அரசியலையே விஞ்சும் ஆன்மீக அரசியலில் தூள் பறக்கும் ஜீயர் – சிஷ்யர்களுக்கிடையிலான பங்காளி சண்டை! சர்ச்சையில் ஸ்ரீரங்கம் பெருமாள்

0
பங்காளி சண்டைக்கு முன் ஒன்றுக்குள் ஒன்றாக இருந்தபோது ...
பங்காளி சண்டைக்கு முன் ஒன்றுக்குள் ஒன்றாக இருந்தபோது …

ஜீயர் – சிஷ்யர்களுக்கிடையிலான பங்காளி சண்டை! சர்ச்சையில் ஸ்ரீரங்கம் பெருமாள் ! ”ஜீயர் என்னை அடித்துவிட்டார்” என்று எண்பது வயது பெருமாள் பக்தர் கோவிந்தராமானுஜம் ஒருபக்கம் அலற … ”மடத்தின் சொத்துக்களை மீட்டெடுக்க நினைக்கும் ஜீயருக்கு எதிராக சிலர் சதி செய்கிறார்கள். ஜீயரையே மிரட்டுகிறார்கள்” என அவரது பக்தர்கள் பதற … தேர்தல் அரசியலையே விஞ்சும் அளவுக்கு ஆன்மீக அரசியல் தூள் பறத்துகிறது, ஸ்ரீரங்கத்தில்.

பலஹாரி புருஷோத்தம ராமானுஜ ஜீயர் மடம்
பலஹாரி புருஷோத்தம ராமானுஜ ஜீயர் மடம்

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில், ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்திலிருந்து கண்ணுக்கெட்டும் தொலைவில் அமைந்திருக்கிறது, ”ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயில் பலஹாரி புருஷோத்தம ராமானுஜ ஜீயர் மடம்”. ஸ்ரீரங்கம் பகுதியில் சிறியதும் பெரியதுமாக செயல்பட்டுவரும் மடங்களுள் ஒன்று. வருடத்திற்கு நான்கு முறை உற்சவர் (ஸ்ரீரெங்கநாதர்) இந்த மடத்திற்கு வந்து செல்கிறார் என்பதோடு, 300 வருடங்களுக்கும் மேலான பழமையான – பாரம்பரியம் கொண்ட மடமாகவும் இருந்து வருகிறது.

- Advertisement -

- Advertisement -

ஸ்ரீரங்கம் கோவில் உற்சவர் வந்து இளைப்பாறும் மடம்
ஸ்ரீரங்கம் கோவில் உற்சவர் வந்து இளைப்பாறும் மடம்

ஸ்ரீரங்கத்தில் மட்டுமே ராஜகோபுரம் நோக்கிய திசையில் 6 இடங்களும்; அம்மா மண்டபம் நோக்கிய திசையில் மூன்று இடங்களும்; தொட்டியம், இலால்குடி, ஈரோடு கொடுமுடி என தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இம்மடத்தின் சொத்துக்கள் குவிந்து கிடக்கின்றன. மிக முக்கியமாக, அம்மா மண்டபத்தின் மிக அருகாமையில் ஒரு காலத்தில் இம்மடத்தின் நந்தவனமாக இருந்த சுமார் 46,000 சதுர அடி நிலம்; ராகவேந்திரா கோயிலுக்கு எதிரில் 3600 சதுர அடி நிலம் என ஸ்ரீரங்கத்தை சுற்றியே பல கோடி மதிப்பிலான காலி இடங்கள் இம்மடத்துக்கு சொந்தமாக இருக்கின்றன.

5-வது பட்டம் பெற்ற ஜீயர் மறைவையடுத்து, பத்து வருடங்களுக்கு முன்பு வரையில், இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்த இந்த மடம், 6-வது பட்டம் பெற்ற ஜீயர் வருகைக்குப்பிறகே ஜீயரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருக்கிறது. கூடவே, சர்ச்சைகளும் கிளம்பியிருக்கிறது.

