கல்விக் கட்டணத்திற்கும் ஜி.எஸ்.டி.யா..? துணைவேந்தரை பணிய வைத்த ஆசிரியர் சங்கம்..!

-ஆதவன்

0

 

கடந்த ஓராண்டு காலத்திற்கு முன்பு துணைவேந்தராக முனைவர் செல்வம் பொறுப்பேற்றவுடன் AUT என்றழைக்கப்படும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் திருச்சி மற்றும் தஞ்சை மண்டலங்கள் சார்ந்த இணைவு பெற்ற கல்லூரிகளில் தீர்க்கப்பட வேண்டிய மாணவர், ஆசிரியர் பிரச்சனைகளைப் பட்டியலிட்டு, கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. ஓராண்டு கடந்தும்  பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பிரச்சனைகளை தீர்க்கவும் இல்லை. ஆசிரியர் சங்கத்தை அழைத்துப் பேசவும் இல்லை. சந்திக்கவேண்டும் என்று சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டால், சந்திக்க நேரம் ஒதுக்காமல் போக்கு காட்டிக் கொண்டிருந்தார்.

https://businesstrichy.com/the-royal-mahal/

இந்நிலையில், AUT சங்கத்தின் திருச்சி-&தஞ்சை மண்டல ஆசிரியர்கள் அடங்கிய பாரதிதாசன் பல்கலைக்கழகக் கூட்டுக் குழு கடந்த மாதத்தில் தஞ்சையில் கூடி, துணைவேந்தரின் செயல்படாத தன்மைக்குக் கண்டனம் தெரிவித்து, 31.03.2022ஆம் நாள் பல்கலைக்கழக வாயிலில் ஆசிரியர், ஆய்வாளர்கள், மாணவர்கள் என 1000 பேரைத் திரட்டிப் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று கூட்டுக் குழுத் தலைவர் பூண்டி புஷ்பம் கல்லூரி பேராசிரியர் சந்திரன் தலைமையில் கூடி முடிவெடுக்கப்பட்டது. செயலாளர் திருச்சி தூயவளனார் கல்லூரிப் பேராசிரியர் சார்லஸ் கோரிக்கைகளைப் பட்டியலிட்டுத் துணைவேந்தர் மற்றும் பதிவாளருக்கு கடிதம் எழுதினார். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் 31.03.2022ம் நாள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடிதத்தைப் பெற்றுக் கொண்ட பல்கலைக் கழகத்தின் பதிவாளர் 28.03.2022ஆம் நாள் பேச்சுவார்த்தைக்குத் அழைப்பு விடுத்தார். 28, 29 தேசிய வேலைநிறுத்தம் என்பதால் கலந்துகொள்ள இயலாது என்று சங்கத்தினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, பதிவாளர் மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை ஒத்திவைத்து 04.04.2022ஆம் நாள் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று 29.03.2022ஆம் சங்கத்தினருக்கு கடிதம்  அனுப்பினார்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

இதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பேராசிரியர் கிருஷ்ணராஜ், பொருளாளர் சேவியர் செல்வகுமார், தலைவர் சந்திரன், செயலாளர் சார்லஸ், ஆட்சிக்குழு உறுப்பினர் சுகுணா, தஞ்சை மண்டலப் பொறுப்பாளர் கோகுல், திருச்சி மண்டலப் பொறுப்பாளர் லீமாரோஸ் முன்னாள் பொறுப்பாளர்கள் சொக்கலிங்கம், பெலிசியா, தி.நெடுஞ்செழியன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். பல்கலைக்கழகம் சார்பில் துணைவேந்தர் செல்வம், பதிவாளர் எல்.கணேசன், ஆராய்ச்சி இயக்குநர் முத்துசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். மாலை 4.00 மணிக்குத் தொடங்கியப் பேச்சுவார்த்தை 5.30 மணி வரை காரசாரமாக நடைபெற்றது. பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல் துணைவேந்தர் திணறினார். பதிவாளர் “உங்கள் கோரிக்கையில் உள்ள உண்மையைப் புரிந்துகொள்கிறோம். அரசுக்கு எழுதுகிறோம்” என்றார்.

