திருச்சியில் விதிமீறல் கட்டிட விவகாரத்தில் பேரம் நடந்ததா ? -கோவிந்தராஜூலு
நகரத்தின் வளர்ச்சிக்கு தகுந்தார் போல் அந்தந்த பகுதிகளில் மக்களை கவரும் வண்ணம் வணிகவளாகங்கள், உணவுவிடுதிகள், திருமணமண்டபங்கள் உள்ளிட்ட கட்டிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத்தான் செய்கின்றன. ஆனால், அதில் எவ்வளவு கட்டிடங்கள் அரசின் விதிகளுக்கு உட்பட்டு உள்ளது என ஆராய்ந்து பார்த்தால் வியப்பளிக்கும் வகையில் அதன் முடிவுகள் வரும். அந்தவகையில், தற்போது திருச்சி வாசிகளையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது இது போன்ற சம்பவம் ஒன்று.
திருச்சியில் அரசு விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள 27கட்டிடங்களுக்கு சீல் வைக்ககோரி உத்தரவிட்டது மதுரை உயர்நீதிமன்ற கிளை. இவற்றில் பெரும்பாலான வணிகவளாகங்கள், துணிக்கடைகள், உணவுவிடுதிகள் உள்ளிட்டவை திருச்சிக்கே பெருமை சேர்ப்பவை என மக்கள் மத்தியில் பேசப்பட்டவை. கட்டிடங்கள் விதிகளை மீறி கட்டப்படுவதினால் ஏற்படும் விபத்துகள் பல சமயங்களில் தவிர்க்க முடியாமல் போய்விடுகின்றன.
அப்படி நடைபெற்ற சம்பவங்களில் ஒன்று தான் கும்பகோணத் தீ விபத்து. இதில் 90 குழந்தைகள் தீக்கு இறையாகினர். இந்த சம்பவத்தினால் ஏற்பட்ட பாதிப்பின் விளைவாக திவாகரன் கட்சியின் செய்தி தொடர்பாளர் அல்லூர் சீனிவாசன் என்பவர் தகவலறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் திருச்சியில் எத்தனை கட்டிடங்கள் விதிகளை மீறிக்கட்டியுள்ளன என்ற தகவலைப்பெற்றுக்கொண்டார். அதனைப்பு காராகக் கொண்டு நகராட்சி நிர்வாக ஆணையர் முதல் சி.எம்.டி.எ வரையில் அனைத்து இடங்களிலும் கொடுத்துள்ளார்.
ஆனால், எங்கும் புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளாத காரணத்தினால், மதுரை உயர்நீதிமன்றத்தின் கிளைக்கு சென்றுள்ளார். ஆரம்பத்தில் இவரது வழக்கை வாதாட வந்த இரண்டு வழக்கறிஞர்களும் சிவபாதம் என்பவரின் மூலம் கட்டிட உரிமையாளர்களிடம் இருந்து பணத்தைப்பெற்று கொண்டு ஒதுங்கிவிட்டனர் என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார் அல்லூர் சீனிவாசன். இறுதியாக தன்னுடைய நண்பன் செழியன் மூலம் இந்த வழக்கை மீண்டும் கையில் எடுத்து போராட ஆரம்பித்தார். இந்நிலையில், கடந்த 21ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி கே.கே.சசிதரன், திருச்சியில் அரசு விதிமுறைகளை மீறி செயல்படும் சாரதாஸ் ஜவுளிக்கடை, அஹமத்பிரதர்ஸ், கே.ஆர்.டி மோட்டார் நிறுவனம், பெமினா ஷாப்பிங் மால், மங்கள் அன் மங்கள், ரத்னா ஸ்டோர்ஸ், ஜோய் அலுக்காஸ், சித்ரா காம்ப்ளக்ஸ், பாரத் ஷாப்பிங் மால், ஸ்ரீராஜ் டி.வி.எஸ், யோகலெட்சுமி திருமண மஹால், சிவம் ரெடி மேட்ஸ், மாயவரம் லாட்ஸ், ஹோட்டல் மாயாஸ், சூர்யா, சங்கம், ராயல் சத்யம், ராஜசுகம், புஷ்பம், சோனா, சாரதா, விக்னேஷ், அஜந்தா, ஆனந்த், வசந்தபவன் உள்ளிட்ட 27கட்டிடங்களுக்கு காவல்து றையின் பாதுகாப்புடன் சென்று சீல் வைக்கச்சொல்லி உத்தரவிட்டர்.

