திருச்..சீ..சீ மாநகரின் இடுகாட்டின் செய்தியும் – கவுன்சிலரின் மனக்குறையும், அதிரடி நடவடிக்கையும்!
”திருச்..சீ..சீ… மாநகரில் இடுகாட்டின் இழிநிலை! அதிகாரத் திமிர்!” என்ற தலைப்பில், கடந்த மே-3 அன்று நமது angusam.com இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
மேற்கண்ட செய்தி வெளியிட்டது தொடர்பாக, அங்குசத்தை தொடர்புகொண்டு திருச்சி மாநகராட்சியின் 53-வது வார்டு கவுன்சிலர் ஜெ.கலைச்செல்வி தமது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்.
“செய்தி வெளியிட்டது, எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. அந்த இடுகாடு 53-வது வார்டை சேர்ந்ததுதான். ஆனால், 51 மற்றும் 54 வது வார்டை சேர்ந்தவர்கள் தான் அங்கு குப்பையை கொட்டிவருகிறார்கள். அந்த இடுகாட்டில் பிரச்சினை என்று தெரிய வந்ததுமே, அதனை சரி செய்ய ஆட்களை அனுப்பிவிட்டோம்…”“தவறான செய்தியை வெளியிட்டிருக்கிறீர்கள். அதிலும் கவுன்சிலரை தொடர்புகொண்டோம் அவர்கள் பேசவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். இது வருத்தத்திற்குரியது. இது பத்திரிக்கை தர்மமா என்று தெரியவில்லை. மிகுந்த வருத்தத்தோடு இதனை பதிவு செய்கிறேன்.” என்று தனது விளக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், முள்ளச்சி தோப்பு இடுகாட்டில் தற்போது, குப்பைகள் அகற்றப்பட்டதற்கு ஆதாரமாக சில புகைப்படங்களையும் அனுப்பியிருக்கிறார்.
முதல் விசயம், தவறான செய்தி என்று மறுப்பதில் நியாயமில்லை. இடுகாட்டில் இல்லாத குப்பையை கிராபிக்ஸ் செய்து செய்தியாக்கவில்லை. தகுந்த புகைப்பட ஆதாரங்களோடும், நேரில் கள ஆய்வு செய்து அதன் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்ட பின்னரே செய்தியாக வெளியிட்டிருக்கிறோம்.
குறிப்பாக, கவுன்சிலர் கலைச்செல்வின் விளக்கத்திலேயே, ”நாங்கள் கொட்டவில்லை; 51, 54 வார்டை சேர்ந்தவர்கள்தான் கொட்டினார்கள்” என்கிறார். குப்பையை யார் கொட்டினால் என்ன? இடுகாட்டில் கொட்டி இழிவுபடுத்தலாமா? என்பதும் மாநகராட்சியின் கவனத்திற்கு கொண்டு சென்றும்கூட வருடக்கணக்கில் தீர்க்கப்படாத பிரச்சினையாக தொடர்வதும்தான் நம் ஆதங்கம். நாம் செய்தியாக்கியதன் நோக்கமும் அதுதான்.
அடுத்த விசயம், அங்குசம் இதழின் வாட்சப் குழு தொடர்பில் இருந்தும், தனது கருத்தைக் கேட்காமல் செய்தி வெளியிட்டுவிட்டீர்கள் என்ற அவரது வருத்தம். அங்குசம் இதழின் செய்தியாளரின் (…6454 என்று முடிவடையும்) தனிப்பட்ட எண்ணிலிருந்து, கவுன்சிலரின் 8012313746 என்ற அலுவல் ரீதியான தொடர்பு எண்ணிற்கு கடந்த மே 1 அன்று காலை 10.32-க்கு அழைத்திருக்கிறார்.
செய்தி வெளியிட்ட மே-3 வரையில் கவுன்சிலர் திரும்ப அழைக்காத நிலையில்தான் செய்தி வெளியிடப்பட்டது. கவுன்சிலரின் கருத்தைப் பெறாமலேயே ஒரு சார்பாக செய்தியை வெளியிட வேண்டுமென்பது நமது நோக்கமுமல்ல; அதற்கு அவசியமுமில்லை என்பதை அங்குசம் சார்பில் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
நிறைவாக, முள்ளச்சி தோப்பு இடுகாட்டில் மலைபோல் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்த, கவுன்சிலர் ஜெ.கலைச்செல்வி அவர்களுக்கு அங்குசம் இதழின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
நிரந்தரமாக, இனி மீண்டும் குப்பை கொட்டப்படாமல் இருப்பதை உத்தரவாதப்படுத்தவும், சேதமடைந்த கல்லறைகளை மாநகராட்சியின் சார்பில் சரிசெய்து தருவதற்கும் உரிய முயற்சிகளை எடுக்க வேண்டுமெனவும் அங்குசம் சார்பில் கவுன்சிலருக்கு வேண்டுகோளையும் முன்வைக்கிறோம்.
– ஆர்
ஏற்கனவே அங்குசத்தில் வெளியான செய்திக்கான லிங்
திருச்..சீ…சீ… மாநகரில் இடுகாட்டின் இழிநிலை ! அதிகார திமிர் !
https://angusam.com/the-infamy-of-idugat/