“நீ எதுவாக நினைக்கிறாயோ? அதுவாக ஆகிறாய்”
தமிழகத்தை உலக நாடுகள் உற்றுப்பார்ப்பதற்கு காரணமே நம் பாரம்பரியம், கலாச்சாரம், கோயில்கள், இலக்கியங்கள், நம் வாழ்க்கை முறை.
என்னம்மா புதுசா சொல்ல வர்ற என்று கேட்கிறீர்களா? பாரம்பரிய முறைப்படி விவசாயிகள் பல ஆண்டுகளில் கடுமையான வறட்சியை சந்தித்துள்ளனர். சித்தர்கள் காலத்தில் கூட இது நடந்ததாக சொல்வர்.
ஆனால் அதனை அவர்கள் எவ்வாறு கையாண்டனர் என்பதையும் நம் வரலாறு கூறுகிறது. வறட்சியில் விளையக்கூடிய தானியங்களை பயிரிட்டு மக்களின் பசிப்பிணி போக்கிய விவசாயிகளை பார்க்க முடிகிறது.
ஆனால் இப்போது மழை பொய்த்து விட்டது. எலிக்கறி சாப்பிட்டனர். தற்கொலை செய்து கொண்டனர், அரை நிர்வாணப் போராட்டம் என தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.
இது எதைக்காட்டுகிறது எனில் நம் இயலாமையைக் காட்டுகிறது. என்னால் முடியாது. இது நடக்காது என்று ஒரு சின்னக்குழந்தை நினைத்தால் அது நடக்க கற்றுக்கொள்ள முடியாது.
எவ்வளவோ தோல்விகளையும் வீழ்ச்சிகளையும் சந்தித்த ஆட்சிகள் மீண்டும் தன் விடாமுயற்சியால் துளிர்க்கவில்லையா? மத்திய அரசு, மாநில அரசு இரண்டுக்குமே உணவைத் தரக்கூடிய இறைவன் அல்லவா விவசாயிகள். ஆண்டவனே முடியாது என்றால் நாம் என்ன செய்வது. நீங்களே எங்களால் முடியாது நாங்கள் பிச்சை கேட்கிறோம் என்றால் நாடு எப்படி முன்னேறும்.
நீங்கள் உங்களது வறுமையை உழைப்பில் காட்ட வேண்டும். கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என்று குழந்தைகளுக்கு கற்பிக்கும் நம் பாரம்பரியம் உங்களுக்கு கற்பிக்கப்படவில்லையா? உணவைத் தரும் நாம் ஏன் பிச்சை கேட்க வேண்டும். நாம் பிச்சையிடும் நிலையில் இருக்க வேண்டுமே தவிர பிச்சை பெற கூடாது. ஏற்பது இகழ்ச்சி என்று நம் ஔவைப்பாட்டி சொல்லவில்லையா? அவை அனைத்தும் ஏட்டுச்சுரைக்காயா?
“நீ எதுவாக நினைக்கிறாயோ? அதுவாக ஆகிறாய்” என்று வேதங்களும், உபநிடதங்களும் சொல்கின்றன அல்லவா? ஏன் உங்களை பிச்சைக்காரர்களாக நினைக்கிறீர்கள்? பிறரிடம் ஏன் கையேந்தி பிழைக்க வேண்டும்? மாற்றங்கள் முதலில் நம்மிடம். பின்புதான் அரசிடம். நாம் அவர்களிடம் உதவி கேட்கவில்லை எனில் அவர்களாகவே உதவுவார்கள். உலகமே இப்படித்தான். கேட்டால் கிடைக்காது. ஆனால் நமக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் கிடைக்காமல் போகாது. இது இயற்கையின் இயல்பு.
ஒருவரின் உணவைக்கொண்டே அவனது மனநிலை தீர்மானிக்கப்படுகிறது என்பர். ஆனால் உணவைத் தரும் நீங்களே இப்படி தன்னம்பிக்கையும், தைரியமும், சவாலை எதிர்கொள்ளும் திறமுமின்றி ”பாரதி சொல்வது போல் நெஞ்சில் உரமின்றி” இருந்தீர்களானால் நாட்டில் கொலை, தற்கொலை வன்முறை அதிகரிக்காமல் என்ன நடக்கும்.
இனி வரும் காலங்களிலாவது விவசாயம் சிறந்து விவசாயிகள் வளம் பெற மனமார்ந்த பிரார்த்தனையுடன்,
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.