பரிச்சை முடிந்ததும் பாட்டிலில் இன்க் பதில் மூத்திரத்தை புடிச்சி ஊத்தி அடிச்ச சிறுவன் மீது பாய்ந்த வன்கொடுமை வழக்கு…அதிர்ச்சி ரிப்போர்ட் !

0

ஆறு வயது சிறுவன் மீது மூத்திரத்தை ஊற்றிய ஒன்பது வயது சிறுவன் மீது வன்கொடுமை வழக்கு! – அதிர்ச்சி ரிப்போர்ட் !

ஆறு வயது சிறுவன் மீது, மூத்திரத்தை ஊற்றிய ஒன்பது வயதுச் சிறுவன். ”அப்படித்தான் ஊற்றுவான்” என ஆதரித்து நிற்கும் பெற்றோர். ஐந்தாம் வகுப்பு பயிலும் ஒன்பது வயது சிறுவன்; 16 வயது சிறுவன்; 18 வயது சிறுமி உள்ளிட்டு மொத்தக் குடும்பத்தின் மீதும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு. வழக்கிற்கு பயந்து, குடும்பத்தோடு தலைமறைவு வாழ்க்கை. உயிருக்குப் பயந்து ஊர் ஊராக அடைக்கலம் தேடி அலையும் வன்கொடுமைக்கு ஆளான குடும்பம்.

https://businesstrichy.com/the-royal-mahal/

சனாதனம் குறித்த சர்ச்சைகள் நிறைந்த சூழலில், டைம் ட்ராவல் செய்து வருணாசிரம காலத்திற்கே திரும்பி விட்டோமா? என ஒரு கணம் திகைக்க வைக்கிறது, இந்த சம்பவம்.

ராசாத்தி குடும்பத்தினர்
ராசாத்தி குடும்பத்தினர்

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஆறு வயது சிறுவன் மீது பாட்டிலில் அடைக்கப்பட்ட மூத்திரத்தை குடிடா என்று மேலே ஊற்றி, தன் வீட்டில் வளர்க்கும் 8 நாய்களைவிட்டு கடிக்க விட்டும் சாதி ரீதியில் இழிவாக பேசியும் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், வேண்டுமென்றே காலம்தாழ்த்தி சாதி இந்துக்களுக்கு ஆதரவாக செயல்படும் மணப்பாறை டி.எஸ்.பி. ராமநாதன் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை இயக்குநர் (DGP) க்கு புகார் அளித்திருக்கிறார், பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் ராசாத்தி.

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், மஞ்சம்பட்டியை அடுத்த விடத்திலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இளங்கோ – ராசாத்தி தம்பதியினர். இவர்களுக்கு 9 வயதில் மகளும் 6 வயதில் மகனும் உள்ளனர்.

வடிவேல் வீடு
வடிவேல் வீடு

இவர்கள் வசிக்கும் வீட்டிற்கு எதிரில் வடிவேல் என்பவர் குடியிருந்து வருகிறார். இவருக்கு அழகுமணி என்ற மனைவியும் பத்தாம் வகுப்பை நிறைவு செய்துவிட்டு கூலி வேலைக்கு செல்லும் 16 வயதில் ஒருமகன்; ஐந்தாம் வகுப்பு பயிலும் 9 வயதில் ஒரு மகன்; 12-ஆம் வகுப்பு பயிலும் 18 வயதில் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் வீட்டில் 8 நாய்களை வளர்த்து வருகின்றனர். இதில் ஒரு நாய் எதிர்வீட்டு ராசாத்தி என்பவர் வளர்த்து வந்த கோழி ஒன்றை கடந்த செப்-29 அன்று அடித்து தின்றிருக்கிறது. இதுதொடர்பாக அவர் முறையிட இரு குடும்பங்களுக்கிடையே வாக்குவாதமாக மாறியிருக்கிறது. இதனையடுத்து, செப்-30 அன்று பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ராசாத்தியின் மகன் மீது, ஒன்பது வயதேயான வடிவேலுவின் இளைய மகன் பாட்டிலில் நிரப்பப்பட்ட மூத்திரத்தை அறுவெறுக்கத்தக்க வகையில் அச்சிறுவன் மீது ஊற்றி அவமானப்படுத்தியிருக்கிறான்.

