சிறைவாசிகளின் நேர்காணல் – ஜெயில் பரிதாபங்கள் ! தொடர் – 1

2

சிறைவாசிகளின் நேர்காணல் – ஜெயில் பரிதாபங்கள் ! தொடர் – 1 – வாரச்சந்தை அல்லது பொதுவில் நெருக்கடி மிகுந்த சந்தையை பேரிரைச்சலினூடாக கடந்த அனுபவத்தை நீங்கள் சந்தித்திருப்பீர்கள். நமக்கு மிக நெருக்கமாக பின்தொடர்ந்து வருவரிடம்கூட, பெருங்குரலெடுத்து கத்திப் பேசினால் மட்டுமே நாம் கடத்த விரும்பும் செய்தி அவரது செவியைச் சென்று சேரும்.

சந்தைக்கடை இரைச்சலுக்கு சற்றும் குறைவில்லாத வகையில், அமைந்திருக்கிறது சிறைவாசிகளின் நேர்காணல் பரிதாபங்கள். சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் மத்திய சிறைகள், மாவட்ட சிறைகள், பெண்களுக்கான தனிச்சிறைகள், கிளைச்சிறைகள் என தமிழகம் முழுவதும் 142 சிறைகள் இயங்கி வருகின்றன. தமிழகத்திலுள்ள 9 மத்திய சிறைச்சாலைகளுள் அதிக எண்ணிக்கையிலான அடைப்புத்திறனை கொண்ட சிறைச்சாலையாகவும், ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே 1865 இல் கட்டப்பட்ட பழம்பெருமையான சிறைச்சாலை என்ற பெருமை கொண்டது திருச்சி மத்திய சிறைச்சாலை.

Trichy CENTRAL PRISON
Trichy CENTRAL PRISON

மரண தண்டனை, ஆயுள் தண்டனை, பெருங்குற்றங்களுக்காக தண்டனை பெற்றோர், கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் சிறைபடும் சிறைவாசிகள், தடுப்புக் காவல் மற்றும் நீதிமன்ற காவல் சிறைவாசிகள், விசாரணை சிறைவாசிகள் என வகைப்படுத்தப்பட்டு தற்போது சுமார் 1600-க்கும் அதிகமான சிறைவாசிகள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

- Advertisement -

தமிழகத்திலேயே முதன்முறையாக, சிறை வளாகத்திலேயே ஐ.டி.ஐ. தொடங்கப்பட்ட சிறைச்சாலை என்ற பெருமையும் கொண்டது, திருச்சி சிறைச்சாலை.

இவ்வளவு பழம்பெருமையும், தமிழக மத்திய சிறைச்சாலைகளுள் குறிப்பிடத்தகுந்த ஒன்றுமான திருச்சி மத்திய சிறைச்சாலை சிறைவாசிகள் தங்களது உறவினர்களுடன் நிம்மதியா நாலு வார்த்தைக்கூட பேச முடியாத அவலத்தை எதிர்கொள்கிறார்கள் என்பது வேதனையானது.

தமிழ்நாடு சிறை விதிகள் 1983 இன்படி, சிறைவாசிகள் அவர்கள் நெருங்கிய உறவினர்களுடன் நேர்காணல் செய்யும் அனுமதியை வழங்குகிறது. இந்த நடைமுறையின்படி, திருச்சி மத்திய சிறையில் வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் விசாரணைக் கைதிகளும்; செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் தண்டனைக் கைதிகளும் நெருங்கிய உறவினர்களுடன் நேர்காணல் செய்து கொள்ள அனுமதி வழங்கியிருக்கிறார்கள்.

திருச்சி மத்திய சிறை என்பதால், திருச்சி மாவட்டத்தை தாண்டி பக்கத்து மாவட்டங்களான கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சிறைவாசிகள் இங்கே சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

4 bismi svs

சிறைவாசியை சந்திக்க வரும் உறவினர்கள் அதிகபட்சம் 20 நிமிடம் கலந்துரையாட முடியும். ஒரு சிறைவாசிக்கு ஒரே நேரத்தில் மூன்று நபர்கள் வரை அனுமதிக்கப்படுகிறார்கள். ஒரே நேரத்தில் 25-க்கும் அதிகமான சிறைவாசிகளையும் நேர்காணலுக்கு அனுமதிப்பதன் காரணமாக, ஒரு முனையில் 25 சிறைவாசிகளும், மறு முனையில் அதிகபட்சமாக 75 உறவினர்களுமாக அமைந்துவிடுகிறது. பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும் வேளைகளில், சிறைவாசிகளுக்கிடையிலான இடைவெளியும் கூட குறைந்து நெருக்கியடித்துக் கொண்டு தான் நிற்க வேண்டியதாகவும் ஆகிவிடுகிறது.

