திருச்சியில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி: எல்.அடைக்கலராஜ் வீடியோ பதிவு ! 💐
திருச்சியில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி : எல்.அடைக்கலராஜ்
திருச்சி, பாரதியார் சாலை, ஜென்னி பிளாசா காம்ப்ளெக்ஸ் வளாகத்தில், திருச்சி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மறைந்த எல்.அடைக்கலராஜின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களை முன்னிட்டு திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
வீடியோ
யார் இந்த அடைக்கலராஜ்.?
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் மற்றும் வர்த்தக துறையில் திருச்சியின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கிய எல்.அடைக்கலராஜ் பற்றி இன்றைய தலைமுறைக்கு தெரியாமல் இருக்கலாம்.
ஆனால் அரசியல் தளத்தில் இயங்கிட விரும்பும் இளைய சமுதாயம், தொடர்ந்து நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற எல்.அடைக்கலராஜ் குறித்து அவசியம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இந்த பதிவு.
திருச்சிராப்பள்ளி, நகராட்சியாக இருந்த போது அதன் சேர்மனாக செயலாற்றிய லூர்துசாமிபிள்ளையின் மகன் தான் எல்.அடைக்கலராஜ். அடைக்கலராஜின் தாத்தா ஞானாதிக்கம்பிள்ளை இரயில்வே ஒப்பந்ததாரராக இருந்ததால் அவர்களுடைய குடும்பம் திருச்சியில் செல்வசெழிப்பான குடும்பமாக விளங்கியது.
நடிகர் திலகம் சிவாஜியுடன் நட்பு :
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருச்சியில் வாழ்ந்ததால் அவருக்கு திருச்சியில் உள்ள முக்கியஸ்தர்களுடன் தொடர்பு உண்டு. அந்த வகையில் அடைக்கலராஜ் குடும்பத்துடன் ஏற்பட்ட நட்பால் அவருடன் இணைந்து திருச்சியில் ரியல் எஸ்டேட் தொழில் புரிந்தார் அடைக்கலராஜ்.
இந்த நட்பின் அடுத்த கட்டமாக 1984ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாய்ப்பு பெற்றுத் தந்தார்.
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் அடைக்கலராஜ். தொடர்ந்து திருச்சியில் ஜூபிடர் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி சினிமா டிஸ்ட்ரிப்யூட்டர் தொழிலும் செய்தார். இதன் காரணமாக நடிகர் ரஜினிகாந்துடன் நெருங்கிய நட்பு உருவானது.
நடிகர் ரஜினிகாந்துடன் நட்பு
ரஜினி படம் என்றாலே திருச்சி மாவட்ட விநியோகஸ்தர், ஜூபிடர் பிலிம்ஸ் தான் என்றானது. இந்த நட்பின் காரணமாக அடுத்தடுத்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் போது, அடைக்கராஜ் வெற்றி பெற வாழ்த்தி நடிகர் ரஜினிகாந்த் தன் கைப்பட எழுதித் தரும் கடிதம் தேர்தல் பிரச்சாரத்திற்கு பெரும் பலமாக உதவியது.
காங்கிரஸ் கட்சியில் ஏராளமான கோஷ்டிகள் இருந்தாலும் திருச்சியைப் பொறுத்தவரை அடைக்கலராஜ் என்ற ஒரு கோஷ்டி தான் அப்போது இருந்தது.
காங்கிரஸிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மூப்பனாருக்கு பக்கபலமான அடைக்கலராஜ்: தமிழகத்தில் 1991-96ல் ஆட்சி புரிந்த மறைந்த ஜெயலலிதா மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்ததால், ‘அதிமுகவுடன் தேர்தலில் கூட்டு சேர வேண்டாம்’ என தமிழக காங்கிரஸார் வலியுறுத்திய போது அதை நிராகரித்தது தலைமை.
இதையடுத்து தமிழக காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு படைத்த மறைந்த கருப்பையா மூப்பனார், ‘தமிழ் மாநில காங்கிரஸ்’ என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவோடும், மறைந்த துக்ளக் சோவின் துணையோடும் த.மா.க.வை தொடங்கிட நடைபெற்ற முதல் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவர்களில் எல்.அடைக்கலராஜூம் ஒருவர். கட்சி தொடங்கியவுடன் முதன்முதலாக கட்சிக்கு ரூ.50 லட்சம் நிதியும் வழங்கினார். 1996ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் த.மா.க.வின் துணையுடன் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்தது.
பின்னர் நடைபெற்ற தேர்தலில் ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் மூப்பனாரின் உறவினர் ஆனந்தராஜிற்கு சீட்டு வழங்கியதில் ஏற்பட்ட முரண்பாட்டில் த.மா.க.விலிருந்து அடைக்கலராஜ் வெளியேறி மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.
பின்னர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியதை அடுத்து தேர்தல் அரசியலிலிருந்து முற்றிலும் தன்னை விலக்கிக் கொண்டு தனது ரியல் எஸ்டேட் பிசினஸில் கவனம் செலுத்தினார்.
சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக திருச்சி மாவட்டத்தில் வியாபார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தன்னிகரற்ற மனிதராக வலம் வந்த அடைக்கலராஜ் 2015ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதியன்று தன்னுடைய 79வது வயதில் மறைந்தார். அடைக்கலராஜின் மூன்று மகன்களான ஜோசப் லூயிஸ், ஜோசப் பிரான்சிஸ், வின்சென்ட் அடைக்கலராஜ் ஆகியோர் தந்தை அடைக்கலராஜிற்கு வியாபாரத்திலும், அரசியலிலும் உறுதுணையாக இருந்து செயல்பட்டு வந்தனர்.
என்றாலும் நேரடி அரசியலில் இம்மூவரில் ஒருவர் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று திருச்சி காங்கிரஸ் கட்சியினர் தீராத ஆசையாக இருக்கிறது..
வீடியோ
ஆசியாவிலேயே ஒரு கட்டடத்தில் 5 திரையரங்கு என்ற பெருமையை பெற்றது திருச்சி, மாரீஸ் 70எம்.எம். திரையரங்கம். சில காரணங்களால் மூடப்பட்டுக் கிடந்த அத்திரையரங்கத்தை இன்றைய காலமாற்றத்திற்கு ஏற்ப அதன் தரத்தை மேம்படுத்தி LA சினிமாஸ் என்கிற பெயரில் மிகச் சிறப்பாக நடத்தி வருகின்றனர். அத்துடன் திருச்சியில் உள்ள சோனா, மீனா திரையரங்கத்தையும் இரண்டாக இருந்த திரையரங்கத்தை மூன்றாக மாற்றி, திருச்சியில் திரையரங்கம் மற்றும் திரைப்பட விநியோகம் என்றால் நாங்கள் தான் என தந்தை அடைக்கலராஜ் கோலோச்சிய துறையை மகன்கள் மீண்டும் தங்களுக்குள் தக்க வைத்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
கொரோனா காலத்தில் நீண்ட காலத்திற்கு மூடப்பட்ட கிடந்தது சுற்றுலா தளமும், திரையரங்கமும் தான். மேட்டுப்பாளைத்தில உள்ள இவர்களுடைய ‘ப்ளாக் தண்டர்’ சுற்றுலா தளம் மற்றும் திரையரங்கம் மூடப்பட்ட காலங்களில் தங்கள் ஊழியர்களுக்கு தவறாமல் ஊதியம் வழங்கி வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நடந்து கொண்ட மனிதபண்பு பாரம் பரியமானது என்றால் அது மிகையில்லை.
– அங்குசம் செய்தி குழுவினர்..