மரியாதைக்குரிய கல்வி அமைச்சர் அவர்களுக்கு…. பள்ளிகளுக்குள் என்ன நடக்கிறது என்று சென்று பாருங்கள் !

0

மரியாதைக்குரிய கல்வி அமைச்சர் அவர்களுக்கு…. பள்ளிகளுக்குள் என்ன நடக்கிறது என்று சென்று பாருங்கள்.

போட்டிகள் வைத்தால் சரியாகாதுங்க சார். உங்கள் காணொலி மீண்டும் மீண்டும் அரசின் பெருமைகளைப் பேசுகிறது. ஆனால் சிறுமையிலும் சிறுமையான சமூகத்தை இன்று கல்வித் தளங்கள் உருவாக்கி வருகின்றன என்பது உங்களுக்குத் தெரிய வேண்டும். அதற்கு முதலில் பள்ளிகளுக்குள் என்ன நடக்கிறது என்று சென்று பாருங்கள்.

சமூகநீதி கற்றுத்தரப்படுவதே இல்லை. சமூகவியல் ஆசிரியர்கள் வெறும் முப்பத்தைந்து மதிப்பெண்களுக்காக மாணவர்களைத் தயார் செய்யும் வேலையை செய்து வருகின்றனர். எதெல்லாம் பள்ளிகள் பேச வேண்டுமோ அதெல்லாம் பேசுவதே இல்லை.

குடும்பங்களில் நடக்கும் உரையாடல்களின் நீட்சியாகவே பள்ளிகளில் சாதிய வன்மம் பிரதிபலிக்கிறது. பள்ளிகளில் முதலில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் உரையாட நேரம் ஒதுக்குங்கள். புள்ளி விவரங்கள் மட்டுமே சேகரிக்கும் ஆசிரியர்களாகப் போய் விட்டார்கள்.

வகுப்பறையிலும் பள்ளியிலும் சாதிகள் இல்லையடிப் பாப்பா என்று பேசிய காலங்கள் இன்று இல்லை. சமூக மாற்றங்களை உருவாக்கும் உரையாடல்கள் பள்ளிகளில் இல்லை. திட்டங்களை செயல்படுத்தும் வேகமும் பெருமிதமும் தான் இங்கு வலிமையாகப் பணியாற்றுகின்றன.

அன்பில் மகேஷ் - கல்வி அமைச்சர்
அன்பில் மகேஷ் – கல்வி அமைச்சர்

தொடக்கப் பள்ளிகளிலிருந்து மாணவர்களிடம் சாதிகள் பிரிவினை வேண்டாம் என்று பேச வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் இங்கு ஆசிரியர்கள் அந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை (SC Scholarship) வாங்கித் தருவதற்கு விண்ணப்பம் நிரப்பும் வேலையை மட்டுமே செய்கின்றனர்.

SC/ST/BC/MBC/OC இந்தக் கணக்கீடுகளைப் போட்டுப் போட்டு பள்ளிகளில் விவரங்கள் அனுப்பும் வேலை மட்டுமே பள்ளிகளில் நாள் தோறும் நடக்கிறது. வீட்டில் சாதி உணர்வு ஆழமாக விதைக்கப்பட்டு வளரும் மாணவர்கள் பள்ளிக்குள் வரும் போது அதே உணர்வுடன் தானே வருகிறான். அதைக் களைவதற்கான சூழலைப் பள்ளிகள் கொண்டிருக்கின்றனவா?

பாடம், தேர்வு இவற்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரக் கூறும் கல்விமுறையில் எது சரி எது தவறு என மாணவர்களுக்கு போதிப்பது பள்ளிகளின் கடமை இல்லையா? ஆசிரியர்களை வெறும் வேலையாட்களாக மாற்றி வரும் கல்வித் துறைக்கு முதலில் வழிகாட்டுங்கள். வரலாற்று ஆசிரியர்கள் அவர்களது பணியை சரியாக செய்திருந்தால் இந்த சம்பவமே நடந்திருக்காது.

