதம் 5,000 ரூபாய் கொடுக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை 3,000 ரூபாய் கொடு” என்று பேசிப் பார்த்தார்.  ஆனால், எஸ்.பியும் அவரது மனைவியும் ஃபோன் செய்து கோகிலாவுக்கு ஆதரவாக பேசினார்கள். இதனால், எஸ்.ஐ.யாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.  மீண்டும் நான் இன்ஸ்பெக்டர் பூமாறனிடம் சந்தித்து பேசினேன். திடீரென்று, ‘எல்லா பணமும் கொடுத்துட்டேன்’ என்று அதிர்ச்சி கொடுத்தார் கோகிலா. ஸ்டேஷனில் வந்து இதுவரை  எனக்கு ரூ.11,000 மட்டுமே கொடுத்துள்ளார். மீதி, 72,000  ரூபாய் தரவேண்டும். ஆனால், கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார்.  என்னைப் போல் யாரும் இவரிடம் பணம் கொடுத்து ஏமாறக்கூடாது என்பதற்காகத் தான் புகாரே கொடுத்தேன்” என்று கண்கலங்குகிறார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதுகுறித்து பட்டாலியன் எஸ்.பி.யின் மனைவி  உமா என்பவரை தொடர்பு கொண்டு நாம் பேசியபோது, “எனது கணவர்  செந்தில் பூந்தமல்லி  பட்டாலியன் எஸ்.பி.யாக உள்ளார். கோகிலா என்பவர் எங்கள் வீட்டில் வேலை செய்வது உண்மை தான். கோகிலா, கடன் வாங்கவில்லை.  இன்னொருவருக்காக கேரண்டி கையெழுத்து தான்  போட்டிருக்கிறார். வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுப்பதாக காவல்நிலையத்தில் கோகிலா எழுதி கொடுத்ததாக எஸ்.ஐ. பாலமுருகன்   என்னிடம்  பேசினார்.  இது, சிவில் கேஸ். இதில் நீங்கள் எழுதியெல்லாம் வாங்க முடியாது. கோர்ட்டுக்கு போகச் சொல்லுங்கன்னு சொல்லிட்டேன். மற்றபடி எனக்கும் இதற்கும் எந்த தொடர்புமில்லை” என்று  நம்மிடம் கூறினார்.

இது குறித்து, பூந்தமல்லி பட்டாலியன் எஸ்.பி செந்திலை நாம் தொடர்புகொண்டு பேசியபோது,  “என்கிட்ட வேலை பார்க்கிறவங்களுக்கு ஒரு பிரச்சனைனு வந்தா அவங்களுக்காக நான்  ஸ்டேஷன்ல பேசத் தான் செய்வேன். நீங்க முடிஞ்சதை எழுதிக்கோங்க” என்று டென்ஷனாக பேசியவரிடம், “உங்களுக்கு வேண்டப்பட்டவர் என்பதால்  பலரிடமும் ஏமாற்றியவருக்காக  நீங்கள் பரிந்து பேசலாமா? என்று நாம் கேட்டபோது, “அதெல்லாம் பிரச்சனை இல்லை. இதுமாதிரி ஏகப்பட்ட பரிந்துரைகள் வரும்.  அதையெல்லாம் நானே விசாரித்துவிட்டு பரிந்துரை செய்யமுடியுமா என்ன?  பாதிக்கப்பட்டவங்களை கோர்ட்டுக்கு போகச் சொல்லுங்க. ஏன் கோர்ட்டுக்கு போக மாட்டேங்குறாங்க?” என்று அலட்சியமாக பேசினார் எஸ்.பி. செந்தில்.

