இந்தியாவின் தலைசிறந்த காவல் நிலையம் பட்டியல் உண்மையா ? ஜந்தர்மந்தர் முதல் தொட்டியம் காவல் நிலையம் வரை…. நிஜத் தகவல்…
இந்திய உள்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் இந்தியாவில் திறம்பட செயல்பட்ட 10 காவல் நிலையங்களின் பட்டியலை வெளியிட்டு கௌரவித்து வருகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் வழக்கமான நடைமுறை தான் என்றாலும், தற்போது வழக்கத்துக்கு மாறாக நவம்பர் மாதமே ட்ரெண்டான செய்தி திருச்சியின் டாப் நியூஸாகவும் மாறி உள்ளது.
மேலும் அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவரும் வாழ்த்து கூறி பொன்னாடை அணிவித்து பொக்கே கொடுத்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியில் 7வது இடத்தில் திருச்சி மாவட்டத்திலுள்ள தொட்டியம் காவல் நிலையம் இடம்பெற்றிருப்பதாக சமூக வலைதளங்களில் போட்டோ ஒன்று பரவியது, இதை திருச்சியைச் சேர்ந்த பலரும் பெருமையோடு பகிர்ந்தனர். ஏன் நாளிதழ்களில் கூட அந்தச் செய்தி இடம் பெற்றது. இவ்வாறு முன்னணி செய்தி நிறுவனங்களிலும் அந்த செய்தி இடம்பெற்றது.
இதை தொடர்ந்து அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவரும் தொட்டியம் காவல் நிலைய காவலர்களுக்கு வாழ்த்து கூறி, பொன்னாடை அணிவித்து, பொக்கே கொடுத்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தொட்டியும் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் முதல் காவலர்கள் அனைவருக்கும் எம்எல்ஏ தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுகுறித்து அங்குசம் விசாரிக்கத் தொடங்கியது.
செய்தியின் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்க அங்குசம் செய்திக்காக தொட்டியம் டிஎஸ்பி தொடர்பு கொண்டபோது, “இதைப் பற்றி எனக்கே தெரியாது சார், வாட்ஸ் அப்ல வந்தது ன்னு சொல்றாங்க, வேணா விசாரிச்சு சொல்றேன்” என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து தொட்டியம் காவல் நிலைய எஸ்.ஐ திருநாவுக்கரசை அங்குசம் செய்திக்காக தொடர்பு கொண்டோம், “இதை கூகுளில் சர்ச் பண்ணாலே வரும் சார், இது பற்றி நிறைய செய்தியும் வந்து இருக்கு சார், என்று கூறினார்.
மேலும் நாம் இதுகுறித்து அரசு ஏதேனும் அறிக்கை வெளியிட்டு உள்ளதா, அல்லது சான்றிதல் ஏதேனும் வந்து உள்ளதா என்று கேட்டோம்.
அதற்கு அவர், “அதெல்லாம் ஒன்னும் வரல சார், வாட்ஸ் அப்ல தான் வந்து இருக்கு” என்று கூறினார்.
டெல்லியில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படும் இடமாக உள்ள ஜந்தர் மந்தர் பகுதியை உள்ளடக்கிய ஜந்தர்மந்தர் காவல்நிலையம் முதலிடத்தை பிடித்திருக்கிறது என்று வாட்ஸ் அப்பில் பகிரப்படும் அந்த போட்டவில் உள்ளது. ஜந்தர் மந்தர் பகுதியில் போராடும் போராட்டக்காரர்கள் காவல்துறை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது, இப்படி வெளியான பட்டியலில்தான் தொட்டியம் காவல் நிலையம் 7வது இடத்தைப் பெற்றிருக்கிறது.
இந்த பட்டியலை கொண்டு தான் போலீஸ்காரர்களும், பொதுமக்களும் கொண்டாடி வருகிறார்கள் என்று பார்த்தால், 3.12.21 இன்று முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் தொட்டியம் காவல் நிலையத்திற்கு சென்று விழா நடத்தி சிறப்பித்திருக்கிறார்.
இந்திய உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்படும் சிறந்த 10 காவல் நிலையங்களின் பட்டியல் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தை தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து மகளிர் காவல் நிலையம் பிடித்தது, 3.12.20 அன்று 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 காவல் நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது, இதில் சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம் இரண்டாவது இடத்தை பிடித்து இருந்தது. ஆனால் 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 காவல் நிலையங்களின் பட்டியல் இன்று வரை வெளியிடப்படாத நிலையில் சமூக வலைதளங்களில் பரவிய தகவலை கொண்டு, கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருப்பது…… விவரம் தெரிந்தவர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.