“நாமெல்லாம் கோவிலுக்குள் போகலாமா?” “நாம போகக்கூடாதுன்னு எந்த சாமியும் சொல்லல” – ‘ கேப்டன் மில்லர் ‘. படம் எப்படி !

0

அங்குசம் பார்வையில் ‘ கேப்டன் மில்லர் ‘

தயாரிப்பு: ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ் ‘ செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன். டைரக்டர்: அருண் மாதேஸ்வரன். நடிகர் -நடிகைகள்: தனுஷ், சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், இளங்கோ குமரவேல், சந்தீப் கிஷன், ஜான் கொக்கென், ஜெயப்பிரகாஷ், நிவேதிதாசதீஷ், அதிதி பாலன், காளி வெங்கட் அப்துல் லீ, விஜி சந்திரசேகர், எட்வர்ட், வினோத் கிஷன் . இசை: ஜி.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு: சித்தார்தா நூனி, வசனம்: மதன் கார்க்கி, எடிட்டிங்: நாகூரான், ஆர்ட் டைரக்டர்: டி.இராமலிங்கம், காஸ்ட்யூம் டிசைனர்ஸ்: பூர்ணிமா ராமசாமி & காவ்யா ஸ்ரீராம். ஸ்டண்ட் ரைக்டர்: திலீப் சுப்பராயன். பிஆர்ஓ: ரியாஸ் அஹமது & சதீஷ் (Aim)

பிரிட்டிஷ் ஆட்சியின் தென்தமிழ்நாடு பகுதியில் உள்ள மலைசாரந்த நிலப்பகுதி. பிரிட்டிஷ் ஆட்சி என்றதும் இதுவும் ஒரு பீரியட் பிலிம், சுதந்திர உணர்வை ஊட்டும் கதைக்களமாகத் தான் இருக்கும் என எண்ணிவிட வேண்டாம். இது ஒரு பீரியட் பிலிம் தான். ஆனால் இது எந்தப் பீரியடுக்கும் பொருத்திப் போகக்கூடிய தரமான சினிமா என்பதை அழுத்தந் திருத்தமாக சொல்லலாம். மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த அனலீஸ்வரன், பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசையுடன் உள்ளார்.

கேப்டன் மில்லர்
கேப்டன் மில்லர்

- Advertisement -

அவரது அண்ணன் செங்கோலனோ( சிவராஜ் குமார்) இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்.இதனால் தனது தம்பி பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்வதை எதிர்க்கிறார். அதையும் மீறி அனலீஸ்வரனோ ராணுவத்தில் சேர்ந்து விடுகிறார். அங்கே அனலீஸ்வரனுக்கு மில்லர் என்ற பெயர் சூட்டுகிறது பிரிட்டிஷ் ராணுவம்.பயிற்சி முடிந்து முதல் களப்பணியே, வெள்ளையர்களின் வணிக கப்பலுக்கு எதிராக கடற்கரையில் போராட்டம் நடத்தும் சுதந்திரப் போராட்ட வீரர்களை சுட்டுக் கொல்லும் வேலை தான்.

தனது இன்மக்களை தானே சுட்டுக் கொன்றதை சகிக்க முடியாமல், அதே களத்தில் தனது கட்டளையிட்ட வெள்ளைக்கார ராணுவ அதிகாரியை சுட்டுக் கொன்று நமது போராளிகள் எரியும் தீயில் தூக்கிப் போட்டு விட்டு தனது சொந்த ஊர் திரும்புகிறார் அனலீஸ்வரன். ” சொந்த மக்களையே சுட்டுக் கொன்னையே…அதுல ஒன்னோட அண்ணன் செங்கோலனும் ஒருத்தன். இனிமேல் நீ இந்த ஊருக்குள் வராதே” என விரட்டி அடிக்கிறார்கள் மக்கள். மில்லர் தலைக்கு விலை வைக்கிறது பிரிட்டிஷ் ராணுவம்.

இதே நேரத்தில் அந்த மலைவாழ் மக்களை அவர்களின் வாழ்விடத்தில் இருந்து விரட்டியடித்து, அங்கே வேட்டைப் பண்ணை வைக்க முயற்சிக்கிறான் வெள்ளைக்கார கவர்னர் ஒருவன். அவனுக்கு துணை நிற்கிறார்கள் அப்பகுதியின் மன்னனும் அவரது மகனும். இதை முறியடிக்க இளங்கோ குமரவேல், நிவேதிதா சதீஷ் அடங்கிய ஒரு போராளிக்குழு தீவிரமாக களத்தில் இறங்குகிறது. அந்த போராளிக்குழுவை வழிநடத்த அவர்களுடன் இணைகிறார் கேப்டன் மில்லர்.