இயக்குநர் முத்துசாமி, “ஆராய்ச்சி இயக்குநர் பொறுப்பு எனக்குக் கூடுதல் பொறுப்பு. என்னால் இயன்றவரை செயல்பட்டேன். முழுநேர இயக்குநர் நியமிக்கப்படுவதால் நான் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள இருக்கிறேன்” என்று பதில் கூறி நழுவிக்கொண்டார்.

Ph.D., M.Phil. ஆராய்ச்சிப் படிப்பில் உள்ள மாணவர்களின் கட்டணம் கொரோனா காலத்தில் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. ஏழை மாணவர்கள் ஆராய்ச்சி செய்வது கேள்விக்குறியாய் உள்ளது. மாணவர்களிடம் வசூல் செய்யப்படும் கட்டணங்களுக்கு GSTவசூல் செய்யப்படுகின்றது. இவை திரும்பப் பெறப்படவேண்டும் என்று AUT பொதுச்செயலாளர் முதல் கோரிக்கையை முன்வைத்தபோது, துணைவேந்தர், “இந்தக் கட்டண உயர்வு ஆட்சிக் குழுவில் எடுக்கப் பட்ட முடிவு. இதைத் திரும்பப் பெறமுடியாது” என்று அழுத்தமாகக் கூறினார்.

தமிழ்நாட்டில் எந்தப் பல்கலைக் கழகத்திலும் இப்படி 3 மடங்கு கட்டண உயர்வு இல்லை. மேலும் GST வசூல் செய்வதன் மூலம், கல்வியைக் கடைச் சரக்காக மாற்றிவிட்டீர்கள். மாணவர் நலனை, அதுவும் ஏழை மாணவர்களின் நலனைப் புறக்கணித்துள்ளீர்கள்.

UGC நடத்தும் தேர்வுக் கட்டணத்தில் GST வசூல் செய்யப்படவில்லை. நீங்கள் வசூல் செய்வது என்ன அறம்? பாரதிதாசன் பல்கலைக்கழகம் மாநில அரசின் நிதியில் நடைபெறுவதுதானே? இல்லை சுயநிதி பல்கலைக்கழகமா?” என்று கிருஷ்ணராஜ் எழுப்பிய கேள்விகளுக்குத் துணைவேந்தர் பதில் சொல்லமுடியாது திணறிக் கொண்டு,“பல்கலைக்கழகம் நடத்தப் போதிய நிதி இல்லை என்பதால் தான் மாணவர்களிடம் கட்டண உயர்வைச் சுமத்தினோம். விரைவில் கட்டண உயர்வை இரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு ஒப்படைத்து வாய்மொழித் தேர்வு 4 ஆண்டுகள் கடந்தும் நடைபெறாமல் உள்ளது, வாய்மொழித் தேர்வு குறித்து இணையத்தில் செய்திகள் புதுப்பிக்கப்படுவதில்லை, பெருந்தொற்றுக் காலத்தில் முனைவர் பட்ட ஆய்வேடுகளை ஒப்படைக்க UGC ஓராண்டு காலம் வழங்கிய நீட்டிப்பைப் பல்கலைக்கழகம் வழங்காமல் மறுப்பது என்பதில் ஆய்வு மாணவர்களின் மனஉளைச்சல் அடங்கியிருக்கவில்லையா? என்று கேள்விகள் முன்வைக்கப்பட்டது.

இயக்குநர் முத்துசாமி இதற்குப் பதில் அளிக்கும் போது ,“4ஆண்டுகள் கடந்தும் வாய்மொழித் தேர்வு நடைபெறாத ஆய்வாளர்களின் பட்டியலைக் கொடுங்கள். நடவடிக்கை எடுக்கிறோம்” என்றவுடன் UCC சார்பில் 4 பக்கம் அடங்கிய ஆய்வாளர்கள் பட்டியல் வழங்கப்பட்டது. இயக்குநர் முத்துசாமி, “உடனே நடவடிக்கை எடுக்கிறோம்” என்றார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

