குமுறிய நிர்வாகிகள்… மெசேஜ் சொன்ன மினிஸ்டர் கே.என்.நேரு !
வீடியோவை காண
குமுறிய நிர்வாகிகள்… மெசேஜ் சொன்ன மினிஸ்டர் கே.என்.நேரு ! திருச்சி மத்திய மாவட்ட திமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் ஆகஸ்டு 29 வியாழக்கிழமை அன்று காலை திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.
மாவட்ட திமுக அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கழக முதன்மை செயலாளர், தமிழ்நாடு அரசு நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கழக, மாநகர கழக நிர்வாகிகள், பகுதி கழக, வட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், மாமன்ற உறுப்பினர்கள், அனைத்து அணியை சேர்ந்த நிர்வாகிகள், கழக மூத்த முன்னோடிகள், செயல்வீரர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் எப்படியும் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றியை பெற்றாக வேண்டும். அதற்கேற்றாற்போல, கட்சித் தொண்டர்கள் இப்பொழுதே களப்பணியைத் தொடங்கிவிட வேண்டும் என்பதாக கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியிருந்த நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.
திருச்சியை பொருத்தமட்டில், கே.என்.நேரு எல்லா விசயங்களிலும் ஆதிக்கம் செலுத்திவருவதாகவும், எம்.எல்.ஏ.க்கள் சிலர் அதிருப்தியில் இருப்பதாகவும் கட்சிக்குள் புகைச்சல் இருந்து வரும் நிலையில், அந்த விவகாரம் இந்தக் கூட்டத்திலும் எதிரொலித்திருப்பதாக தெரிவிக்கிறார்கள் கழக உடன்பிறப்புக்கள்.
கட்சிக்குள் நிலவும் அதிருப்தியை முகநூல் பக்கத்தில் அதிரடியாக வெளிப்படுத்தி பரபரப்பை கூட்டியிருந்தார் இலால்குடி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ சவுந்திரபாண்டியன்.
இந்தக்கூட்டத்தில் அவர் பேசும்பொழுது, இலால்குடி தொகுதியில் உள்ள கட்சித் தொண்டர்களை போல, எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் கட்சிப்பணியாற்ற வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் ஆகப்பெரும்பான்மையாக கழக தொண்டர்களின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும். அடிமட்ட கட்சித் தொண்டர்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். அப்படியெல்லாம் செய்தால்தான், சட்டமன்றத் தேர்தலில் நாம் எதிர்பார்த்த பலனை பெற முடியும் என்பதாக பேசியிருக்கிறார்.
எம்.எல்.ஏ. சவுந்திரபாண்டியன் பேசும்போது, அன்பில் பெரியசாமி குறுக்கிட்டு ஏதோ பேச முனைய, அமைச்சர் உள்ளிட்டு சிலர் உங்களுக்கான வாய்ப்பு வரும்போது பேசுங்கள் என்பதாக சொல்லியிருக்கிறார்கள். தொடர்ந்து பேசிய அன்பில் பெரியசாமி, “மூன்றுமுறை எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறேன். கரூர் மாவட்டத்தில் இளைஞர் அணி பொறுப்பு வகித்திருக்கிறேன். ஆனாலும், கட்சி நிகழ்ச்சிகளில் எனக்கான முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை.
மாநகரக செயலாளரும் மேயருமான அன்பழகன் கூட்டங்களுக்கு என்னை அழைப்பதில்லை. அமைச்சர் சொல்லி இவ்வாறு செய்கிறாரா? இல்லை, அவராகவே இவ்வாறு செய்கிறாரா? என்னை மதிக்க மாட்டேன்கிறார்கள் என்பதை அமைச்சரின் காதுக்கு கொண்டு வர விரும்புகிறேன்.” என்பதாக தனது அதிருப்தியை பதிவு செய்திருக்கிறார், முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி.
எம்.எல்.ஏ. பழனியாண்டி பேசும்போது, ”நாமெல்லாம் வெறும் காகிதம்தான். இந்த காகிதத்தை பட்டமாக உருமாற்றி உயரப் பறக்க வைத்திருப்பது நமது கட்சியின் அடிமட்ட தொண்டர்கள். அவர்கள்தான் நூலாக இருந்து நம்மை உயரப் பறக்க வைத்திருக்கிறார்கள். அவர்களை நாம் புறக்கணித்துவிடக்கூடாது, அவர்களையும் அரவணைத்து சென்றாக வேண்டும்.” என்ற கருத்தில் பேசியிருக்கிறார்.
