உள்ளாட்சியில் நல்லாட்சி தருவார்களா பெண் தலைவர்கள்..?

0

உள்ளாட்சியில் நல்லாட்சி தருவார்களா பெண் தலைவர்கள்..?

‘இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்களில் தான்’ என்றார் மகாத்மா காந்தி. அப்படிப்பட்ட கிராமத்தின் முதுகெலும்பாக செயல்பட வேண்டிய பொறுப்பு கிராம ஊராட்சி தலைவர்களிடம் உள்ளது.  பொதுவாக தேர்வாகும் ஊராட்சித் தலைவர்களுக்கு, தங்களுக்கான பொறுப்புகள், கடமைகள் என்னென்ன என்ற விழிப்புணர்வு பெரும்பாலும் இருப்பதில்லை. காரணம் கட்சிகள் மூலம் பெறப்படும் வாய்ப்பு என்பதால் அதை அவர்கள் கடமையாக உணராமல் கௌரவமாகவே உணர்கின்றனர்.

2 dhanalakshmi joseph

உள்ளாட்சி அமைப்பை பொறுத்த வரை 73வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவான தமிழ்நாடு ஊராட்சிகள்  சட்டம் 1994 (தமிழ்நாடு சட்டம் 21,1994)ன்படி கிராம ஊராட்சிகளுக்கு அதிகப்படியான அதிகாரமும் பொறுப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமானது பெண்களுக்கு அளிக்கப்பட்ட 50% இட ஒதுக்கீடு. தமிழ்நாட்டில் உள்ள 12,524  கிராம பஞ்சாயத்திலும் 50% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பெண்களே தலைவர் களாக உள்ளனர்.

பெண்களுக்கான இடங்களில் வேட்பாளர்களாக நிறுத்தப்படுபவர் கள் பெரும்பாலும் வாய்ப்பு கிடைக்காத கட்சியின் ஆண் நிர்வாகிகள் தான், தங்கள் இடத்திற்கு தங்கள் மனைவியை அல்லது பெண் உறவினரை வேட்பாளராக களம் இறக்குகின்றனர். களம் இறக்கப்படும் பெண் வேட்பாளர்களில், அரசியல் குறித்தோ, அரசு நிர்வாகம் குறித்தோ எந்தவித புரிதல்களும் இல்லாதவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். நீட்டிய பேப்பரில் கையெழுத்து போடும் நிலையோடு மட்டுமின்றி  எது குறித்தும் தனிப்பட்ட முறையில் பேசும் அறிவற்றவர்களாகவும் வளர்த் தெடுக்கப்படுகிறார்கள் இந்த பெண் தலைவர்கள்.

- Advertisement -

- Advertisement -

உள்ளாட்சி தேர்தல் மூலம் தேர்வாகும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தலைவர்கள் என அனைவருக்கும் மத்திய மாநில அரசுகள் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது. ஊராட்சி தலைவர்களுக்கான பயிற்சியோடு மட்டுமல்லாது பெண் தலைவர்களுக்கு மட்டுமான தனிப்பயிற்சியும்  புத்தாக்க பயிற்சிகளும்  அளிக்கப்படுகிறது.

என்றாலும் கிராம ஊராட்சி தலைவர்களின் கடமைகள்  என்ன, பொறுப்புகள் என்ன, தமிழ்நாடு ஊராட்சி சட்டங்கள் என்ன என்ற அடிப்படை நிர்வாக தெளிவும் அதை சார்ந்த ஆழ்ந்த அறிவும் அற்றவர்களாக தங்கள் காலத்தை கடத்திச் செல்கின்றனர். பெரும்பாலான இடங்களில் கிராம ஊராட்சி  பெண் தலைவர் களின் பொறுப்பினை அவர்களின் கணவர்களே கையெழுத்து இடுகிறார்கள் என்பதே உண்மை நிலை.