விடத்திலாம்பட்டி
விடத்திலாம்பட்டி

கணவருடன் குடும்பமாக சென்று இவ்விவகாரம் குறித்து கேட்டதற்கு, “என்னடி பறத்… ( அச்சில் ஏற்ற முடியாத வார்த்தை )  மகளே எப்போ பார்த்தாலும் எங்களைப் பற்றி ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கிறாய்” என்று சாதிரீதியில் இழிவுபடுத்தி பேசி மிரட்டியிருக்கின்றனர் வடிவேலு குடும்பத்தினர்.

இந்நிலையில், மீண்டும் அக்டோபர்-04 அன்று மாலை ராசாத்தியின் மகன் வீடு திரும்புகையில், வடிவேல் வீட்டு நாய் ஒன்று அச்சிறுவனை துரத்தியிருக்கிறது. நாயிடமிருந்து தப்பி ஓட முயற்சிக்கையில் நிலைதடுமாறி விழுந்து காயமடைந்திருக்கிறான். இவ்வாறு தொடர்ச்சியாக, வடிவேலு குடும்பத்தினரால் ஏதோ ஒரு வகையில் தொந்தரவு வந்து கொண்டேயிருப்பதற்கு முடிவு கட்டும் வகையில் மீண்டும் முறையிட்டிருக்கின்றனர். இந்தமுறை நியாயம் கேட்க சென்ற ராசாத்தியை ”ஏண்டி பறத் …. ( அச்சில் ஏற்ற முடியாத வார்த்தை ) , உன்னை அடித்தால் எவன்டி கேட்பான்” என சொல்லியே அடித்திருக்கிறார் வடிவேலு. வடிவேலு குடும்பத்தினரின் தாக்குதலில் காயமுற்ற ராசாத்தி போலீசில் புகார் கொடுக்க சென்றவரை மீண்டும் வழிமறித்து தாக்கியிருக்கிறார் வடிவேலுவின் மனைவி அழகுமணி.

அப்போது அங்கிருந்த ராசாத்தியின் உறவினர் சுரேஷ் என்பவர், அழகுமணியிடமிருந்து ராசாத்தியை மீட்டு 108 ஆம்புலன்சில் மருத்துவமணைக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அக்-05 அன்று மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ராசாத்தியிடமிருந்து வாக்குமூலத்தை மணப்பாறை போலீசார் பெற்று சென்றிருக்கின்றனர். அக்-04 அன்று மணப்பாறை மருத்துவமனையில் அட்மிட் ஆகி அக்-08 வரை ஐந்து நாட்கள் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று திரும்பிய வரையில் மணப்பாறை போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

எஸ்.பி. வருண் குமார்
எஸ்.பி. வருண் குமார்

இதனையடுத்து, அக்-11 அன்று தங்களுக்கு நேர்ந்த அவலத்தை மாவட்ட கண்காணிப்பாளர் வருண்குமார் ஐ.பி.எஸ். இடம் நேரில் விவரித்திருக்கின்றனர். அதன்பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லை. இறுதியாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஐ.ஏ.எஸ். அவர்களை இரவு 7 மணி வரை காத்திருந்து அவரை நேரில் சந்தித்து முறையிட்டிருக்கின்றனர். மாவட்ட ஆட்சியரின் தலையீட்டுக்குப் பிறகே, அதாவது சம்பவம் நடைபெற்று 11 நாட்கள் கழிந்த நிலையில் அக்-15 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கின்றனர் மணப்பாறை போலீசார்.