இதுபோன்ற தருணங்களில், முகம் பார்த்து பேசும் வாய்ப்பு கிடைத்தும், சொல்ல வேண்டிய தகவலை சிதறாமல் சொல்லவும், மறுமுனையில் உறவினர்கள் பேசும் தகவலை சேதாரம் இன்றி முழுமையாக கேட்பதற்கும் வாய்ப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

வயதான கைதிகள், உறவினர்கள் பேசுவதை சரியாக புரிந்துகொள்ள முடியாதநிலையும்,   வயதான உறவினர்கள் இளம் கைதிகளிடம் பேசும்போதும் புரிந்து கொள்ள முடியாததால் சத்தம்போட்டு பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

வசதிபடைத்த, அல்லது அதிகாரம் கொண்ட சிறைவாசிகள் சிறை விதிகளையும் மீறி 20 – நிமிடங்களுக்கும் மேலாக தங்களது உறவினர்களுடன் பேசுவதற்கான வாய்ப்பை எப்படியாவது பெற்றுவிடுகின்றனர் என்றும்; தற்செயலான நேர்வுகளில் விசாரணைக் கைதிகளாக சிறைபட நேரிடும் சாமானி சிறைவாசிகள் அனுமதிக்கப்பட்ட 20 நிமிடங்களில் விரட்டியடிக்கப்படுவதுமான சம்பவங்களும் நடக்கிறது என்கிறார்கள் சிறை நேர்காணல் சென்றவர்கள்.

இதுபோன்ற நடைமுறைச் சிக்கலை தவிர்க்கும் பொருட்டு, சிறைவாசிகளை சந்திக்க வருகை தரும் பார்வையாளர் குறித்த விவரங்களை சேகரிப்பதற்கும், நேர்காணல் முறையை சீரமைப்பதற்குமான பார்வையாளர் மேலாண்மை திட்டம் ஒன்றை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக, எதிர் எதிர் முனையில் முகம் பார்த்து ”இன்டர்காம்” தொலைபேசி சேவையைப் பயன்படுத்தி பேசுவதற்கான வசதிகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் அறிமுகப்படுத்தி தொடர்ச்சியாக நடைபெற்றும் வருகிறது. இந்த நிலையில்  திருச்சி மத்திய சிறையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரையில் செயல்பாட்டில் இருந்த 5 இன்டர்காம் தொலைபேசி சேவையும் தற்போது செயலிழந்து கிடக்கிறது.

தொலைதூர மாவட்டங்களிலிருந்து சிறைப்படுத்தப்பட்டிருக்கும் சிறைவாசிகளை நேர்காணல் செய்ய வருகை தரும் உறவினர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்காத வகையில், சிறைவாசிகளின் மன அழுத்தத்தை அதிகரிக்கும் வகையிலும் அமைந்திருக்கும் சிக்கலான இந்த நேர்காணல் முறையை மாற்றியமைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

குறிப்பாக, பார்வையாளர் மேலாண்மை திட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறைச்சாலையில் 25 எண்ணிக்கையிலான ”இன்டர்காம்” தொலைபேசி சேவையை பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டும், இன்டர்காம் சேவை பயன்பாட்டிற்கு கொண்டு வராதது சிறைவாசிகளிடையே மனச்சோர்வை ஏற்படுத்தியிருக்கிறது. சிறைத்துறை டி.ஐ.ஜி ஜெயபாரதி மற்றும் சூப்பிரண்ட் ஆண்டாள் இதை கவனிப்பார்களா ?

– சிறைகளின் பயணம் தொடர்ந்து வரும் !  

5 national kavi
2 Comments
  1. Nimmyranjith says

    மனம் மாறி மறுவாழ்வு பெறுவதற்காக உருவாக்கப்பட்ட இடமே சிறைச்சாலை. அங்கு இதுபோல் செயல்படுவதை தவிர்த்து, வரும் நாட்களில் விரைவாக நமது நண்பர்களாக திகழும் காவல்துறை மாற்றத்தை உருவாக்குவார்கள் என்று நம்புகிறோம்.

  2. ரஞ்சித் குமார் says

    அண்ணா மிக அருமையான பதிவு,
    சிறையில் இருக்கும் பல கைதிகளின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். மன மாற்றத்தை கொடுக்கும் இடமே சிறைச்சாலை தண்டிக்க மட்டுமல்ல மனமாறி மறுவாழ்வு தொடர தேவையான முயற்சிகளையும் சேவைகளையும் தொடர்வார்கள் என நம்புகிறோம்.

Leave A Reply

Your email address will not be published.