4 bismi svs

கடந்த மே தினத்தன்று  திருச்சி மாவட்டத்தில், கிராமசபை கூட்டத்தினை ஒரு பஞ்சாயத்து  பெண் தலைவரின் கணவர் நடத்துவதையும் அதை அரசு அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதையும் நமது ‘அங்குசம் செய்தி’ இதழில் செய்தியாக படித்தோம். ஏன் இந்த அவல நிலை..? இது குறித்து அரசியல் பார்வையாளர்கள் நம்மிடம் கூறுகையில்,

“கணவனுக்கு பதிலாக மனைவி தலைவ ராக தேர்வானால் அவரை சுயமாக சிந்தித்து செயல்படவும், கற்றுக் கொள்ளவும் கூட கணவன் அனுமதிப்பதில்லை என்பது தான் முதல் காரணம். கல்வியறிவும் நிர்வாக செயல்பாடுகள் முழுமையாக அறிந்துள்ள பெண் தலைவர்களையும் சுதந்திரமாக செயல்பட கணவர்கள் விரும்புவதில்லை. தலைவர் என்ற இடத்தில் கையொப்பமிடும் பொம்மைகளாகவே அவர்களை வைத்திருக்கிறார்கள்.  கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் பெண்கள் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மக்களோடு தொடர்புடையவர்கள் தான். இந்த பெண்ணால் கிராம நிர்வாக பொறுப்பை சரியாக செய்ய முடியுமா முடியாதா என்பது அப்பகுதி மக்களுக்குத் தெரியும். ஆனாலும் கட்சி ரீதியாகவே வேட்பாளர்கள் வெற்றி பெறுகிறார்கள்  என்பதால் தகுதியற்ற பெண் தலைவர்களும், தகுதியிருந்தும் தடங்கல்கள் தரும் கணவனை கொண்ட பெண் தலைவர்களும் அப்பதவிக்கு வருகிறார்கள்.

 

கணவனுக்கு அடிமையாக இருக்கும் ஒரு பெண் தலைவரால் எப்படி சுயமாக சிந்தித்து, அப்பகுதி பெண்களுக்கு சமூக, அரசியல், பொருளாதார ரீதியான முன்னேற்றத்தினை கொடுக்க முடியும்.? அத்துடன், ‘எல்லாம் கணவர் பார்த்துக் கொள்வார்’ என்ற எண்ணத்துடன் தேர்வாகும் பெண் தலைவர்கள் அரசாங்கம் கொடுக்கும் பயிற்சி வகுப்புகளிலும் கவனம் செலுத்துவதில்லை என்பதும் ஒரு காரணம்.

ஆண்களுக்கு இணையாக பெண்களும் சமூகத்தில் சுயமாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதால் தான் உள்ளாட்சியில் 50 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. ஆனால் அதன் நோக்கம் சிதையும் வகையில் தான் பெண் தலைவர்களின் செயல்பாடுகள் அமைகின்றன.   இதற்கு ஒரே தீர்வு பெண் தலைவர்கள் தங்கள் நிர்வாக பொறுப்பை தாங்களே ஏற்றுச் செய்கிறார்களா என்பதை கவனிப்பதோடு அவர்களுக்கு அளிக்கும் பயிற்சியில் ஏதேனும் மாறுதல் தேவைப்படுகிறதா என்பதை கண்காணித்து தகுதியான பயிற்றுனர்களை கொண்டு பயிற்சி அளிக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

கிராம ஊராட்சி தலைவர் பணி என்பது சமூக பணி என்பதை உணர்ந்து பெண் ஊராட்சித் தலைவர்கள் செயல்பட வேண்டும். தங்களுடைய கடமை எதுவென்று உணர்ந்து தங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கான நலனில் அக்கறை கொண்டு செயல்பட  வேண்டும்.

