வாக்காளர்களை ஏமாற்றிய தேர்தல் ஆணையம் !
வாக்காளர்களை ஏமாற்றிய தேர்தல் ஆணையம் !
தமிழகத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நகர்ப்புற உள்ளாட்சிகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்டவைகளுக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. அந்த வகையில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு (கடம்பூர் தவிர்த்து) தேர்தல் நடந்து முடிந்தது.
மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டன. சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளை பொறுத்தமட்டில் 1,400 ஓட்டுகளுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற அடிப்படையிலும், இதர மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளை பொறுத்தமட்டில் 1200 ஓட்டுகளுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற அடிப்படையிலும் வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டன.
இந்த தேர்தலில் மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட ‘பூத் சிலிப்’ அல்லது வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வாக்காளர்கள் தங்களது வாக்குகளை அளிக்கலாம். என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது.
வாக்காளர்களுக்கு அவர்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடியின் பெயர், அமைவிடம் குறித்த விவரங்களுடன் பூத் சிலிப்பை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக வினியோகம் செய்ய வேண்டும். ஆனால் இந்த முறை 60 சதவீத மக்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட வில்லை. இதனால் பெரும்பாலான வாக்காளர்கள் பூத் சிலிப் இல்லாமல் வாக்குச்சாவடிக்கு வந்திருந்தனர்.
ஓட்டுச்சாவடிகளில் சரிபார்ப்பு பணிக்காக இருந்த மாநகராட்சி நகராட்சி ஊழியர்களுக்கும் ஓட்டுச்சாவடிகளில் ஒதுக்கப்பட்ட வார்டு விவரம் சரிவர தெரிவதில்லை. இதனால் வாக்காளர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர். வெளியூரில் இருந்து ஓட்டு போட வந்தவர்கள். எந்த ஓட்டு சாவடி என்கிற விவரம் தெரியாமல் அலைந்து கொண்டே இருந்தனர்.
பின்னர் அருகில் உள்ள கட்சியினரிடம் சென்று பாகம் எண், வரிசை எண் எழுதி வாங்கி வந்தால் பூத் சிலிப்பை வழங்குவதாக கூறி அனுப்பி வைத்ததை காண முடிந்தது. இதுபோல் ஆன்லைன் மூலமாக பூத் சிலிப் விவரம் அறிய இணையதளமுகவரி கொடுக்கப்பட்டது. ஆனால் நேற்று காலை அந்த இணையதளம் முடங்கியதால் பூத் சிலிப் விவரத்தை அறியமுடியவில்லை. சில வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் காலையில் தாமதமாக பணிக்கு வந்தனர். இதனால் பூத் சிலிப் இல்லாத முதியவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிப்பதற்கு தாமதம் ஏற்பட்டது. பூத் சிலிப் சரிவர வினியோகம் செய்யாததன் விளைவாக வாக்காளர்கள் சிரமம் இன்றி வாக்களிக்க முடியாமல் போனது.
‘பூத் சிலிப்’ வழங்குவதற்கு என்று தேர்தல் ஆணையம் இதற்கென்று ஆட்களுக்கு சம்பளம் கொடுக்கிறது. தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு விநியோகம் செய்து இருக்க வேண்டும். மறு சீரமைப்பு செய்யப்பட்டு யாருக்கு எந்த பகுதி என்பது தெரியாமல் வேட்பாளர்கள் முதல் வாக்காளர்கள் வரை குழம்பி இருக்கும் நிலையில் இந்த ‘பூத் சிலிப்’மட்டும் சரியாக கொடுத்திருந்தால் வாக்குபதிவு இன்னும் கூடுதலாக வாய்ப்பு இருக்கிறது.
தமிழகத்தில் பல பகுதிகளில் வாக்குபதிவு குறைந்து போனதற்கு ‘பூத் சிலிப்’சரியாக விநியோகம் இல்லை என்பது ஆளும் கட்சி முதல் அனைத்து கட்சிகளும் குற்றச்சாட்டாக வைக்கின்றனர்.
வீட்டுக்கு நேரடியாக வரவேண்டிய பூத் சிலிப்’கடைசியில் வாக்குசாவடியில் தான் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது. உடனே கையெழுத்தும் வாங்கப்பட்டது. இந்த கணக்கு வீடுகளில் நேரடியாக கொடுத்தது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்..
இவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவில் ஒட்டுமொத்தமாக 60.70 சதவீதம் வாக்குகள் உத்தேசமாக பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதில், மாநகராட்சிகளில் 52.22 சதவீதமும், நகராட்சிகளில் 68.24 சதவீதமும், பேரூராட்சிகளில் 74.68 சதவீதமும் வாக்குகள் பதிவானது என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.