அமைச்சர் நேருவுக்கு எதிராக எம்.எல்.ஏ.க்கள் சிலர் போர்க்கொடி தூக்கிய விவகாரமும், தலைமைக்கு புகாராக தெரிவித்த விவகாரமும் அமைச்சர் நேருவுக்கு தனிப்பட்ட முறையில் மனவருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். காடுவெட்டி தியாகராஜன்தான் அந்த மனுவில் முதல் கையெழுத்தைப் போட்டிருக்கிறார் என்ற தகவலும் அங்கே விவாதத்திற்கு கிளம்பியிருக்கிறது.
எம்.எல்.ஏ. சவுந்திரபாண்டியன் பகிரங்கமாக கருத்துக்களை வெளிப்படுத்திவிட்டார். ஆனால், துறையூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின்குமார் வெளியில் சொல்லமுடியாமல் தொடர்ந்து புறக்கணிப்புக்கு ஆளாகிவருகிறார் என்பதாக புலம்புகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
அமைச்சரிடம் நல்ல பெயரை எடுக்க வேண்டுமென்ற நோக்கத்தில், துறையூர் பகுதி கழகத்தினர் சத்தமில்லாமல் எம்.எல்.ஏ. ஸ்டாலின்குமாரை புறக்கணித்து வருகிறார்கள், என்கிறார்கள்.
சமீபத்தில் அவரது முன்முயற்சியில் திறக்கப்பட்ட நகர்ப்புற அரசு மருத்துவமனையின் திறப்புவிழா கல்வெட்டில் அவரது பெயரே இடம்பெறாமல் வைக்கப்பட்டதும்; பின்னர் மாவட்ட ஆட்சியரே நேரடியாக தலையிட்டு எம்.எல்.ஏ. பெயருடன் வேறு ஒரு கல்வெட்டு வைத்த சம்பவமும் நடந்திருக்கிறது.
மக்களுடன் முதல்வர் திட்ட விழாக்களில் தொகுதி எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமார் பங்கேற்பதும்; அவர் பங்கேற்று சென்ற பிறகு, ஒன்றிய பிரதிநிதிகள், ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புக்கள் தாங்கள் ஒரு குழுவாக சென்று பங்கேற்பதுமாக இரண்டு பிரிவாக நடத்தும் விழாவாக அரசு விழாவையே மாற்றி வருகிறார்கள் என்பதாகவும் வேதனைபடுகிறார்கள்.
காடுவெட்டி தியாகராஜன், கூட இருந்தே முதுகில் குத்தி வருகிறார்கள். அவர்கள் யார் என்று தெரியும் என்பதாகவும் பேசியிருக்கிறார்.
இவர்கள் எல்லோரும் பேசியதையெல்லாம் மிகவும் உன்னிப்பாகவும் பொறுமையாகவும் கேட்டுக்கொண்டிருந்த அமைச்சர் கே.என்.நேரு, “ எல்லாரும் பேசியது ரைட். நீங்க பேசுன எதையும் மனசுல வச்சிக்கல. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். 30 வருசத்துக்கு முன்னாடி இதே போலதான் கட்சித் தொண்டர்களின் குமுறல்களை கேட்டிருக்கிறேன். இப்போதைக்கு, 2026 இல் கட்சி ஜெயிக்கனும். தலைமை என்ன சொல்லுதோ அதுக்கு நான் கட்டுப்படுறேன்.
யாரை வேட்பாளரா கை காட்டுதோ, அவங்கள ஜெயிக்க வைக்கிறதுதான் என் வேலை. ஒன்னா இருந்து வேலை பார்ப்போம்.” என்பதாக பேசி அமர்ந்திருக்கிறார்.
அமைச்சரை வைத்துக்கொண்டே தொண்டர்கள் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பது ஒரு விசயம். அடுத்து, “தலைமை யாரை கை காட்டுதோ அவங்கள ஜெயிக்க வைக்கிறதுதான் என் வேலை” னு அமைச்சர் சொல்லியிருப்பதும் கழக தொண்டர்களையும், நிர்வாகிகளையும் பல கோணங்களில் யோசிக்க வைத்தும் இருக்கிறது.
– டெல்டாக்காரன்.
வீடியோவை காண