பயிற்சி முகாமில் தரப்படும் பயிற்சிகள்…

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தேர் வாகும்  கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான உரிமைகள், கடமைகள், பொறுப்புகள் என இவை அனைத்தையும் தெளிவுபடுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இப்பயிற்சியில், ஊரகப் பகுதிகளின் முழுமையான வளர்ச்சியில் உள்ளாட்சி அமைப்பு களின் பங்கு, சிறந்த முறையில் ஊராட்சி நிர்வாகம் நடத்துதல், கிராமசபை, ஊராட்சி கூட்டங்கள் நடத்துதல், வேலைகளுக்கான அனுமதி பெறுதல், பணிகள்  செயல்படுத்தும் முறை, செலவினம் மேற்கொள்ளும் முறை, பொது நிதி மேலாண்மை அமைப்பின் வாயிலாக மின்னணு பரிமாற்ற முறையில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுதல், ஊராட்சிகளின் மூலம் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்கள் மற்றும் திட்டம் தயாரித்தல், கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் தயாரித்தல் ஆகிய பொருள்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும், கிராமங்களின் அடிப்படை வசதிகளான குடிநீர் வழங்கல், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரை சுத்தம் செய்ய குளோரினேற்றம் செய்தல் மற்றும் காலமுறைப்படி தூய்மை செய்தல், பயன்பாடற்ற கிணறுகள் மூடுதல், தூர்த்தல், எல்.இ.டி. விளக்குகள் பராமரித்தல், பேரிடர் நிலை அவசரகாலங்கள், தொற்றுநோய் பரவும் போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.   அத்துடன், ஊராட்சிகளின் மூலம் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், வீட்டுவசதி, தூய்மை பாரத இயக்கம், மகளிர் திட்டம் மற்றும் ஊரக வாழ்வாதார திட்டம், கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் ஆகிய திட்டங்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. ஹைதராபாத்தில், தேசிய ஊரக வளர்ச்சித் துறை பயிற்சி நிறுவனம்(NIRD), சென்னை மறைமலர் நகரில் உள்ள மாநில ஊரக வளர்ச்சி துறை பயிற்சி நிறுவனம் (SIRD) மூலமும் உண்டு, உறைவிடப் பயிற்சி என்ற அடிப்படையில் தங்குமிடம் உணவு, நோட்டு புத்தகங்கள் ஆகியவைகளை இலவசமாக வழங்குவதோடு போக்குவரத்து செலவும் வழங்கி பயிற்சி அளிக்கின்றனர்.

மேலும், தஞ்சை, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில்  தலைவர்களுக்கான மண்டல ஊரக பயிற்சி நிறுவனம் மூலம் நேரடி பயிற்சி வகுப்புகளை நடத்துவதோடு அவ்விடங்களில் பயிற்சி பெற்ற பயிற்றுனர்களை கொண்டு மாவட்ட அளவில் தாலுக்கா அலுவலகங்களிலும்  பயிற்சி அளிக்கப்படுகின்றன.

இப்பயிற்சிக்காக ஒரு நாளைக்கு, ஒரு தலைவருக்கு ரூ.250லிருந்து ரூ.300 வரை செலவு செய்யப்படுகிறது. மேலும் பயிற்றுனருக்கான ஊக்க தொகையாக ஒரு நாள் பயிற்சிக்கு குறைந்தபட்சம் ரூ.750லிருந்து அதிகபட்சம் ரூ.2,000 வரை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் சுமாராக ஒரு மாவட்டத்திற்கு 35லிருந்து 40 பயிற்றுனர்கள் உள்ளனர். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை சார்ந்த  செயல்பாடுகளில் ஈடுபட்டவர்களே பெரும்பாலும் பயிற்றுனர்களாக இருந்து வந்தனர். தற்சமயம் பயிற்றுனர்களின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு படித்தவர்களை பயிற்றுனராக்கியுள்ளனர். இதில் சமூக ஆர்வலர் கள், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வு பி.டி.ஓ.க்களும் அடங்குவர்.

-காவிய சேகரன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.