”ஸ்ரீஸ்ரீஸ்ரீ பராங்குச புருஷோத்தம ராமாநுஜ”
”ஸ்ரீஸ்ரீஸ்ரீ பராங்குச புருஷோத்தம ராமாநுஜ”

உ.பி.யை பூர்வீகமாக கொண்ட, சுராஜ் ஷர்மா தீட்சை பெற்ற சன்னியாசியாகி 6-வது பட்டம் பெற்ற உத்தராதி ”ஸ்ரீஸ்ரீஸ்ரீ பராங்குச புருஷோத்தம ராமாநுஜ” ஜீயராக மேற்படி மடத்தை நிர்வகித்து வருகிறார்.”பாரம்பரியமான இந்த மடத்துக்கு இளம் வயது ஜீயர் கிடைத்திருக்கிறார். பலரின் கட்டுப்பாட்டில் இருக்கும் மடத்தின் சொத்துக்களை கண்டறிந்து அவற்றை மடத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சி செய்கிறார். பத்து வருடங்களுக்கு முன்பு சொற்ப வாடகை கொடுத்து மடத்தின் இடங்களை வாங்கியவர்கள் இன்று வரையில் அதே வாடகையைத்தான் கொடுப்போம் என அடம் பிடிக்கின்றனர். அவர்களிடமிருந்து மீட்டு நியாயமான வாடகை தர தயாராக இருக்கும் நபர்களிடம் ஒப்படைக்க முயற்சித்தார். இதற்குத்தான் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.” என பிரச்சினையின் பிள்ளையார் சுழியை விவரிக்கிறார், ஜீயரின் சிஷ்யர்களுள் ஒருவரான சுதர்ஷன்.

சுதர்சன்
சுதர்சன்

“இப்போ இருக்கிற ஜீயர் நியாயமாக செயல்படனும் நினைக்கிறார். அதுதான் பிரச்சினை. ஸ்ரீரங்கத்தில் பிரதான இடத்தில் அமைந்திருக்கும் நந்தவனத்தில், ஒரே நபர் 20,000 சதுர அடியை வைத்திருக்கிறார். அதில் லாட்ஜ் கட்டியிருக்கிறார். அவர் வெறும் 5000 வாடகையில் அந்த இடத்தை பயன்படுத்தி வருகிறார். ஆனால், அந்த இடத்திற்கு மாதம் 1 இலட்சம் வாடகை தர ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். சமயபுரம் பக்கத்தில் ஒருவர் 10 ஏக்கருக்கும் மேல் மடத்தின் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். வருட கணக்கில் குத்தகை பணம் தர மறுக்கிறார். இதையெல்லாம் கண்டிப்பாக வசூல் செய்ய முயற்சி செய்கிறார், இந்த ஜீயர். மடத்திற்கு சொந்தமான இடத்தை வைத்துதான் இவ்வளவு பிரச்சினையும்…” என்கிறார், ஜீயரின் சிஷ்யரும் அதிமுகவை சேர்ந்த பிரமுகருமான இளையராஜா.

 இளையராஜா
இளையராஜா

“எனக்கு தமிழ் தெரியாது. கே.சீனிவாசன், ரா.விளாஞ்சோலை ராமானுஜம், கு.அருணாச்சலம், சி.கிருஷ்ணப்பா, ச.கோவிந்தராஜன் ஆகிய ஐந்து நபர்கள் இம்மடத்தின் ஆலோசணை கமிட்டியில் இருந்து வந்தார்கள். அவர்களை நம்பி சில காரியங்களை செய்தேன். அவர்கள் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்பதற்காக அந்த ஆலோசணை குழுவை கலைத்தேன். சிலரை வேலையிலிருந்து நீக்கினேன். தற்போது அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டு இந்த மடத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள்.

