முதுநிலை படிக்காமல் முனைவர் பட்ட ஆராய்ச்சி சாத்தியமா?

- நெ.யாழினி, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்புத் துறையில் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்து வரும் ஓர் ஆய்வாளர்.

0

முதுநிலை படிக்காமல் முனைவர் பட்ட ஆராய்ச்சி சாத்தியமா?

 

(நெ.யாழினி, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்புத் துறையில் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்து வரும் ஓர் ஆய்வாளர். 2022 பிப்.19ஆம் நாள் வெளியிடப்பட்ட NET (National Eligibility Test) தேர்வு முடிவின்படி ஆங்கிலப் பாடத்தில் தகுதி பெற்றவர்.

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

மேலும், தேசியத் தகுதியின் அடிப்படையில் ஆய்வு உதவித்தொகை பெறுவதற்கும் தகுதி பெற்றுள்ளார். இவர் அங்குசம் செய்தி இதழுக்கு எழுதியுள்ள  கட்டுரை இங்கே)

- Advertisement -

பல்கலைக்கழக மானியக்குழு, முதுநிலை பட்டப்படிப்பு படிக்காமல் 4 ஆண்டுகள் இளநிலைப் பட்டப்படிப்பை உருவாக்கி, அந்தப் பட்டப்படிப்பை முடித்தவுடன் நேரடியாக Ph.D. என்னும் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ளலாம் என்ற அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது வியப்பையும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றிய அரசு அறிவித்து நடைமுறைப் படுத்தப்பட உள்ள ‘தேசியக் கல்வி கொள்கை’யில் உயர்கல்வியில் தற்போதுள்ள 3 ஆண்டு பட்டப்படிப்புகள் ஒழிக்கப்பட்டு, 4 ஆண்டு பட்டப்படிப்புகள் அறிமுகம் செய்யப்படும் என்று குறிப்பிட்டிருந்தது. 4 ஆண்டு பட்டப்படிப்பில் முதல் ஆண்டை நிறைவு செய்து 2ஆம் ஆண்டை தொடரமுடியாத நிலையில் சான்றிதழ்(Certificate) பட்டமும், 3ஆம் ஆண்டை தொடரமுடியாத நிலையில் பட்டய(Diploma)) பட்டமும், 4ஆம் ஆண்டை தொடரமுடியாத நிலையில் பட்டமும்(Degree), 4 ஆண்டுகளை நிறைவு செய்தல் சிறப்பு பட்டமும் (Honors) வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், முதுநிலைப் பட்டப்படிப்பு ஓராண்டு மட்டுமே என்று தேசியக் கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த முதுநிலைப் பட்டப்படிப்புகள் கல்லூரிகளில் நடைபெறாது என்றும் பல்கலைக்கழகங்களில் மட்டுமே நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆய்வுக்கான பல்கலைக்கழகங்களில் எந்தப் பட்டத்திற்கான ஆய்வுகளும் நடைபெறாது உயராய்வு மையங்களாகச் செயல்படும் என்றும் கற்பிக்கும் பல்கலைக்கழகங்களில் மட்டும் முனைவர் பட்ட ஆய்வுக்கான ஆய்வுகள் நடைபெறும் எனவும், தற்போது நடைமுறையில் உள்ள எம்.பில். என்னும் இளமுனைவர் ஆய்வுப் படிப்பு இருக்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ள இந்தப் புதிய அறிவிப்பு தேசியக் கல்விக் கொள்கை அமல் செய்யப்பட்டால் தான் 4 ஆண்டு இளநிலைப் பட்டப்படிப்பு முடித்தோர் முனைவர் பட்ட ஆய்வு செய்யலாம் என்ற முறை செயல்பாட்டுக்கு வரும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தேசியக் கல்விக் கொள்கையை இன்றைய திராவிட முன்னேற்றக் கழக அரசு ஏற்று நடைமுறைப்படுத்துமா? என்ற கேள்வியும் எழுகிறது.  தேசியக் கல்விக் கொள்கைப் பின்பற்றித் தமிழ்நாட்டில் பல பல்கலைக்கழகங்கள் 2022-23ஆம் கல்வியாண்டில் எம்.பில். ஆய்வுக்கான பட்டப்படிப்பை நீக்கம் செய்து அறிவிப்பை வெளியிட்டன.

தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அவர்கள், “தமிழ்நாடு அரசு தேசியக் கல்விக் கொள்கையை ஏற்பதில் லை என்று கொள்கை முடிவு எடுத்துள்ள நிலையில், அரசு நிதியில் இயங்கும் மாநிலப் பல்கலைக்கழகங்கள் எம்.பில். பட்டப்படிப்பை நீக்கம் செய்து அறிவிப்பு வெளியிட்டிருப்பது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று. எனவே, இந்தக் கல்வியாண்டில் வழக்கம்போல் கல்லூரி/பல்கலைக்கழகங்களில் எம்.பில். பட்டப்படிப்புக்கான ஆய்வு வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்” என்று அறிவித்தார்.  உயர்கல்வி அமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து, பல்கலைக்கழகங்களில் எம்.பில். வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தியாகும்.

4 bismi svs

அடுத்து முனைவர் பட்ட ஆய்வுக்குத் தற்போதுள்ள நடைமுறைகளைப் பார்ப்போம். முனைவர் பட்ட ஆய்வு செய்ய விரும்பும் ஓர் ஆய்வாளர் 3 ஆண்டுகள் இளநிலைப் பட்டப்படிப்பு +2 ஆண்டுகள் முதுநிலைப் பட்டப்படிப்பு+எம்.பில். பட்டப்படிப்பு முடித்திருக்கவேண்டும். மேலும், இவர்கள் NET தேர்வில் தேர்ச்சி அல்லது பல்கலைக்கழகங்கள் நடத்தும் முனைவர் பட்ட ஆய்விற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

இந்நிலையில் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்ய வருவோர் சுமார் 7 ஆண்டு காலக் கல்வியனுபவம் பெற்று 25 வயது உடையவர்களாக இருப்பர். மேலும் ஆய்வு செய்வதற்கான மனமுதிர்ச்சியும் கொண்டிருப்பர்.

தற்போது பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளபடி 22 வயதில் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்ய வருவோர் அதற்கான நுழைவுத்தேர்வை எழுதித்தான் படிப்பில் சேருவர் என்றாலும், முதுநிலை படிப்பில் பெறும் கல்வி முதிர்ச்சி என்பது இல்லாமலும், எம்.பில். பட்டப்படிப்பில் பெறும் ஆராய்ச்சி நெறிமுறைகள், ஆராய்ச்சி அணுகு முறைகள், ஆராய்ச்சி வகைகள், ஆராய்ச்சியின் நோக்கம், ஆராய்ச்சியின் கருதுகோள், ஆராய்ச்சிக்கான இயல்கள் பிரிப்பு, ஆராய்ச்சி முடிவுகளைத் தொகுத்தளித்தல், ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திய துணைநூல் பட்டியலை இணைத்தல், இந்தக் காலக்கட்டத்தில் ஆராய்ச்சி பொருண்மையின் மீது வெளியிடப்படும் ஆய்வரங்குகளில் கட்டுரைகள், அதன் மீது எழுப்பப்படும் வினாக்கள், அதனைத் தொடர்ந்து ஆய்வுக் கட்டுரைகள் செழுமையுறுதல், இதன் தொடர்ச்சியாக எம்.பில். ஆய்வோடு வளம் பெறுதல் என்ற பல்வேறு படிநிலைகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய முனைவர் பட்ட ஆய்வு முறையில் இருக்கும் வாய்ப்பு அறவே இருக்காது. இந்நிலையில் முனைவர் பட்ட ஆய்வுகள் எப்படிச் சமூகப் பயன்பாடு மிக்கதாக அமையும் என்ற கேள்வியும் எழுகிறது.

மேலும், 4 ஆண்டு கால இளநிலைப் பட்டப்படிப்பை நேரிலும் படிக்கலாம், அஞ்சல் வழியிலும் படிக்கலாம், இணைய வழியிலும் படிக்கலாம். எப்படிப் படித்தாலும் பட்டம் பெற்றுவிட்டால் முனைவர் பட்ட ஆய்வு செய்யலாம் என்றால், நேரில் கற்பதன் மூலம் கற்பிக்கும் ஆசிரியர்களின் அனுபவ அறிவு மாணவர்களுக்குக் கடத்தப்படும். அஞ்சல் வழியிலும், இணைய வழியிலும் மாணவர்கள் ஆசிரியர்களின் அனுபவ அறிவைப் பெறுவதற்கான வாய்ப்புகள் எங்கேயுள்ளது? எப்படி யுள்ளது? என்ற கேள்விகளுக்கு விடையில்லை.

