மாணவர்களுக்கு மனஅழுத்தம் எகிற… ஒன்றிய அரசு போட்ட புதுகுண்டு!

0

மாணவர்களுக்கு மனஅழுத்தம் எகிற… ஒன்றிய அரசு போட்ட புதுகுண்டு!

2024-25ஆம் கல்வியாண்டில் 11, 12ஆம் வகுப்புகளுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையாகக் கொண்டு ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் (23.08.2023) அறிவித்தார். மேலும், தேசியக் கல்விக் கொள்கை 2020இன்படி புதிய பாடத்திட்டக் கட்டமைப்பு (என்சிஎஃப்) தயாராக!விட்டதாகவும், 2024ஆம் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் உருவாக்கப்படும் என்றும் மத்தியக் கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

2 dhanalakshmi joseph

புதிய கட்டமைப்பானது பல மாதங்கள் பயிற்சி மற்றும் மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறையைத் தவிர்த்து, மாணவர்களின் புரிதல் மற்றும் திறமையை மதிப்பிடுவதைப் பரிந்துரைத்துள்ளது. மாணவர்களை மையமாகக் கொண்ட இந்த அணுகுமுறை, பாடங்கள் மற்றும் நடைமுறை திறன்களை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு மாணவர்களை மேம்படுத்த முயலும்.

மாணவர்கள் சிறப்பாகச் செயல்படுவதற்குப் போதுமான நேரமும் வாய்ப்பும் இருப்பதை உறுதிசெய்ய வருடத்திற்கு இரண்டு முறை வாரியத் தேர்வுகள் வழங்கப்படும். மாணவர்கள் தாங்கள் முடித்த பாடங்களில் போர்டு தேர்வில் கலந்துகொண்டு, இரு தேர்வுகளில் எடுக்கும் மதிப்பெண்களில் அதிக மதிப்பெண்ணை அடுத்த படிப்புக்கு வைத்துக்கொள்ளலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் இரு மொழிப் பாடங்களில் தேர்வு எழுதவேண்டும். அதில் ஒன்று இந்திய மொழியாக இருக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

- Advertisement -

ஒன்றிய அரசின் மேற்கண்ட அறிவிப்பு குறித்து, கல்வியாளர் உமா அவர்களிடம் தொடர்பு கொண்டு அங்குசம் செய்தி இதழ் கருத்து கேட்டபோது,“தேசியக் கல்விக் கொள்கையைப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு முடிவெடுத்துவிட்டது என்பது தெளிவாகத் தெரிகின்றது. ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு என்பதுமா ணவர்களுக்கு மனஅழுத்தத்தை அதிகரிக்கவே செய்யும். ஆண்டுக்கு ஒருமுறை தேர்வில் மாணவர்கள் படும் துயரங்கள், இன்னல்கள் கணக்கில் அடங்கா என்ற நிலையில் ஆண்டுக்கு இருமுறை என்றால் மாணவர்கள் நிலை இன்னும் மோசமாகவே போகும் என்பதில் ஐயமில்லை.

ஒன்றிய அரசு அறிவித்துள்ள இந்தப் புதிய நடைமுறையைத் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை ஏற்றுக்கொள்கிறதா? என்பது அறிவிக்கப்பட்ட பின்னர்தான் முழுமையான கருத்தைத் தெரிவிக்க இயலும். ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு என்பதில் முதல்முறையில் ஒரு மாணவர் 99% மதிப்பெண் பெற்றுவிட்டால் அடுத்த முறையில் அந்த மாணவர் எழுதத் தேவையில்லையா? என்பதும் விடைத்தாள் திருத்தும் பணி எப்படி நடக்கும் என்பதையெல்லாம் பற்றி கருத்து இருக்கிறது என்றாலும் தமிழ்நாடு அரசு எடுக்கும் முடிவைப் பொறுத்தே முழுமையான கருத்தைத் தெரிவிக்க இயலும்” என்றார்.

4 bismi svs

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மேனாள் தலைவர் முனைவர் பெ.ஜெயகாந்தி அவர்களுடன் தொடர்பு கொண்டு கருத்து கேட்டபோது,“அடிக்கடி தேர்வு நடத்தினால் மாணவர் அறிவு பெறுவர், திறன் பெறுவர் என்பது போன்ற கருத்துகள் மிகவும் மோசமான கருத்துகள் என்பது என் எண்ணம். அடிக்கடி தேர்வு நடத்துவது மாணவர்களை மனஅழுத்தத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். 1970ஆம் ஆண்டுகளில்தான் கல்லூரிகளில் ஆண்டு தோறும் தேர்வு நடத்தும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்கு முன்பு பட்டப்படிப்புகளில் முதல் மற்றும் 2ஆம் ஆண்டுகளில் தேர்வு என்பதே கிடையாது. 3ஆம் ஆண்டில்தான் எல்லாத் தேர்வுகளும் நடைபெறும்.

இந்த முறையில் படித்தவர்கள்தான் தமிழ்நாட்டில் உயர்ந்த நிலையில் பணியாற்றினார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. 1978இல் பருவத் தேர்வு (செமஸ்டர்) முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் கல்லூரிகளில் மாணவர்கள் மதிப்பெண் அதிகம் பெற்றனர். ஆனால் அறிவு பெறும் திறன் குறைந்தது என்பதே புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மையாகும். 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வு என்பது மாணவர்களின் அறிவுத் திறனைக் குறைக்கவே வழிசெய்யும் என்பதே உண்மை.

ஆண்டுக்கு ஒரு முறை தேர்வுக்கு மாணவர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் கொடுக்கும் அறிவுரைகளால் அழுத்துக்கு ஆளாகின்றனர். தற்கொலைகளும் செய்துகொள்ளுகிறார்கள் என்ற நிலையில் ஆண்டு இருமுறை பொதுத்தேர்வு என்பது மாணவர்களுக்கு எந்த வகையிலும் உதவியாக இருக்காது என்பதே வரலாறு கூறும் உண்மை. இந்த முறையைக் குறித்துத் தமிழ்நாடு அரசு தெரிவிக்கும் கருத்து முக்கியமானதாக இருக்கும்.‘” என்று கூறினார்.

தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் ஒன்றிய அரசு செயல்படுகின்றது. மாநில அரசுகளிடம் கலந்தாலோசிக்காமல் இந்த முடிவை மாணவர்களிடம் திணிக்கிறது. தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்ன சொல்கிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

 

வீடியோ லிங்: 

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.