ஆலோசனை குழுவை நீக்கிய ஜீயர்
ஆலோசனை குழுவை நீக்கிய ஜீயர்

SRINIVASA PERUMAL THIRU KOVIL BALAHARI PURUSOTHAMA RAMANUJA JEEYAR MADAM என்ற பெயரில் கனரா வங்கியில் கணக்கு தொடங்கி மடத்தின் வரவு – செலவு கணக்குகளை நிர்வகித்து வருகிறோம். இந்த நிலையில், இந்த மடத்திற்கு சம்பந்தமே இல்லாத மேற்படி நபர்களுள் ஒருவரான கோவிந்த ராமானுஜம் என்பவர் பக்தர்களிடையே குழப்பத்தை உண்டுபண்ணும் விதமாக, “PALAKARI PURUSOTHAMA RAMANUJA JEEYAR MUTT ADMINISTRATION CHARITABLE TRUST” என்ற பெயரில் டிரஸ்ட்-ஐ தொடங்கியிருக்கிறார். அதுவும் எங்களது மடத்தின் முகவரியை சட்ட விரோதமாக பயன்படுத்தியிருக்கிறார். மடத்திற்கு எதிராக ஆதாரமில்லாத பல புகார்களை இந்து அறநிலையத்துறைக்கு அனுப்பி வருகிறார்கள். அவர்களை வைத்து மடத்தின் வாடகைதாரர்களுக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள். இவர்களுக்கு பின்புலமாக, ராஜபெருமாள் என்கிற வாமன ராஜா என்பவர் செயல்படுகிறார்.” என நீண்ட புகாரை வாசிக்கிறார், ஜீயர்.

4 bismi svs
ஜீயர்
ஜீயர்

”ஸ்ரீரங்கம் ராகவேந்திரா மடத்திற்கு சொந்தமான பல்வேறு இடங்களை 25 வருடங்களுக்கு முன்பாகவே, 99 வருட குத்தகைக்கு எடுத்துக்கொண்டு அதில் லாட்ஜ் உள்ளிட்ட கட்டிடங்களை கட்டி வாடகைக்கு விட்டிருக்கும் வாமனராஜா, ரியல் எஸ்டேட் பிசினசும் செய்கிறார். ராகவேந்திரா கோவிலுக்கு எதிரில் காலி இடமாக இருக்கும் 3600 சதுர அடி நிலம் மற்றும் 42,0000 சதுர அடி நந்தவனம் ஆகியவற்றை கைப்பற்றுவதற்காகத்தான் கோவிந்தராமானுஜத்தை தூண்டிவிட்டு இவ்வளவு மெனக்கெடுகிறார். ஸ்ரீரங்கம் பகுதியில் அவரது கட்டுப்பாட்டில் உள்ள மடத்துக்கு சொந்தமான இடங்கள் மீதான உரிமையியல் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன.” என்கிறார், பெயர் வெளியிட விரும்பாத ஸ்ரீரங்கத்து வாசி ஒருவர்.

வாமன ராஜா
வாமன ராஜா

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அறிய ஸ்ரீரங்கம் வாமனராஜாவிடம் அங்குசம் சார்பில் பேசினோம். ”மடத்தின் சொத்தை அபகரிக்க நான் முயற்சி செய்கிறேனா என்று நீங்கள் கேட்கும் கேள்வியே மன வேதனையை தருகிறது. இந்த மடத்தின் சொத்துக்களை விட பத்து மடங்கு சொத்து வைத்திருக்கிறேன். இன்றைக்கு மாதம் வாடகையே 40 இலட்சம் வருகிறது. ஸ்ரீரங்கத்தை தாண்டி தமிழகத்தில் பல இடங்களில் எனது ப்ராஜெக்ட்டுகள் இருக்கின்றன. மடத்தின் சொத்தை அபகரித்து என் பிள்ளைகளுக்கு பாவத்தையும் சேர்த்து வைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. எனக்கும் இந்த மடத்துக்கும் 30 வருட பந்தம் இருக்கிறது.