முனைவர் பட்ட ஆய்வாளர்கள் பல்கலைக் கழகத்திற்கு ஆய்வேடுகளை ஒப்படைக்கும்போது, UGC பட்டியலிட்டுள்ள ஆய்விதழ் களில் இரு கட்டுரைகள் வெளியிட் டிருக்கவேண்டும் என்று பாரதிதாசன் பல்கலைக்கழகம் மட்டுமே விதியை வகுத்துள்ளது. அதன்படி மாணவர்களும் குறிப்பிடப்பட்டுள்ள ஆய்விதழ்களில் வெளியிட்டுள்ள கட்டுரைகள் தரமில்லை என்று ஒதுக்கித் தள்ளி ஆய்வாளர்களை முனைவர் பட்ட ஆய்வேட்டை ஏற்க மறுத்து அலைக்கழிப்பது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று என்று பல்கலைக்கழகத்தை நோக்கி சங்கத்தின் சார்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

இதற்குப் பதில் அளித்த பதிவாளர் எல்.கணேசன், “இந்தப் பிரச்சனை குறித்துத் தீர ஆலோசனை செய்து, முனைவர் பட்ட ஆய்வாளர்கள் நலன் பாதிக்கப்படாத வண்ணம் ஆய்வேடுகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் 24.03.2022 நாளிட்டு எல்லாக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம். இனி இதில் பிரச்சனை வரவாய்ப்பில்லை” என்றார்.

உடனே, தஞ்சை மண்டலப் பொறுப்பாளர் கோகுல் குறுக்கிட்டு, “மாணவர் நலன் குறித்து நாங்கள் சொல்லிய தீர்வை நடைமுறைப்படுத்த உங்களுக்கு ஓராண்டு காலம் பிடிக்கின்றது என்றால் மனஉளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட ஆய்வாளர்களுக்கு யார் பதில் சொல்வது” என்று ஒரு பிடிபிடித்தார். பதிவாளர், “இனி பிரச்சனை இருக்காது” என்று உறுதி அளித்தார்.

முனைவர் பட்டத்திற்கு நெறியாளர் பொறுப்பு கேட்டு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களின் ஆய்வுக் கட்டுரைகள் தரம்மிக்கதாக இல்லை என்பதால் நெறியாளர் அனுமதி வழங்கப்படாமல் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கல்லூரி ஆசிரியர்களை மதிப்பீடு செய்யும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் எத்தனைபேர் தரமான ஆய்வைச் செய்துள்ளார்கள்? தரத்திற்கு நீங்கள் வைக்கும் அளவுகோல் என்ன என்று பேராசிரியர் பெலிசியா கோபம் கொப்பளிக்கக் கோரிக்கையை முன்வைத்தார். “UGC குறிப்பிட்டுள்ள ஆய்விதழ்களில் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தால் நெறியாளர் பொறுப்பு தந்துவிடுகிறோம்” என்று உறுதி அளிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு டிபிஎம்எல் கல்லூரி பேராசிரியர் சேவியர் செல்வகுமார், “பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலிருந்து மயிலாடுதுறை மாவட்டக் கல்லூரிகள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரியாகத் தமிழ்நாடு அரசின் உத்தரவால் மாற்றப்பட்டது. இதனால் மயிலாடுதுறை மாவட்டக் கல்லூரி முதல்வர் அனைவரும் அண்ணாமலைப் பல்கலைக் கழகச் செனட் எனப்படும் பேரவை உறுப்பினராக மாற்றப்பட் டனர். அப்படிச் செனட்டராக உள்ள கல்லூரி ஆசிரியர்கள் அண்ணா மலைப் பல்கலைக்கழகச் செனட் உறுப்பினராக மாற்றப்பட்டது குறித்து அரசு அறிவிக்காத நிலை யில், அண்மையில் நடைபெற்ற பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேரவைக் கூட்டத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட ஆசிரியர் செனட்டர்கள் அழைக்கப்படாதது கடுமையான கண்டத்திற்குரியது. அடுத்துக் கூட்டத்திற்கு மேற்படி ஆசிரியர்கள் அழைக்கப்படவில்லை என்றால் அதற்கான தாக்கத்தைப் பல்கலைக்கழகத்திற்குத் தருவோம்” என்று ஆக்ரோஷம் பொங்கக் கூறினார்.