இதையடுத்து, பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டு,  எஸ்.பி செந்தில் மற்றும் அவரது மனைவி உமா பெயரைச் சொல்லி மிரட்டுகிறார் கோகிலா  என்று  சுந்தரி துணை ஆணையரிடம்  புகார் கொடுத்துள்ளார். அதேவேளையில், எம்.ஜி.ஆர். நகர் ஸ்டேஷன் போலீஸார் தன்னை மிரட்டுவதாக  காவல்துறை துணை ஆணையராக இருந்த ஹரிகிரன் பிரசாத் ஐ.பி.எஸ்.ஸிடம் புகார் கொடுத்துள்ளார் கோகிலா.

புகார் குறித்து எம்.ஜி.ஆர் நகர் காவல்நிலைய போலீஸார் நம்மிடம் கூறுகையில்,  “கோகிலா பணம் வாங்கிக்கொண்டு  ஏமாற்றிவிட்டதாக சுந்தரி என்பவர் எங்களிடம்  புகார் கொடுத்தார்.  இதுபோன்ற புகார்களில் இரு தரப்புக்கும் சண்டையாகி  அது சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மாறிவிடக்கூடாது  என்பதற்காகத் தான் ஆரம்பக்கட்ட விசாரணையை  செய்தோம். கோகிலாவை எந்தவிதத்திலும் மிரட்டவில்லை.

முதலில் கடனே வாங்கவில்லை என்றவர், பின்னர் கடன் வாங்கியதை ஒப்புக்கொண்டு  மாதாமாதம் தவணையில்  பணத்தை  திருப்பிக் கொடுத்துவிடுவதாக எழுதிக் கொடுத்த வீடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது. அதில், அவர் காவல்நிலையத்திற்கு வந்து செல்லும் வரை எந்த மிரட்டலுக்கும் ஆளாகவில்லை என்பது தெளிவாக உள்ளது. எந்த விதத்திலும் அவர் மிரட்டலுக்குள்ளாகவும் இல்லை. பணத்தை திருப்பிக் கொடுக்காமல் பழியை போடுகிறார்” என்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் கோகிலாவின் மோசடிக்கு துணைபோகும் விதமாக உள்ளது எஸ்.பி.செந்தில், அவரது மனைவி உமா ஆகியோரின் அதிகார துஷ்பிரயோகம். இதை உணர்ந்து கொண்டு எஸ்.பி. செந்தில் கோகிலாவிற்கு ஆதரவு தெரிவிப்பதை விட்டுவிட்டால் மட்டுமே சுந்தரிக்கு எம்.ஜி.ஆர். நகர் காவல்நிலைய போலீஸார் சட்டப்படி உதவ முடியும். என்ன செய்யப் போகிறார் எஸ்.பி.?

 

எஸ்.பி. செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி உமா ஆகியோரின் சிபாரிசால் மிரண்டுபோன எம்.ஜி.ஆர் நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பலவேசம், புகார் கொடுத்த பெண்மணி சுந்தரியை தரக்குறைவாகப் பேசி மிரட்டியதோடு “இந்த பக்கமே வரக்கூடாது. இனி இந்த புகாரை கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறேன் என்று எழுதிக்கொடுத்துவிட்டு போ” என்று மிரட்டியுள்ளார். இன்ஸ்பெக்டர் பலவேசம்  எம்.ஜி.ஆர் நகர் காவல்நிலையத்தில் சட்டம்- ஒழுங்கு ஆய்வாளராக இருந்து குற்றப்பிரிவு ஆய்வாளராக  மாற்றப்பட்டவர். ஏற்கனவே இந்த புகாரை விசாரித்த குற்றப்பிரிவு ஆய்வாளர்  பூமாறன் அதே காவல்நிலையத்தில் சட்டம் – ஒழுங்கு ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டி.சி ஹரிகிரன் பிரசாத்திற்கு பதிலாக இன்சார்ஜ் டி.சி இருந்தும்கூட, டி.சி ஹரிகிரன் பிரசாத்திடம் 18-03-2022 அன்று  கொடுக்கப்பட்ட புகார் எம்.ஜி.ஆர் நகர்  காவல் நிலையத்திற்கு  அனுப்பப்படவில்லை.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.