மணப்பாறை காவல்நிலைய குற்ற எண்: 522/2023 இன் படி இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 147, 294 (b), 323, 506 (1) மற்றும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புத் திருத்தச் சட்டம் 2015 பிரிவுகள் 3 (1) (r) , 3 (1) (s) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் டி.ஜி.பி.க்கு புகார் கொடுத்த நாளான அக்-18 வரையில் வடிவேலு தம்பதியினர் கைது செய்யப்படவில்லை.

பிரதீப்குமார் IAS
பிரதீப்குமார் IAS

இந்நிலையில்தான். “நியாயம் கேட்ட என்னை சாதி ரீதியாக இழிவாகப் பேசி, கடுமையாகத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து, சித்திரவதை செய்த வடிவேல், அவரது மனைவி அழகுமணி உள்ளிட்ட வன்கொடுமை கும்பல் மீது கூடுதலாக எஸ்.சி./எஸ்.டி வன்கொடுமை தடுப்புத் திருத்தச் சட்டம் 2015 பிரிவுகள் 3(1)(a), 3(2)(va), 3(1)(w)(ii) & 4 of TNPHW Act மற்றும் வேண்டுமென்றே தனது கடமையை செய்யாமல் சாதி இந்துக்களுக்கு ஆதரவாக செயல்பட்ட மணப்பாறை டி.எஸ்.பி. மீது எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2015 பிரிவு 4-ன் கீழ் வழக்குப் பதிவு செய்தும், குற்றவாளிகளை போலீசார் உடனடியாக கைது செய்தும், இவ்வழக்கினை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க உத்தரவிட்டும், பாதிக்கப்பட்ட எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் தகுந்த நீதி. நிவாரணம் மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்ற கோரிக்கையுடன் டி.ஜி.யிடம் முறையிட்டிருக்கிறார், ராசாத்தி.

டி.எஸ்.பி. ராமநாதன்
டி.எஸ்.பி. ராமநாதன்

இக்குற்றச்சாட்டுக்கு குறித்து, மணப்பாறை டி.எஸ்.பி. ராமநாதனிடம் பேசினோம். ”நானும் மணப்பாறை இன்ஸ்பெக்டர்கிட்ட விசாரிச்சேன். ரெண்டு பேருமே சின்ன பசங்க. நிதானமா விசாரிச்சிட்டு நடவடிக்கை எடுக்கலாம்னு கொஞ்சல் லேட் பண்ணிட்டாரு. இது சென்சிட்டிவான விசயம். எடுத்தோம் கவிழ்த்தோம்னு அணுக முடியாது. மலைப்பகுதி வேற. அக்கம்பக்கத்துல யாருமே சம்பவம் பத்தி தெரியலனு சொல்றாங்க. இவங்க சொல்றது மட்டும் வச்சி நடவடிக்கை எடுத்திட முடியாது. முறையான விசாரணைக்கு பிறகுதான் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியும். இல்லைனா, நான் பதில் சொல்ல வேண்டிவரும். குறிப்பா, அந்த பொண்ணு எஸ்.சி. இல்லைனு சொல்றாங்க. சாதிச்சான்றிதழ் கூட இப்போதான் வாங்கியிருக்காங்க. வழக்கு பதிவு செய்திட்டோம். விசாரணை போய்கிட்டு இருக்கு. நடவடிக்கை எடுப்போம்.” என்கிறார், அவர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இளங்கோ – ராசாத்தி தம்பதியினர்
இளங்கோ – ராசாத்தி தம்பதியினர்

”டி.எஸ்.பி. எங்களையே குற்றவாளி மாதிரி மடக்கி மடக்கி கேள்வி கேக்குறாரு. லோக்கல் போலீசு நடவடிக்கை எடுக்கலைனுதான் எஸ்.பி.கிட்ட போனோம். இதுலாம் ஒரு கேசுனு வந்திருக்கீங்களேனு கேட்குறாரு அவரு. ரெண்டு பேருமே மைனர் பசங்க. அவங்க மேல எப்படி நாங்க கேசு போட முடியும்னுட்டாரு. அதுக்கப்புறம்தான் கலெக்டர்கிட்ட போனோம். நீங்க வீட்டுக்கு போறதுக்குள்ள ரிமாண்டு பன்னிடுவாங்கனு சொல்லி அனுப்பிச்சாரு.

