நடமாடும் சாராயக் கடைகள் சீரழியும் மாணவர்கள்.. பச்சமலை பரிதாபம்
-ஜோஸ்
திருச்சி மாவட்டத்தில், துறையூரில் உள்ள பச்சமலை இயற்கை எழில் கொஞ்சும் இடமாகவும், இயற்கை முறையில் விவசாயம் செய்த சிறுதானியங்கள் மற்றும் மா, பலா, முந்திரி, மரவள்ளிக் கிழங்குகள் ஆகியவற்றை அங்கு வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்கள் பயிர் செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டி பிழைப்பு நடத்தி வந்த காலங்கள் போய், தற்போது கால மாற்றத்தால் மரவள்ளிக் கிழங்கு மட்டுமே பயிர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் அடுத்த தென்புற நாடு என அழைக்கப்படுகின்ற ஊராட்சியில், டாப்.செங்காட்டுப்பட்டி, பெரும்பரப்பு, நக்சிலிப்பட்டி, சேம்பூர், குண்டக்காடி, லட்சுமணபுரம், கம்பூர், தண்ணீர் பள்ளம், காணாப்பாடி, புத்தூர், கருவங்காடு, பூதக்கால், சோளமாத்தி என சுமார் 16 மலைக்கிராமங்கள் உள்ளன. இவற்றில் தற்போது கள்ளச்சாராயம் வியாபாரம் அமோகமாக நடந்து கொண்டிருப்பதாகவும், மலைக்கிராமங்களில் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் கள்ளச்சாராயம் மற்றும் டாஸ்மாக் சரக்குகள் தாராளமாக கிடைப்பதாகவும் தெரியவருகிறது. இவற்றை இருசக்கர வாகனமான ஸ்கூட்டி, பைக் ஆகியவற்றில் மறைத்து எடுத்துக் கொண்டு, “நடமாடும் சரக்கு” கடைகளாகவே விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இது பற்றி மேலும் விசாரித்த போது பல அதிர்ச்சிகர தகவல்கள் தெரிய வந்தது.
16 மலைக்கிராமங்களில் புத்தூர், கம்பூர், தண்ணீர்பள்ளம் ஆகிய 3 கிராமங்களில் ஒரு சில நபர்கள் கூட்டு சேர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி மலைக்கிராமங்களில் விற்பனை செய்வதும், குறிப்பாக புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ்காரரின் தந்தையே டாஸ்மாக் சரக்குகளை வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாகவும், அதே கிராமத்தில் உள்ள ராஜீ, மணிவேல் ஆகியோர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதையே வழக்கமான தொழிலாக செய்து விற்று வருவதாகவும் தெரிய வந்தது.
மேலும் உப்பிலியபுரம் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரியும் ஒருவரின் மச்சினன் தான் புத்தூரில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் மணிவேல் என்பதால், கீழே இருந்து போலீஸ் ரெய்டு வந்தால் ஏட்டு தனது மச்சினனிடம் தகவல் தருவாராம். உடனடியாக அனைவரையும் உஷார் செய்து விடுவது மணிவேலின் வழக்கமாம்.
கள்ளத்தனமாகவும், அரசு மதுபானங்களைப் பதுக்கி வைத்தும் விற்பனை செய்பவர்கள் குறிவைப்பது, 17 வயது முதல் 25 வயதுடைய மாணவர்கள் மற்றும் வாலிபர்களைத் தான் என்ற தகவலும் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமையானால் டாப்-செங்காட்டுபட்டி கைகாட்டியில் 17 வயது முதல் உள்ள வாலிபர்கள் மது அருந்தி போதையில் ஆட்டமும், பாட்டமுமாக அதகளம் செய்வது வழக்கமான நிகழ்வாகும்.
ராஜீ என்பவர் ஏற்கனவே கள்ளச்சாராயம் காய்ச்சிய வழக்கில் 3 முறை கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர். இவரும் உப்பிலியபுரம் போலீஸ் ஏட்டு மச்சினன் மணிவேல் ஆகியோர் இதையே தொழிலாக செய்து போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி வருகின்றனர்.
போலீஸ் ஏட்டின் துணையுடன் நடமாடும் சாராயக் கடைகளாக விஸ்வரூபம் எடுத்து மாணவர் கள் உள்ளிட்ட அனைவரது வாழ்க்கையையும் சீரழிக்கும் விதமாக கள்ளச்சாராயம் உள்ளிட்ட மது விற்பனையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பதே மலைவாழ் மக்கள் உள்ளிட்ட அனைவரின் கோரிக்கையாகும்.