சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் 10 காரணிகள்
பக்கவாதத்தை ஏற்படுத்தும் காரணிகளில் மிகவும் முக்கியமானது சர்க்கரை நோய். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சந்ததிகள் (குழந்தைகள்) என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.
2020-ல் இந்தியாவில் ஒவ்வொரு ஏழாவது நபருக்கும் நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. அப்படியானால் குடும்பத்தில் குறைந்தது ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்டோருக்கு சர்க்கரை நோய் இருக்கும். அப்படித்தானே?… இதில் பிறந்த குழந்தை முதல் வயதான முதியவர்கள் வரை அடக்கம்.
எப்படி சர்க்கரை வியாதி வராமல் நம்மை காத்துக் கொள்வது என்பதை அனைவரும் யோசிக்க வேண்டும். இதற்கு நாம் உண்ணும் உணவு, உடல் மற்றும் உள்ளம் ஆகிய மூன்றையும் கவனிக்க வேண்டும். இந்த மூன்றில் தான் வாழ்க்கையின் சூட்சுமம் உள்ளது.
Dr. அ.வேணி MD., DM (NEURO)
மூளை நரம்பியல் நிபுணர்
இவ்வுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் உயிருடன் இருப்பதற்கு முழு முதற்காரணம் இயற்கை நமக்கு அளிக்கும் சூரிய சக்தி. எனவே, சூர்யோதயத்திற்கு முன் எழுந்து இறை வணக்கத்துடன் நாளைத் தொடங்க வேண்டும்.
உண்ண உணவு, இருக்க இடம் மற்றும் உயிர்வாழ ஆக்ஸிஜன் கொடுத்து நம் அனைவரையும் தாங்கி நிற்கும் இயற்கையை வணங்குவதற்கும், நன்றி கூறுவதற்கும் மத வேறுபாடுகள் தேவையில்லை.
முதலில் நாம் இயற்கைத் தாயோடு இணைந்து இயல்பாக வாழ வேண்டும். சூர்யோதயத்திற்கு முன் எழுந்து வேலையைத் தொடங்கி, இரவு 10 மணிக்குள் முடித்து விட்டு உறங்கச் செல்ல வேண்டும். இரவில் பணிபுரிபவர்களுக்கு இது மிகவும் அதிர்ச்சியைத் தரும்.
ஆனால், இரவு உறக்கம் போன்று மூளைக்கும் மற்ற உடல் உறுப்புகளுக்கும் ஓய்வை பகல் உறக்கம் அளிப்பதில்லை. எனவே, இரவு நேர வேலைகளை தவிர்ப்பது நல்லது.
காலையில் எழுந்தவுடன் பல்துலக்கி, காலைக்கடன் முடித்துவிட்டு, வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
சர்க்கரை வியாதி வராமல் தடுப்பதற்கு தினமும் நடைப்பயிற்சி மேற்கொண்ட பிறகு, சில யோகாசன பயிற்சிகள் செய்வது நல்லது.
மனதையும் உடலையும் நல்ல ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்வதற்கு யோகாசனப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் மேற்கொள்வது அவசியமாகிறது. உடல் எடையையும் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
1. ஆரோக்கியமான உடல் எடை = உயரம் (cm) – 100
2. இடை – இடுப்பு விகிதம் (waist – hip ratio) = இடை அளவு/இடுப்பு அளவு(cm)
உடல் எடை மட்டுமல்லாமல் இடை – இடுப்பு விகிதம் (waist – hip ratio) சரியாக இருக்க வேண்டும். இந்த விகிதமானது பெண்களுக்கு 0.8-ஐ விடக் குறைவாகவும், ஆண்களுக்கு 0.9-ஐ விடக் குறைவாகவும் இருக்க வேண்டும். இந்த விகிதமானது 0.8 விடக் குறைவாக இருக்கும் போது நம் உடலில் இன்சுலின் என்னும் நொதி அதிக அளவில் சுரக்கும். அதிக உடல் எடை கொண்டவர்களுக்கு இந்த விகிதமானது அதிகரிக்கும். எனவே, உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள நாம் எதையுமே பசிக்காமல் புசிக்கக் கூடாது.
வாரம் ஒரு நாள் திடப்பொருட்களைத் தவிர்த்து திரவப்பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டால் நமது குடலுக்கும் ஓய்வு கொடுத்தது போல் இருக்கும்.
பரபரப்பு இல்லாமல் மன அமைதியுடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், துன்பத்தையும் சமமாகப் பார்க்கப் பழக வேண்டும். பிறரிடம் எதையும் எதிர்பார்த்துப் பழகக் கூடாது. பெற்ற குழந்தைகளே ஆனாலும் அன்பையும், பாசத்தையும் நாம் கொடுக்க வேண்டுமே தவிர, அவர்களிடமிருந்து நாம் எதையும் எதிர்பார்க்கக் கூடாது. ஆகையால், நாம் நம் கடமைகளைச் செய்ய வேண்டுமே தவிர பலனை எதிர்பார்க்கக் கூடாது.
கீழே குறிப்பிட்டுள்ள 10 விஷயங்களைச் செய்யப் பழகிக் கொண்டோமேயானால் சர்க்கரை நோய் நம் முந்தைய தலைமுறையினருக்கு இருந்தாலும் நமக்கு வராமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
1. எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும்.
2. பசிக்காமல் எதையும் உண்ணக் கூடாது.
3. பழங்கள், காய்கள் மற்றும் சிறுதானியங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
4. அளவான உடல் எடையுடன் இருக்க வேண்டும்.
5. தினமும் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி மற்றும் தியானம் செய்ய வேண்டும்.
6. இரவு 10 மணியிலிருந்து காலை 4 மணிவரை கண்டிப்பாக உறங்க வேண்டும்.
7. மனப் பதட்டத்தை குறைத்து மன அமைதியுடன் வாழப் பழக வேண்டும்.
8. நம் கடமைகளைச் சரிவர செய்து, நம்மிடம் பழகுபவர்களிடம் உண்மையாக இருந்தாலே மனப்பதட்டம் குறையும்.
9. நேரத்தை சரியாகப் பயன்படுத்துங்கள்.
10.தொலைக்காட்சி, சமூக வலைதளங்களில் கவனம் செலுத்தாமல் உங்கள் உடல்ஆரோக்கியத்தின் மீது கவனம் வையுங்கள்.
பக்கவாத நோயினை உண்டாக்கும் காரணியான மாரடைப்பு பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.
(விழிப்போம்)…