இதே ஸ்ரீரங்கத்தில் 50 பைசா கூலிக்கு மூட்டை தூக்கியவன் நான். அப்போது பத்தாயிரம் ரூபாய் கொடுத்து என்னை கைத்தூக்கி விட்டவர் 5-வது ஜீயர். பெருமாளின் புண்ணியத்தில்தான் இன்று நான் பல கோடிகளுக்கு அதிபதியாகியிருக்கிறேன். ஏழெட்டு கார்களை வைத்திருக்கிறேன். இது அவர்களின் கண்களுக்கு உறுத்தலாக இருக்கிறது. இந்த மடத்தின் மண் நெருப்பு மாதிரி. அபகரிக்க நினைப்பவர்கள்தான் ஒன்றுமில்லாமல் போவார்கள். பலர் அப்படியும் ஆகியிருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில், இந்த ஜீயர் குறித்து நல்ல அபிப்ராயம் எனக்கு இல்லை.

பத்து வருடங்களுக்கும் மேலாக இந்து அறநிலயத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மடத்தை, அரும்பாடுபட்டு மீட்டெடுத்தது இந்த ஜீயர் குறை சொல்லும் அந்த 5 நபர்கள்தான். இன்னும் சொல்லப்போனால், ஜீயர் என ஒருவரை வைத்து பட்டாபிஷேகம் செய்தால்தான் இந்து அறநிலையத்துறையிடமிருந்து இந்த மடத்தை மீட்க முடியும் என்று, உ.பி.க்கு சென்று இந்த ஜீயரை கூட்டி வந்ததே நாங்கள்தான். தொடக்கத்தில் வாமனராஜா தான் என் உயிர் என்றார் இந்த ஜீயர். இப்போது எதிரியாக்கி விட்டார். இவர் சரியாக செயல்படுவார் என நம்பி கொண்டு வந்தோம். இவரது போக்கு சரியில்லை எனவே ஒதுங்கிவிட்டோம். இவர் குற்றம் சொல்லும் 5 நபர்களும் 70 வயதை கடந்தவர்கள். எல்லோரும் நல்ல வசதியான பின்னணியை கொண்டவர்கள்.

நல்ல நோக்கத்திலிருந்து இந்த அறநிலயத்துறையிடமிருந்து மடத்தை மீட்டோம். இப்போது, மீண்டும் இந்து அறநிலயத்துறையின் கட்டுப்பாட்டிற்கே இந்த மடம் செல்ல வேண்டும் என்பதுதான் எங்களைப் போன்றவர்களின் விருப்பமாக இருக்கிறது.” என்கிறார், ஸ்ரீரங்கத்தை சேர்ந்த வாமன ராஜா. “அன்று ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து இவருக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்தோம். அப்போது என்னை அப்பா என்று அரவணைத்தார். அவரது முறைகேடுகளை சொன்னபோது விரோதியாக்கிவிட்டார்.

கோவிந்த ராமானுஜர்
கோவிந்த ராமானுஜர்

இவர் பூர்வாஸ்ரம பெயரான சுராஜ் சர்மா என்ற பெயரில் எஸ்.பி.ஐ. ஸ்ரீரங்கம் வங்கிக்கிளையில் பராமரிக்கும் தனிப்பட்ட கணக்கில் 4 இலட்சம் போட்டிருக்கிறார். 20 இலட்சம் ரூபாய் கையாடல் செய்துவிட்டதாக சென்னை தலைமை இயக்குநர் தணிக்கை துறைக்கு புகார் கொடுத்திருக்கிறோம். அதிகாரிகள் தரப்பில் அதற்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள். இவர் நேபாளத்தை பூர்வீகமாக கொண்டவர் உ.பி.யில் போலியாக ஆதார் அட்டையை உருவாக்கி ஏமாற்றி ஜீயராக ஆகியிருக்கிறார். மடத்து சிஷ்யர்களால் நியமிக்கப்பட்ட இந்த ஜீயரை மடத்து சிஷ்யர்கள் சங்க பொதுக்குழுவை கூட்டி இந்த ஜீயரை பதவி நீக்கம் செய்துவிட்டோம். இந்த ஜீயர் மடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்கிறோம். இதனையெல்லாம் கேட்டதற்காக என்னை அடித்துவிட்டார் ஜீயர். கடந்த பத்து நாட்களாக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன்.” என்கிறார், கோவிந்தராமானுஜம்.