கேப்டன் மில்லர்
கேப்டன் மில்லர்
4 bismi svs

இனவிடுதலைக்கான போர், ஆலயநுழைவுப் போராட்டம், வெள்ளையனுக்கு கூட்டிக் கொடுத்து, காட்டிக் கொடுக்கும் மன்னர்களையும் எதிர்த்து போராட்டம் என மூன்று விசயங்களை மிகச் சரியாக சிறப்பாக ஒரே நேர்கோட்டில் கொண்டு வந்து பார்வையாளன் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்கிறார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.

அதேபோல் அனலீஸ்வரன் மில்லர்( விடுதலைப்புலிகள் அமைப்பின் தற்கொலைப் படையணியான கரும்புலிகள் தலைவராக இருந்தவர் கேப்டன் மில்லர்) ( தனுஷ்) , வேல்மதி( பிரியங்கா மோகன்), செங்கோலன்( சிவராஜ் குமார்) பேச்சியம்மா( தனுஷின் அம்மா விஜி சந்திரசேகர்), வேல்மதியின் கணவர் டாக்டர் எர்னெஸ்டோ ( கியூபா புரட்சியின் தலைவர் சே குவேரா வின் இயற்பெயர்) என கதாபாத்திரங்களுக்கு பெயர் வைத்து தனது உள்ளத்து உணர்வை வெளிக் கொண்டு வந்து, அதை வெற்றிகரமாக திரைப்படமாக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரனுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

“நாமெல்லாம் கோவிலுக்குள் போகலாமா?” “நாம போகக்கூடாதுன்னு எந்த சாமியும் சொல்லல” மதன் கார்க்கியின் இந்த இரு வரி வசனம் தான் படத்தின் அடிநாதம். அனலீஸ்வரனாகவும் கேப்டன் மில்லராகவும் வாழ்ந்திருக்கிறார் தனுஷ் எனச் சொன்னால் அது மிகையல்ல, சத்தியமான உண்மை. இந்த சீன், அந்த சீன் என எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. அனைத்து சீன்களிலுமே நடிப்பு உழைப்பைக் கொட்டி கேப்டன் மில்லருக்கு பெருமைமிக்க மிடுக்கு, கம்பீரம், கெளரவம் சேர்த்திருக்கிறார் தனுஷ். சபாஷ் சபாஷ் தனுஷ்.

படத்தில் தனுஷுக்கு அடுத்து ரசிகனின் மனதில் அழுத்தமான இடத்தைப் பிடித்தவர்கள் என்றால் போராளிகளின் தலைவராக வரும் இளங்கோ குமரவேலும்வெள்ளைக்கார ராணுவ அதிகாரியாக வரும் நடிகரும் தான். இதற்கு அடுத்தடுத்த இடங்களில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், சந்தீப் கிஷன், ஜான் கொக்கென், மலைவாழ் மக்களின் தலைவராக வரும் நடிகர் உட்பட குறிப்பிட்ட சில கேரக்டர்கள் நடிப்பில் அசத்திவிட்டார்கள். இந்த கேப்டன் மில்லரைத் தாங்கும் அதி முக்கியத் தூண்கள் என்றால் மியூசிக் டைரக்டர் ஜி.வி.பிரகாஷ், கேமரா மேன் சித்தார்தா நூனி, ஸ்டண்ட் ரைக்டர் திலீப் சுப்பராயன், ஆர்ட் டைரக்டர் டி.இராமலிங்கம் ஆகிய இந்த நான்கு தூண்களும் தான்.

கேப்டன் மில்லர்
கேப்டன் மில்லர்

அதிலும் இடைவேளைக்குப் பிறகு வசனம் குறைவு. ஜி.வி.பி.யின் பின்னணி இசை தான் படத்தைப் பேச வைக்கிறது, ரசிக்க வைக்கிறது, பலவிதமான உணர்வுகளை நமக்குள் கடத்துகிறது. இதற்கடுத்து சண்டைக் காட்சிகள் என்று கூட சொல்லக்கூடாது. போர்க்களக் காட்சிகளில் திலீப் சுப்பராயன், சூப்பர் சுப்பராயன் வாரிசு என்பதை 100 சதவிகிதம் நிரூபித்திருக்கிறார்.

அதிலும் வெள்ளையர்களின் படையை பைக்கில் தனுஷ் துரத்தும் காட்சிகள் கடின உழைப்பின் நல் விளைச்சல்கள். அருண் மாதேஸ்வரனின் மனசும் மூளையும் நினைத்ததை மிகச் சரியாக காட்சிப்படுத்தி பல ஆங்கிள்களில் அசர வைக்கிறார் சித்தார்தா நூனி. மொத்தத்தில் இந்த ‘கேப்டன் மில்லர் ‘ மாபெரும் வெற்றிப் போராளி. வாழ்த்துக்கள் அருண் மாதேஸ்வரன்.

–மதுரை மாறன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.