பதிவாளர் பதில் சொல்லாது விழிபிதுங்கித் தவித்துக் கொண்டிருந்தார். துணைவேந்தர் சங்கம் கொடுத்த கோரிக்கைப் பட்டியலைப் படிப்பது போல் பாவனைச் செய்து கொண்டிருந்தார். இயக்குநர் முத்துசாமி செய்வது அறியாது தவித்தார். பதிவாளர் ஒருவரை அழைத்து, “அந்த ஏ செக்சனைக் கூப்பிடுங்க” என்றார். போனவர் சிறிதுநேரத்தில் திரும்பி வந்து,“ அவுங்க வீட்டுக்குப் போய்ட்டாங்க” என்று பதில் சொன்னார்.  பின்னர்ப் பதிவாளர் சங்கத்தினரை நோக்கி, “சிண்டிகேட், செனட் கூட்டங்களுக்குப் பொறுப்பான ஏ செக்சன் சொன்னாங்க, மயிலாடுதுறை மாவட்டத்தை அழைக்கவேண்டியதில்லை என்று சொன்னதால் அழைக்கவில்லை” என்றார். “பல்கலைக்கழக ஏ செக்சன் எங்களை அழைக்கக்கூடாது என்று சொல்ல அவர் என்ன உயர்கல்வித்துறை அமைச்சரா? உயர்கல்வித்துறை செயலாளரா? அரசின் ஆணை இல்லாமல் நீங்கள் எடுத்த முடிவு கடும் கண்டனத்திற்குரியது” என்று சேவியர் செல்வகுமார் கோபத்துடன் கூறினார்.

அவரை அமைதிப்படுத்தும் நோக்கில் பதிவாளர்,“உங்கள் கடிதம் வந்தவுடன் உயர்கல்வித் துறைக்குக் கடிதம் எழுதிவிட்டோம். கிடைக்கும் பதிலின் அடிப்படையில் நாங்கள் சரியாகச் செயல்படுவோம்” என்றார். மயிலாடுதுறை மாவட்ட ஆசிரியர் செனட்டர்களுக்குப் பல்கலைக் கழகத்தின் சார்பில் பேரவைக் கூட்டத்திற்கு அழைக்கப்படாமைக்கான காரணத்தைத் தெரிவித்து மடல் எழுதவேண்டும். அடுத்தக் கூட்டத்திற்கும் நாங்கள் அழைக்கப்படவில்லை என்றால் பேரவைக் கூட்டம் நடைபெறும் நாளில் ஏற்படும் விளைவுகளைப் பல்கலைக்கழகம் சந்திக்க வேண்டும்” என்று மீண்டும் கொந்தளித்துச் பேசினார் சேவியர்.

இதற்குப் பின்னர்த் துணைவேந்தர், தங்களின் கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்கிறோம். அதற்குரிய காலஅவகாசத்தில் அவற்றை நிறைவேற்றுவோம் என்று உறுதி கூறினார்.  இதனைத் தொடர்ந்து 10.04.2022ஆம் நாளிட்ட பல்கலைக்கழக ஆணையில், “உயர்த்தப்பட்ட மாணவர்களுக்கான அனைத்துக் கட்டணங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டணங்கள் மட்டுமே வசூல் செய்யப்படும்” என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.  தனியார்மயச் சிந்தனையோடு அரசுசார் பல்கலைக்கழகங்களும் செயல்படத் தொடங்கியுள்ளன. இதற்கு ஒன்றிய அரசும், பல்கலைக்கழக மானியக் குழுவும் பச்சைக்கொடி காட்டுகின்றன.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் ஆளுநரின் கண்அசைவில் பல்கலைக்கழகங்கள் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றன. ஆட்டம் போட்ட பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கொட்டத்தை, 75 ஆண்டுகள் பாரம்பரிய AUT பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அடக்கி வைத்து, மாணவர் ஆய்வாளர்கள் மற்றும் ஆசிரியர் நலன்களைக் காத்துள்ளது என்ற

புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது என்பது உண்மையே.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.