”மடம் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருந்து மடத்தின் நேரடி நிர்வாகத்திற்கு கொண்டு வருவதற்கு ஜீயர் என்று ஒருவர் வேண்டும். சிஷ்யர்கள் என்ற பெயரில் சிலர் சேர்ந்து இவரை உ.பி.யிலிருந்து கொண்டு வந்து பட்டாபிஷேகம் செய்துவைத்து ஜீயர் ஆக்கினார்கள். மடமும் ஜீயரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஆனாலும், இந்து அறநிலயத்துறை சட்டப்படி, இதுபோல சுயேட்சையாக இயங்கும் மடங்களுக்கு ஆலோசணை கமிட்டி என்பது போன்ற ஒரு நிர்வாக ஒழுங்கமைப்பு இருக்க வேண்டும். ஜீயர் பரிந்துரைக்கும் நபர்களை இந்து அறநிலையத்துறை அங்கீகரிக்கும். அதன்படிதான் முதலில் அந்த ஐந்து நபர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

உச்சக்கட்ட வாக்குவாதம்
உச்சக்கட்ட வாக்குவாதம்

நாங்கள்தான் ஜீயரையே கொண்டுவந்தோம். ஆக நாங்கள் சொல்கிறபடிதான் ஜீயர் நடந்துகொள்ள வேண்டுமென” பழைய ஆட்கள் எதிர்பார்க்கிறார்கள். ”நான்தான் மடத்துக்கு அதிபதி நீங்கள் சிஷ்யர்கள்தான். ஆலோசணைக்கமிட்டி என்றால் ஆலோசணை சொல்வதற்குத்தான். அதிகாரம் செய்யக்கூடாது.” என ஜீயர் தரப்பிலும் எதிர்பார்க்கிறார்கள். இரண்டு தரப்பிலும் ஏதோ டெர்ம்ஸ் ஒத்துப் போகவில்லை, அதுதான் பிரச்சினை என்பது புரிகிறது. இந்த ஜீயரை கொண்டு வந்ததே இவர்கள்தான். இப்போது இவர்களே போர்ஜரி என போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் கோவிந்தராமானுஜத்திடம் முரண்பட்டு வெளியேற்றியவர், அவர் கோர்ட் – கேஸ்னு போனபிறகு மீண்டும் மடத்துக்கு அழைத்து வைத்துக்கொண்டார், ஜீயர். இப்போது பழையபடி வெளியேற்றியிருக்கிறார். இப்படி இரண்டு தரப்பிலுமே தங்கள் தேவைக்கேற்றபடிதான் மாற்றி மாற்றி பேசி வருகிறார்கள்.

ஆன்மீக அரசியல்
ஆன்மீக அரசியல்

பொதுவில் இந்த விவகாரம் ஆச்சாரம், ஆன்மீகம் என்பது பற்றியதாக இல்லாமல், “அதிகாரம்” பற்றியதாகவே இருக்கிறது. மடம் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தால் செயல் அதிகாரியை கையில் போட்டுக்கொண்டு காரியம் சாதிப்பது. மடத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தால், ஜீயரை கையில் போட்டுக் கொள்வது. சரிபட்டு வரவில்லையென்றால், அவரை பலிகிடாவாக ஆக்குவது. இந்து அறநிலையத்துறையை வைத்து குடைச்சல் கொடுப்பது. ஆண்டாண்டு காலமாக இதையேத்தான் செய்து வருகிறார்கள்.

இதுபோல ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பல்வேறு மடங்களின் சொத்துக்கு உரிமை பாராட்டி ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு தொடுத்த ஏகப்பட்ட வழக்குகள் பல ஆண்டுகளாக முடிவுக்கு வராமல் நீதிமன்றத்தில் நிலுவையில் கிடக்கின்றன. பச்சையாக சொல்லப் போனால், பெருமாள் சொத்துக்காக ரியல் எஸ்டேட் குரூப்களுக்கு இடையிலான அக்கப்போர்தான் சார் இந்த மடத்து விவகாரம்.” என்கிறார், பெயர் வெளியிட விரும்பாத ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பெருமாள் பக்தர் ஒருவர்.

– அங்குசம் புலனாய்வுக் குழு.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.