தற்போது நடைமுறையில் உள்ள முனைவர் பட்ட ஆய்வுகள் தொடங்கும்போது துறைசார் அறிஞர் குழுவின் ஆலோசனையின்படியே முனைவர் பட்ட ஆய்வுகளின் தலைப்புகள் உறுதி செய்யப்படுகின்றன. தொடர்ந்து 6 மாதத்திற்கு ஒருமுறை DC Meeting (நெறியாளர்+துறைத்தலைவர்+புறநிலை ஆய்வு வல்லுநர்+ஆய்வாளர் இணைந்த) என்னும் முனைவர் பட்ட அறிஞர் குழு ஆய்வாளரின் ஆய்வின் போக்கை மதிப்பீடு செய்து தேவையான தக்க அறிவுரைகளை வழங்கி வரும்.

முனைவர் பட்ட ஆய்வுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகளின் DC Meeting -இல் அறிஞர் குழு மனநிறைவு பெற்றால் மட்டுமே ஆய்வைச் சமர்பிக்க அனுமதி தருவார்கள். முழு ஆய்வேட்டைச் சமர்ப்பிப்பதற்கு முன் முனைவர் பட்ட ஆய்வின் மீது முன் வாய்மொழி (Pre Via-voice) தேர்வு நடைபெறும். அந்த வாய்மொழித் தேர்வில் கலந்துகொள்ளும் பல்துறை பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கும் முனைவர் பட்ட ஆய்வில் இணைக்க வேண்டிய, நீக்கவேண்டிய பகுதிகளைப் பரிந்துரை செய்வார்கள். இக்கூட்டம் முடிந்த 3 – 6 மாதத்தில் ஆய்வாளர் முனைவர் பட்ட ஆய்வேட்டைப் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பிப்பார்.

ஆய்வேட்டை நெறியாளர் தவிர்த்த 2 புறநிலை தேர்வாளர்கள் மதிப்பீடு செய்து பல்கலைக்கழகத்திற்கு அறிக்கை அளிப்பர். பெறப்பட்ட 3 அறிக்கைகளை முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வை நடத்தத் தெரிவு செய்யப்பட்ட பேராசிரியருக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் ஒரு நாளில் முனைவர் பட்ட ஆய்வின் வாய்மொழித் தேர்வு நடைபெறும்.

அந்த வாய்மொழித் தேர்வில் ஆய்வாளர் ஆராய்ச்சி நெறிமுறைகளின்படி பிழைகளை நீக்கவில்லை, கருத்துகளை முறையாக வரிசைப்படுத்தவில்லை, துணைநூல் பட்டியலில் நூல்களின் பதிப்பு விவரம், ஆண்டு குறிப்பிடப்படவில்லை என்ற பல்வேறு குறைகளைச் சுட்டிக்காட்டியே முனைவர் பட்டம் வழங்கப்படுகின்றது. இந்த வாய்மொழித் தேர்வில் கலந்துகொள்ளும் ஆய்வாளர்களுக்கு நாம் எப்படி ஆய்வு செய்யவேண்டும் என்ற அறிவுரையும் கிடைக்கின்றது.

முதுநிலை கல்வி மூலம் இளம் முனைவர் பட்ட ஆய்வின் வழி அறிவு முதிர்ச்சி பெற்று ஆய்வு செய்யும்  இக்காலச் சூழ்நிலையில் ‘கற்றது கைமண் அளவு’ என்றும் ’கல்லாதது உலகளவு’ என்ற மனநிலையே ஏற்படுகின்றது.

அறிவு முதிர்ச்சி பெறாமல் நுழைவுத் தேர்வு, தகுதித் தேர்வுகளின் மூலம் இளநிலை பட்டப்படிப்பு முடித்த நிலையிலேயே முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்யலாம் என்பது கல்வி சார் ஆய்வுலகத்திற்கும் வளமும் நலமும் சேர்க்காது என்பதை உண்மை.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.