சொந்த காச போட்டு கட்டுன வீட்டுல தங்க முடியாம நாங்க ஏதோ குற்றவாளி மாதிரி 20 நாளா சொந்தகாரங்க வீட்ல தங்கியிருக்கோம். எஸ்.பி. சொன்னாருனு வீட்டுக்கு போனா, வீட்டு மேல கல்லு விழுது. போலீசு இருக்கும்போதே கல்ல வீசுறாங்க. எங்க உயிருக்கு பாதுகாப்பு இல்லை.” என கதறியழுகின்றனர் இளங்கோ – ராசாத்தி தம்பதியினர்.

சொல்ற மாதிரி ரெண்டு பேருமே சின்ன பசங்க. சின்ன பசங்க விசயத்தை பெரிசுபடுத்தலாமா? என்ற கேள்வியை முன்வைத்தோம். ”நீங்க கேட்கிறது நியாயம்தான். பரிச்சை முடிஞ்சி அன்னைக்கு எல்லோரும் இன்க் அது இதுனு ஒருத்தன் ஒருத்தன் அடிச்சிருக்காங்க. பத்து வயசு பையன் பத்து ரூபா ஜூஸ் பாட்டில்ல மூத்திரத்தை புடிச்சி மேல ஊத்திட்டு அடிச்சிட்டே வந்திருக்கான். என் பொண்ணு கேட்டிருக்கா. அதுக்கு அவளையும் அடிச்சிருக்கான். சரி அவங்கதான் சின்ன பசங்க. நடந்தத அவங்க அம்மாகிட்ட சொல்றோம். என் பையன் அப்படித்தான் அடிப்பான். மூத்திரத்தை ஊத்துவான்னு என்ன சாதிய சொல்லி திட்டினாங்க. அப்பவே, அவங்க கண்டிச்சிருந்தாகூட நாங்க விட்ருப்போமே.” என்கிறார், ராசாத்தி.

மணப்பாறை காவல்நிலையம்
மணப்பாறை காவல்நிலையம்

“அவங்க ஊராளி கவுண்டர் சாதிய சேர்ந்தவங்க. நாங்க என்ன ஆளுங்கனு தெரிஞ்சுதான், இங்க நாங்க வந்த புதுசில மாசம் 200 வாங்கிட்டு அவங்க வீட்ல தண்ணீர் புடுச்சிக்க சொன்னாங்க. அப்படி தண்ணி பிடிக்கிறப்போ, பைப்ல குடம் படாம தள்ளி வை. பைப்ப தொடாம தண்ணி பிடினு ஒதுக்கிதான் பேசுவாங்க. சாதிய வச்சி மட்டமா நடத்துறதாலேயே, நாங்க தண்ணி பிடிக்கிறத நிப்பாட்டிட்டோம். ஒருவாட்டி, என் பொண்டாட்டியை பறச்சினு சொல்லி திட்டியிருக்காங்க. அதுக்கு கேட்டதுக்கு, பறச்சிய பறச்சினு சொல்லாம? குடியானச்சினு சொல்லனுமா? சண்டைக்கு வந்தாங்க. தொடர்ச்சியாகவே, எங்கள சாதி ரீதியாகத்தான் இழிவுபடுத்தி வந்தாங்க.” என்கிறார், இளங்கோ.

