திருச்சி மத்திய சிறையில் வழிபாடு நடத்திய சிறைவாசி மீது தாக்குதல்!
திருச்சி மத்திய சிறை நிர்வாகத்தின் மீது ஏதாவது ஒரு குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கிறது. நைஜீரிய நாட்டைச் சேர்ந்த கைதி தப்பி ஓடியது, திருச்சி மத்திய சிறை காவலர்களின் சாதி ரீதியான பாகுபாடு என தொடரும் குற்றச்சாட்டு தற்போது மதரீதியான பாகுபாடும் திருச்சி மத்திய சிறையில் நடைபெறுகிறது என்றும் குற்றச்சாட்டு எழத் தொடங்கி இருக்கிறது.
பொதுவாக திருச்சி மத்திய சிறையில் சிறைவாசிகள் மதரீதியாக வழிபாடு நடத்த கோவில், தேவாலயம், இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்த தனி இடம் என தனித்தனி இடங்கள் உள்ளன. இந்நிலையில் சென்ற 2021ம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
இந்நிலையில் சிறைவாசியான முபாரக் என்பவர் தன் அறையில் அவருடைய இஸ்லாமிய நண்பர்கள் சிலருடன் தொழுகை நடத்தியிருக்கிறார். இதைக் கண்ட சிறை உளவுப் பிரிவான ஓசி டீமைச் (ORGANISED CRIME INVESTIGATING UNIT) சேர்ந்த ஜேசுதாஸ் கண்டித்திருக்கிறார். ஆனால் தொழுகை நடத்துவது எங்கள் உரிமை எனக் கூறி மீண்டும் நண்பர்களுடன் இணைந்து மாலை தொழுகை நடத்தியுள்ளார். இதைக் கண்டு கோபமான ஜேசுதாஸ் அவருடன் பணிபுரியும் நபர்கள் நால்வருடன் இணைந்து முபாரக் மற்றும் நண்பர்களை மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் ஜேசுதாஸை இருட்டு அறையில் அடைத்து வைத்தாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக முபாரக்கின் மனைவி திருச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மூலம் புகார் அளித்து உள்ளார்.
இது குறித்து திருச்சி மாவட்ட ஷாஹின்பாக் போராட்டக் குழுவினர் தங்களது முகநூல் பக்கத்தில் “ஜனநாயக நாட்டில் வழிபாட்டு உரிமை என்பது அனைத்து மதத்தினருக்கும் உள்ளது. சிறையிலும் இதுநாள் வரை கடைபிடிக்கப்பட்டு வரும் வழிபாட்டு உரிமை சிறை அதிகாரிகளால் தடைபடுகிறது. இதுபோன்ற உரிமைகளைப் பறிக்கும் அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசும், சிறை நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளனர்.
திருச்சி சிறைச்சாலையில் சாதியப் பாகுபாடுகள் நடைபெறுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு குற்றச்சாட்டுகள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.