டிரெண்டிங் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் !
தென் மாவட்ட பயணிகளின் வசதிக்காக மதுரை சென்னை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்வது ட்ரெண்டிங் போல பிரபலம் ஆகியுள்ளது. இந்த புதிய நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை பிப்-26 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய நிறுத்த வசதியை தகவல் மற்றும் ஒளிபரப்பு, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறைக்கான மத்திய இணை அமைச்சர் முருகன் துவக்கி வைத்தார. பாராளுமன்ற உறுப்பினர் டிஆர். பாலு தாம்பரம் மேயர் வசந்தகுமாரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்ஆர். ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சென்னை – மதுரை தேஜாஸ் விரைவு ரயில் (22671) தாம்பரம் ரயில் நிலையத்திற்கு காலை 06.25 மணிக்கு வந்து சேர்ந்து 06.27 மணிக்கு புறப்படுகிறது அதேபோல மதுரை – சென்னை தேஜாஸ் விரைவு ரயில் (22672) தாம்பரம் ரயில் நிலையத்தில் இரவு 08.38 மணிக்கு வந்து சேர்ந்து 08.40 மணிக்கு புறப்படுகிறது.
இந்திய ரயில்வேயில் தற்போது நான்கு தேஜாஸ் விரைவு ரயில் சேவைகள் உள்ளன. இந்தியாவில் இரண்டாவதாக அறிமுகப்படுத்தப்பட்ட மதுரை சென்னை தேஜாஸ் விரைவு ரயில் 2019ஆம் ஆண்டு மார்ச் 1ல்பிரதமர் மோடி கன்னியாகுமரியில் இருந்து காணொளி காட்சி மூலம் துவக்கி வைக்கப்பட்டது.
சென்னை பெரம்பூர் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் உள்ளூர் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் ரயிலில் தானியங்கி கதவுகள் பாதுகாப்பான ரயில் பெட்டி இணைப்புகள் தீ மற்றும் புகைத்தடுப்பு எச்சரிக்கை அலாரம் வசதியான இருக்கைகள் மற்றும் கழிப்பறைகள் ஆகியவை அமைந்துள்ளன.
இந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தினசரி பத்திரிகைகள், உணவு, குடி தண்ணீர், காபி, தேநீர் போன்றவை வழங்கப்படுகிறது. மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வசதியான இருக்கைகளுடன் கூடிய தேஜாஸ் விரைவு ரயிலின் உட்புறத் தோற்ற புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் சனிக்கிழமை அன்று பகிர்ந்து இருந்தார்.
இந்தப் பதிவு ஞாயிற்றுக்கிழமை மாலை வரை 1.7 மில்லியன் பேர் பார்த்துள்ளனர் 49700 லைக்குகள்3840 மறுபதிவுகளுடன் டிரெண்டிங் ஆகி உள்ளது. இந்த புதிய நிறுத்தத்தின் மூலம் தென் மாவட்ட பயணிகள் அதிகாலை நேரத்தில் சென்னை எழும்பூர் சென்று பயணிக்கும் சிரமம் குறையும்மேலும் இந்த ரயிலை பயணிகள் முழுமையாக பயன்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
– ஷாகுல்
படங்கள் – ஆனந்த்