உங்க உடம்புல… உள்காயம் இருக்கா? இருந்தா ஹார்ட்அட்டாக் வரும்…

0

உங்க உடம்புல… உள்காயம் இருக்கா? இருந்தா ஹார்ட்அட்டாக் வரும்…

இதய ரத்த நாளங்களில் எப்படி அடைப்பு ஏற்படுகிறது ? என்று கேட்டால் அனைவரும் கூறும் பதில் “கொழுப்பு படிந்து இதயத்தின் நாளங்கள் அடைத்துக் கொள்கின்றன” என்பதாய் இருக்கும். ஆனால் இதயத்தின் ரத்த நாளங்கள் மட்டுமின்றி உடலின் அனைத்து ரத்த நாளங்களிலும் தொடர்ந்து பல காலமாக நீடித்து வரும் உள்காயங்களின் காரணமாகவே இந்த அடைப்புகள் ஏற்படுகின்றன. நமது உடலின் ரத்த நாளங்களின் உட்புற சுவரை “எண்டோதீலியம்” என்று அழைக்கிறோம். அந்த உட்புற சுவரில் சிராய்ப்பு போன்ற காயங்களை தொடர்ந்து ஏற்படுத்துவதை “இன்ஃப்லமேசன்” என்கிறோம்.

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

எப்படி நமது தோலில் காயம் ஏற்பட்டவுடன் அந்த காயத்தை ஆற்றுவதற்கு ரத்தத்தில் தட்டணுக்கள் மற்றும் காயத்தை ஆற்றும் பொருட்கள் ஒன்றிணைந்து சுயமாக காயத்தை ஆற்றுகின்றதோ, அதே போல ரத்த நாளங்களின் உள்காயங்கள் ஏற்படும் போதும் அந்த காயத்தை ஆற்றும் முகமாக எல்டிஎல் (LDL) எனும் கொழுப்பு புரதம் தன்னிடம் உள்ள கொழுப்பை அந்த காயங்களின் மீது பூசி அதை குணமாக்க முயல்கிறது. ரத்த நாளங்களின் சிராய்ப்பு போன்ற காயங்கள் – தட்டணுக்களை தூண்டி விடுகின்றன. அவையும் அந்த காயங்கள் மீது பூச்சை ஏற்படுத்துகின்றன.

நமது ரத்த நாளங்களில் தொடர் உள்காயங்களை ஏற்படுத்தும் விசயங்களில் முக்கிய மானவை “இன்சுலின் எதிர்ப்புநிலை” (INSULIN RESISTANCE)  கணையத்தில் சுரக்கப்படும் இன்சுலின் அதன் பணியை சரியாக செய்யாமல் இருப்பதால் கணையம் அதிகமாக இன்சுலினை சுரக்கும். ரத்தத்தில் இன்சுலின் அளவுகள் அதிகமாக இருப்பது உள்காயங்களை தூண்டும்.

- Advertisement -

4 bismi svs

நீரிழிவு (DIABETES MELLITUS)  ரத்தக் கொதிப்பு ( HYPERTENSION)  உடல் பருமன் (OBESITY) போன்ற வைகளுக்கு ஆதியும் இந்த இன்சுலின் எதிர்ப்பு நிலையே ஆகும். ரத்தத்தில் தேவைக்கு அதிகமாக க்ளூகோஸ் (GLUCOTOXICITY)  இருப்பதும் தேவைக்கு அதிகமாக ரத்த அழுத்தம் இருப்பதும் தொடர்ந்து ரத்த நாளங்களின் உட்புற சுவர்களில் காயங்களை ஏற்படுத்துபவை. அதீத மன அழுத்தத்தின் விளைவாலும் சரியான உறக்கமின்மையாலும் ரத்தத்தில் கார்டிசால் அளவுகள் அதிகாமாகவே இருக்கும் போது ரத்த நாளங்களில் உள்காயங்கள் தொடர்ந்து ஏற்படுகின்றன.

புகை பழக்கம் , மதுப் பழக்கம் போன்றவற்றாலும் இந்த உள்காயங்கள் ஏற்படுகின்றன. கோவிட் நோய் போன்ற வைரஸ் தொற்றுகளின் போது அந்த வைரஸுக்கு எதிராக நமது உடல் போர் புரியும் போது ரத்த நாளங்களில் உள்காயங்கள் ஏற்படுகின்றன. இவையன்றி இந்த உள்காயங்கள் மரபணுக்காரணிகளாலும் ஏற்படுகின்றன சாதாரண நிலையில் நமது உடலில் உண்டாகும் உள்காயங்களை ஆற்றுவதற்கு எல்டிஎல் கொழுப்பு புரதத்தில் உள்ள கொலஸ்ட்ரால் உபயோகப்படுகிறது. ஆனால் அதுவே இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ் நிலையில் எல்டிஎல் அளவில் சிறியதாகி விடுகிறது.

ரத்த நாளத்தின் எண்டோ தீலியத்துக்குள் இந்த சிறிய எல்டிஎல் ஊடுறுவி விடுகிறது. ரத்த நாளத்தின் சுவர்களுக்குள் சென்ற இந்த சிறிய ஊறு விளைவிக்கும் எல்டிஎலின் விளைவால் ரத்த நாளத்துக்குள் தலையணையில் பஞ்சு திணித்தது போல வீக்கம் ஏற்படுகிறது. கெட்ட சிறிய எல்டிஎல் கொழுப்பு எனும் பஞ்சு அளவுக்கதிகமாக திணிக்கப்படும் போது ஒரு நாள் – ரத்த நாளத்தின் உட்புற சுவரில் திடீரென வெடிப்பு ஏற்படுகிறது. இந்த வெடிப்பு ஏற்பட்டவுடன் ரத்த தட்டணுக்கள் உடனே தூண்டப்பட்டு ஒன்றிணைந்து அந்த வெடிப்பை அடைக்க வருகின்றன. இதனால் ரத்த நாளத்தின் விட்டம் குறைந்து மாரடைப்பு / மூளை ரத்த நாள அடைப்பு ஏற்படுகிறது.

நமது ரத்த நாளங்களில் உள்காயங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?- இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் இல்லாத நிலையை அடைய வேண்டும். அதிக மாவுச்சத்து உணவு முறையை விடுத்து குறைந்த மாவுச்சத்து உண்ணும் உணவு முறையை பேண வேண்டும் – நீரிழிவு ரத்தக் கொதிப்பை கட்டுக்குள் வைக்க வேண்டும். மது புகை போன்ற தீய பழக்கங்களை தவிர்க்கவும் மன அழுத்தம் குறைக்கவும் முறையாக உறங்கவும் – தினசரி உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் இனிப்பு / எண்ணெயில் பொரித்தவை / பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்பவை / குளிர் பானங்கள் ஆபத்தானவை நாள்தோறும் ரத்த நாளங்களில் உள்காயங்களை ஏற்படுத்தும் மேற்கூறியவற்றை நிறுத்தாமல் கொழுப்பு சத்துள்ள உணவுகளை மட்டும் நிறுத்துவதால் எந்த பலனும் இல்லை மாறாக ஆபத்து தான் அதிகரிக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.

–  Dr. அ. ப.ஃபரூக் அப்துல்லா,
பொது நல மருத்துவர், சிவகங்கை

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.