வேற்றுமையில் ஒற்றுமை தான் நம் நாட்டின் பெருமை என்று வகுப்பறைகளில் பேசிய காலம் என்று ஒன்று இருந்தது. அது எங்கே போயிற்று? நாட்டுப்பற்று மனிதநேயம் மனிதர்களை நேசித்தல் எல்லாமே பள்ளிகளில் கற்றுத்தரப்பட்ட நாட்களில் இந்த வன்முறைகள் நிகழவில்லை.

நீங்கள் கல்வி அமைச்சராக பதவியேற்ற பிறகு, போட்டி மனப்பான்மையை விதைக்கும் திட்டங்களையும் தேர்வுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் ஆணைகளும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. பள்ளிகளில் மாணவர்கள் இப்படி பிரிவினையோடு நடந்து கொள்கிறார்கள் என்றால் கடந்த பத்தாண்டுகளில் அவர்கள் பெற்ற கல்வியின் விளைவு என்ன? எனில் கல்வியே பெறவில்லை என்று தானே பொருள் .

அதோடு பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களை தொடர்ச்சியாக கண்காணித்து வழிநடத்தி இருந்தால் இந்த சம்பவம் இத்தனை அதிகமாகப் போயிருக்காது. ஏன் அந்த சூழல் பள்ளிகளில் இல்லை? பொத்தம் பொதுவாக எல்லோருக்கும் அறிவுரை கூறுவதில் பயனில்லை. எத்தனைப் பள்ளிகளில் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் பள்ளித் தலைமைகளை மிரட்டும் போக்கு நிலவுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

கல்வி அமைச்சர் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
கல்வி அமைச்சர் – அன்பில் மகேஷ் பொய்யாமொழி

மாணவர்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகள் உள்ளிட்ட எத்தனையோ பிரச்சனைகளை தீர்க்கும் இடமாகத்தான் பல பள்ளிகள் இருக்கின்றன. ஒரு புறம் பள்ளி ஆசிரியர்களின் மத்தியிலும் இந்த சாதி உணர்வு பிரச்சனை இருக்கவே செய்கிறது.

முதலில் களத்தில் என்ன நிகழ்கிறது, பள்ளிகளின் இன்றியமையாத கடமை என்ன, ஆசிரியர்களின் தலையாய பணி என்ன என்பதை ஆய்வு செய்து பொறுப்பெடுத்து பணியாற்ற கல்வித்துறையை வழிநடத்துங்கள் . கல்வித் துறை புள்ளிவிவரத் துறை ஆனதும் இந்த வன்முறைக்கு ஒரு மிக முக்கியமான காரணம். ஆகவே தயை கூர்ந்து சிந்தியுங்கள் .நீங்கள் ஒரு சின்னதுரையைப் படிக்க வைக்கப் போவதாக, உறுதி சொல்வதால் இந்த சூழல் மாறாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

கல்வித் துறையை சரிசெய்து ,கற்பித்தல் செயலை ஆசிரியர் மாணவர் உறவை பலப்படுத்த முயற்சி மேற்கொள்ளுங்கள்.

மாற்றங்கள் விளையும். சின்னதுரைகளுக்கு நம்பிக்கை பிறக்கும் .

– Uma Maheswari Gopal

 

இதையும் சேர்த்து படியுங்கள்…. 

டீம் விசிட் என்ற பெயரில் டார்ச்சர் கொடுக்கிறாரா ? – மாவட்ட கல்வி முதன்மை அதிகாரி சிவக்குமார் ?

கல்வி அதிகாரிகளின் டார்ச்சர் – குமுறும் ஆசிரியர்கள் – கல்வி அமைச்சர் கவனத்திற்கு !

குழப்பமே உன் பெயர்தான் பள்ளிக்கல்வித் துறையோ…..

சொந்தமாகச் சிந்திக்க வைக்கிற கல்வியையா நீங்கள் போதிக்கிறீர்கள்?

Leave A Reply

Your email address will not be published.