கஞ்சா போதையில் இருந்த சமூக விரோதிகள் தாக்கியதில் போக்குவரத்து ஊழியர்கள் காயம்!
கஞ்சா போதையில் இருந்த சமூக விரோதிகள் தாக்கியதில் போக்குவரத்து ஊழியர்கள் காயம்!
கஞ்சா போதையில் இருந்த சமூக விரோதிகள் தஞ்சாவூரில் நேற்றிரவு பணி முடிந்து பணிமனையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இரண்டு போக்குவரத்துக்ழக ஊழியர்களை கடுமையாகத் தாக்கி ரூ.3500 பணம், வெள்ளிச் செயின் மற்றும் வாட்சை பறித்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தைக் கண்டித்து ஜெபமாலைபுரம் டவுன் டெப்போவில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் இன்று காலை பேருந்துகளை இயக்காமல் சுமார் ஒன்னரை மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் நகர போக்குவரத்து கிளையில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை- திருச்சி மார்க்கத்தில் இயக்கப்படும் அரசு பேருந்தின் ஒட்டுநர் அழகுதுரை, நடத்துனர் ஆறுமுகம் ஆகிய இருவரும் நேற்றிரவு பணி முடிந்து கணக்குகளை ஒப்படைத்துவிட்டு ஜெபமாலைபுரம் டெப்போவில் இருந்து இரவு 1.20 மணியளவில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். அவ்விருவரும் சோழன் சிலையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, சுமார் 1.40 மணியளவில், மோட்டார் சைக்கிள்களில் வந்த சமூக விரோதிகள் அவ்விருவரையும் வழிமறித்து கடுமையாகத் தாக்கி ஓட்டுநர் அழகுதுரையிடம் இருந்து ரூ.2000 ரொக்கம், வெள்ளிச் செயின் ஆகியவற்றையும், நடத்துனர் ஆறுமுகத்திடம் இருந்து ரூ.1500 ரொக்கம், வாட்ச் ஆகியவற்றைப் பறித்துச் சென்றுவிட்டனர்.
தாக்குலில் ஈடுபட்ட நபர்கள் கஞ்சா போதையில் இருந்துள்ளனர்.
இத் தாக்குதலில் ஓட்டுநர் அழகுதுரையின் பின்னந் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூன்று தையல்கள் போடப்பட்டுள்ளன. நடத்துனர் ஆறுமுகத்துக்கு உள்காயம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இத் தாக்குதலைக் கண்டித்தும், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும், போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் இன்று காலை 4 மணி முதல் 5.30 மணிவரை சுமார் ஒன்னரை மணி நேரம் பேருந்துகளை இயக்காமல் ஜெபமாலை டவுன் டெப்போ முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
காவல்துறை மற்றும் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக தஞ்சாவூர் நகர மேற்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு நபர்கள் இதுவரை பிடிபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் தொடர்புடைய ஏனைய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.