”டி.எஸ்.பி. நீ என்ன சாதினு கேட்குறாரு. பாட்டிதான் வளர்த்தாங்க. அப்பா, அம்மா இல்லை அநாதைனு தெரிஞ்சுதான் திருப்பூர்க்கு வேலைக்கு போன இடத்துல இவரு என்னய கல்யாணம் செஞ்சிகிட்டாரு. நான் படிக்கவே இல்லை. எந்த சர்டிபிகேட்டும் இல்லை. பாட்டியும் இல்லை. நான் எந்த சாதினு எனக்கு தெரியாதா, நான் எஸ்.சி.தானு சொல்றேன். பொய் சொல்றனு சொல்றாங்க. எனக்கு நினைவு தெரிஞ்சி பாட்டி வெளிய கூட்டிட்டு போறப்போ, தண்ணி தாகம் எடுத்தா கொட்டாங்குச்சியிலதான் தண்ணி கொடுப்பாங்க. அப்படி நானே குடிச்சிருக்கேன்.” என்கிறார், ராசாத்தி.

”அன்னைக்கு வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தப்போ, மகனுக்கு சரியான ஜூரம். என்ன ஆச்சுனு கேட்டதுக்கு எதுவுமில்லைனு மறைக்க பார்த்தாங்க. கோபமா கேட்டதுக்கு அப்புறம்தான், இந்த மாதிரி மூத்திரத்த ஊத்திட்டாங்கனு அழுதுகிட்டே என் மனைவி சொன்னாங்க. ராத்திரி நேரமாச்சு இப்போ எதுவும் பேசக்கூடாது, விடியட்டும்னு இருந்துட்டேன். ஒன்னாவது படிக்கிற பையனுக்கு என்ன சார் தெரியும்? அவனுக்கு போயிட்டு இந்த மாதிரி ஒரு கொடுமை நடக்கனுமானு நினைச்சி அன்னைக்கு தூங்கவே முடியல. சோறுகூட திங்காம விசனம் புடுச்சி விடியவரைக்கும் முழிச்சிகெடந்தேன். டி.எஸ்.பி. விசாரிச்சப்போ, இத சொன்னதுக்கு உன்னை யாரு சோறு திங்காம முழிச்சி இருக்க சொன்னதுனு நக்கலா கேக்குறாரு சார். இவரு பன்ற விசாரணைய நாங்க எப்படி நம்பிக்கையா ஏத்துக்க முடியும் சொல்லுங்க?” என கேள்வி எழுப்புகிறார்,

ஆரம்பம் முதல் இப்போது வரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் சக்திவேல் தான் எங்களுக்கு சப்போர்ட் செய்து வருகின்றார். அவங்க தான் எவிடன்ஸ் கதிர் சார பார்க்க சொன்னாங்க. அவருக்கிட்டயும் எங்களுக்கு நடந்த கொடுமையை சொல்லிட்டு வந்தோம் என்கிறார் இளங்கோ.

குழந்தைகள் நல உரிமைகள்..
குழந்தைகள் நல உரிமைகள்..

”தாழ்த்தப்பட்டோர்கள் மீதான தாக்குதல் நடைபெற்ற 24 மணிநேரத்திற்குள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென்று சட்டம் தெளிவாக குறிப்பிடுகிறது. இந்த விவகாரத்தில் 11 நாட்கள் கழித்துதான் எஃப்.ஐ.ஆர். போட்டிருக்கிறார்கள். இதுவே முதலில் தவறு.

வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வரும் புகார்களை விசாரணை செய்துதான் எஃப்.ஐ.ஆர் போட வேண்டுமென்று 2018 இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அது சமூகத்தில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிறகு, 2019 இலேயே, இந்தியாவில் தீண்டாமை இன்னும் நீடிக்கிறது. எனவே, முந்தைய தீர்ப்பை திரும்பப்பெற்றுக்கொள்கிறோம் என உச்சநீதிமன்றமே பின்வாங்கியது. ஒரு புகார் வந்தால் எஃப்.ஐ.ஆர். ஐ பதிவு செய்துவிட்டு விசாரணை நடத்துங்கள். விசாரணையில் பொய் என்று தெரிய வந்தால், எஃப்.ஐ.ஆர்.ஐ ரத்து செய்துவிட்டு போகலாமே. என்னை பொருத்தவரையில் இந்த 11 நாள் தாமதம் என்பதே சாதிய வன்மமாகவே பார்க்கிறேன்.

