விளிம்பு நிலை மக்களுக்கு ஊக்கம் அளிக்கிற தலைவர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும் – தொல்.திருமாவளவன்
விளிம்பு நிலை மக்களுக்கு ஊக்கம் அளிக்கிற தலைவர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும்
– கருத்தரங்கத் தொடக்க விழாவில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள்
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத் துறையும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து உலகத்தமிழ் இலக்கிய வரலாற்றில் மலேசிய தமிழ்ப் படைப்பாளர்கள் என்னும் மையப்பொருளில் இருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்தியது. கருத்தரங்கத் தொடக்க விழாவிற்குக் கல்லூரி முதல்வர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர் தலைமை வகித்தார். கல்லூரி செயலர் அருள்முனைவர் கு.அமல் முன்னிலை வகித்தார். ஆய்வுக்கோவையை வெளியிட்டுத் திருச்சிராப்பள்ளி மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முனைவர் அ. குணசேகரன் தொடக்க உரையாற்றினார்.
மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கும், பேராளர்களுக்கும் வளன் தமிழ் விருது வழங்கி சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல்.திருமாவளவன் விழாப் பேருரையாற்றினார். அவர் தம் பேருரையில், மாந்தநேயத்தை விதைப்பதுதான் கிறித்தவத்தின், இசுலாத்தின் அடிப்படை. இவை இரண்டையும் மதம் எனச் சுருக்கி ஆன்மீகம் சார்ந்த கோட்பாடாக மட்டும் பார்க்க இயலாது. இவை இரண்டும் வெறும் புனைவுகளைப் போதிக்கிற அமைப்புகள் அல்ல. மனிதனுக்கு எது தேவையோ அந்தத் தொண்டுள்ளத்தைக் கற்பிக்கிற நிறுவனங்கள்.
மாந்த நேயத்தைப் பரப்புகிற நிறுவனங்களாக இருக்கின்றன. அப்படிப்பட்ட உணர்வுகள் கிறிஸ்தவத்திலும் இஸ்லாத்திலும் இருப்பதால்தான் மனித நேயத்தை போற்றுகிற எண்ணற்ற ஆளுமைகளையும் உருவாக்கி இருக்கின்றன. படைப்பாளர்களும் மாணவச் செல்வங்களும் நிறைந்து இருக்கிற இந்த அரங்கில் நான் சொல்ல விரும்புகிறது ஒன்றே ஒன்றுதான்.
நாம் கற்பதெல்லாம் இந்த மண்ணுலகில் வாழுகிற மனிதகுலத்தைச் சாதியால் தீண்டாமையால் சமயத்தால் இனத்தால் நிறத்தால் பிரிக்காமல், மாந்த நேயத்தை வளர்த்தெடுக்கும் சமூகமாக சகோதரத்துவத்துவச் சமூகமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்கிற உயரிய இலக்காகவே இருக்க வேண்டும்.
அந்த இலக்கையே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கணியன் பூங்குன்றனாரும், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என வள்ளலாரும் பசிப்பிணி ஒழிப்பை முன்னிலைப்படுத்திய மணிமேகலை இலக்கியமும், சித்தர் பாடல்களும் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. வடலூரில் காட்சி தருகிற அருட்பெருஞ்ஜோதியும், நிலைக் கண்ணாடியை கருவறைக்குள் வைத்து அகத்தையே இறைவனாக வழிபடச் செய்த வைகுண்டரும் தமிழ் இலக்கியத்தின் விளைபொருட்களாகவே காட்சி தருகிறார்கள்.
அப்படித் தமிழ் இலக்கியமும் தமிழ்ச் சமூகமும் இந்த மண்ணிற்குத் தந்த மாமனிதர்கள் கட்டமைத்துள்ள இந்த கல்லூரியில் அமர்ந்திருக்கிற மாணவர் செல்வங்களிடம் நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான். நீங்கள் பொறியாளர்களாக, அறிவியலாளர்களாக, அறிஞர்களாக, கண்டுபிடிப்பாளர்களாக வருவதைவிட நல்ல தலைவர்களாக உருவாகி வாருங்கள் எனப் பதிவு செய்தார்.