இந்நிலையில், இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் தமிழ்நாடு பெருநகரவளர்ச்சி குழுமத்தின் செயலாளரிடம் மனு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து, செயலாளர் கட்டிட உரிமையாளர்களை 5,6,7 ஆகிய தேதிகளில் ஆஜராக சொல்லியும், அதுவரையில் மாநகராட்சி நிர்வாகம் கட்டிடத்திற்கு சீல் வைக்ககூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த அனுமதியில்லாத கட்டிடங்க ளிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு மாநகராட்சி ஊழியர்கள் தான் அவர்களுக்கு அதிகம் உதவுவதாகவும், இந்த வழக்கு விசாரணைக்கு வரும்பட்சத்தில் மாநகராட்சி ஊழியர்கள் மாட்டிக்கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில், தமிழ்நாடு வணிகர் சங்கபொதுச்செயலாளர் கோவிந்தராஜீலு கட்டிட உரிமையாளர்களிடம் இந்த பிரச்சனையை நான் முடித்து கொடுக்கிறேன் என பேரம் பேசியதாகவும் கூறப்பட்டது.
இது குறித்து திவாகரன் கட்சியின் செய்தி தொடர்பாளர் அல்லூர் சீனிவாசனிடம் பேசுகையில், கும்பகோணத்தில் நடந்த தீ விபத்து என்னை மிகவும் பாதித்தது, அதற்கு என்ன காரணம் என ஆராயும் போது கட்டிடங்கள் கட்டும்போது அனுமதி மீறுவதே இதற்கு காரணமாக இருப்பது தெரியவந்தது. அதனால், கிட்டத்தட்ட 7வருடங்களாக திருச்சியில் எந்தெந்த கட்டிடங்கள் அனுமதியில்லாமல் உள்ளது என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் இருந்து பெற்றுக்கொண்டேன். அதன்படி, திருச்சியில் 1276 கட்டிடங்கள் அரசு விதிமுறைகளை மீறி கட்டியுள்ளனர். ஆனால், இன்னும் உள்ளே சென்றுபார்த்தால் 5000கட்டிடங்களுக்கு மேலே தான் இருக்கும். இருப்பினும், நான் எடுத்த தகவலைக்கொண்டு வழக்கு தொடர்ந்தேன்.
1276யும் வைத்து வழக்கு தொடர்வது சிரமம் என்பதால், அதில் முக்கியமான 27கட்டிடங்களை மட்டும் கொண்டு 2015ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தேன். அதற்கு தற்போது தீர்ப்பு வந்துள்ளது. இவர்கள் தப்பு செய்து விட்டு நான் பணத்திற்காக வழக்கு போடுகிறேன் என்கிறார்கள். தற்போது கோர்ட்டு உத்தரவே வந்துவிட்டது. தமிழ்நாடு வணிகர் சங்கபொதுச்செயலாளர் கோவிந்தராஜீலு கட்டிடஉரிமையாளர்களின் பாதிப்பை பற்றி என்னிடம் பேசினார்.
நீங்கள் முன்னதாகவே தெரிவித்திருந்தால், நீதிபதியிடம் கூறி அரசு விதிகளுக்கு உட்பட்டு கட்டிடங்களை மாற்றம் செய்யமுடியுமா என பேசி இருக்கலாம் என தெரிவித்தேன்.
ஆனால், தற்போது நீதிமன்றத்தில் இருந்து உத்தரவு வந்துவிட்டால் என்னால் ஒன்றும் செய்யமுடியாது என்றேன். அவரும் அதன்பிறகு இது குறித்து பேசவில்லை. அதற்குள் பேரம் பேசிவிட்டனர் என கட்டுக்கதைகள் பரவி விட்டது என்றார்.

இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜீலு கூறுகையில், இதில் என்னுடைய கருத்து ஒன்னும் கிடையாது. இதில் சம்மந்தப்பட்டுள்ள 27கட்டிட உரிமையாளர்களிடமே கேட்கலாம். நான் பதில் சொன்னால் கூட உண்மையாக இருக்கும் அல்லது பொய்யாக இருக்கும், அதுக்கு பதிலாக சம்மந்தப்பட்டவர்களிடம் கேட்டாலே உண்மை தெரிந்துவிடுமே. 27கட்டிடமும் ஊருக்கே தெரிந்த கட்டிடங்கள் தான் யாரிடம் வேண்டுமானலும் நீங்கள் கேட்கலாம் என்றார்.

இது குறித்து மங்கள் & மங்களின் உரிமையாளரிடம் கேட்டபோது, கட்டிட வீதிமீறல் எல்லாம் ஒன்றும் இல்லை. வேணும் என்றே இது போன்ற பொய் பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. கோவிந்தராஜீலு பேரம் பேசினார் என்பது பொய்யான குற்றச்சாட்டு, அனைவருமே வணிகர்கள் அவ்வாறு கோவிந்தராஜீலு பேசினால் தலைவர் பதவியிலேயே இருக்கமுடியாது என்றார்.
இந்த வழக்கை வாதாடும் வழக்கறிஞர் செழியன் கூறுகையில், உயர்நீதிமன்றத்தில் உத்தரவை எதிர்த்து கட்டிட உரிமையாளர்கள் மேல் முறையிடு செல்லவில்லை, அதிகாரிகளின் நடவடிக்கை எதிர்த்தே மேல்முறையீடு சென்றுள்ளனர். இதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. இனி மேல்முறையீட்டில் அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கையில் அவர்கள் சட்டத்தை மீறி கட்டிடங்களை கட்டியுள்ளது தெரியவந்தால் நடவடிக்கை மேற்கொள்வார்கள். அல்லூர் சீனிவாசனுக்கும் நோட்டீஸ் கொடுக்க சொல்லி உத்தரவு உள்ளது. இந்த விசாரணையில் அவரும் இருக்கலாம். அவர்கள் என்ன உத்தரவு பிறப்பிக்கிறார்களோ அதற்கு மேல் மேல்முறையீடு செல்லலாம் என்றார்.
-ச.பாரத்