அடுத்தவிசயம், பாதிக்கப்பட்டவனும் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பவர்களும் சிறுவர்கள். ஒன்பது வயது பையன் மூத்திரத்தை ஊற்றியிருக்கிறான். 16 வயது பையன் சாதிய வன்மத்தோடு ராசாத்தியின் மீது கல்லை விட்டெறிந்திருக்கிறான். அவர்களை அப்படியே விட்டுவிட முடியுமா? சட்டத்திற்கு முரண்பட்டவர்களாக இவர்களை கருதி உரிய கவுன்சிலிங் கொடுக்கப்பட வேண்டும். இல்லையெனில், எதிர்காலத்தில் சாதிய வன்மத்தோடு பெருங்குற்றங்களை இழைப்பதற்கு வழிவகுத்துவிடும்.

எவிடன்ஸ் கதிர்
எவிடன்ஸ் கதிர்

வேங்கைவயல் விவகாரம் எடுப்பான உதாரணமாக இருக்கிறது. விசாரணை அதிகாரியாக இருந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் அந்த கிராமத்து சிறுவர்களுக்கு சாக்லேட் வாங்கிக்கொடுத்து குழந்தைகளோடு குழந்தைகளாக பழகி விசாரணையை நடத்தி காட்டியிருக்கிறார். இவை எதுவும் இந்த விவகாரத்தில் கடைபிடிக்கப்படவில்லை. குற்றத்தில் தொடர்புடைய குழந்தைகளுக்கு உரிய கவுன்சிலிங்கும், குற்றமிழைத்த தம்பதியினருக்கு சட்டரீதியான தண்டனையும் வழங்க வேண்டும்.” என்கிறார், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருந்து இவ்விவகாரத்தை கையாண்டு வரும் எவிடென்ஸ் கதிர்.

”18 வயதிற்குட்பட்ட இளம் சிறார்கள் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நேர்வுகளில், சட்டத்திற்கு முரண்பட்டவர்களாக கருதி அவர்களை தனிச்சிறப்பான முறையில் விசாரணை நடத்துவதற்கென்றே உரிய சட்ட நடைமுறைகள் இருக்கின்றன. எந்த போலீசு நிலையத்தில் வழக்குப்பதிவு செய்கிறார்களோ, அவர்கள்தான் எங்கள் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். இந்த விவகாரம் இதுவரை எங்களது கவனத்திற்கு வரவில்லை. விசாரிக்கிறோம்.” என்கிறார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ் செயல்படும் இளைஞர் நீதிக்குழுமத்தின் உறுப்பினர்.

எதிரெதிர் வீடுகளுக்கு இடையிலான, குறிப்பாக பெண்களுக்கிடையிலான சண்டை என்பது பொதுவில் எல்லா இடங்களிலும் நடைபெறுகிற ஒன்றுதான். இந்த தெருச் சண்டை, சாதிய ரீதியிலான இழிவுபடுத்தலில் தொடங்கி வன்கொடுமையாக மாறியிருக்கிறது.

ஒன்பது வயது பையனை புடுச்சி இன்னும் ஏன் சிறையில் அடைக்கவில்லை? என்பதல்ல, நம் கேள்வி. வடிவேலுவை சுட்டுப்பிடிக்க வேண்டும் என்பதுமல்ல அவர்களது கோரிக்கை. சம்பவம் நடந்து, இன்றோடு இருபது நாட்களைக் கடந்த நிலையில், போலீசு புடுச்சிருமோனு பயந்து ஒன்பது வயது சிறுவனும்; உயிருக்குப் பயந்து ஆறு வயது சிறுவனும் சொந்த வீட்டுக்குத் திரும்ப முடியாமல், குடும்பத்தோடு தலைமறைவு வாழ்க்கை வாழ நேரிட்ட துயரம் உங்களை உலுக்கியெடுக்கவில்லையா?

வே.தினகரன்

படங்கள் – ஆனந்த்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.