தூக்குவாளியில் மாட்டுக்கறி வச்சிருக்கியா… அன்னைக்கு அசிங்கப்படுத்தினாரு … இன்னைக்கு நடுவழியில இறக்கி விட்டாரு …. !

0

தூக்குவாளியில் மாட்டுக்கறி வச்சிருக்கியா… அன்னைக்கு அசிங்கப்படுத்தினாரு … இன்னைக்கு நடுவழியில இறக்கி விட்டாரு …. !
மாட்டுக்கறியுடன் பேருந்தில் பயணித்தார் என்பதற்காக பெண் பயணியை நடுவழியில் இறக்கிவிட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு தான் அரூர் போபாளையம்பள்ளி என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்களுக்கு கொட்டாங்குச்சியில் டீ கொடுத்த சம்பவத்தின் அதிர்வலைகளே இன்னும் ஓயாத நிலையில் அடுத்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
அரூர் வட்டத்தில், கடந்த டிசம்பர் மாதம் பெத்தூர் கிராமத்தில் பாமக டி ஷர்ட் அணிந்த விவகாரம் ஆண்டிபட்டி புதூர் கிராமத்தில் தின்பண்டங்கள் வாங்கிய விவகாரம் தொடர்பாக செய்தி வெளியிட்ட செய்தியாளர் மீது பொய் வழக்கு போட்டது என இங்கொன்றும் அங்கொன்றுமாய் சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்த வண்ணமிருப்பதாக வேதனை தெரிவிக்கிறார்கள், சமூக ஆர்வலர்கள்.
பாதுகாப்பில்லாமல் நடு வழியில் இறக்கி விட்ட சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி போக்குவரத்து கழகத்திற்கு தெரியவந்ததையடுத்து, அதுகுறித்து விசாரணை செய்து ஓட்டுனர் சசிகுமார் மற்றும் நடத்துனர் ரகு ஆகிய இருவரையும் மறு உத்தரவு வரும் வரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கிறார், அரூர் போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் செந்தில்குமார்.

நடத்துனர். ரகு
நடத்துனர். ரகு

பாதிக்கப்பட்ட மூதாட்டி பாஞ்சாலையை அங்குசம் சார்பில் சந்தித்து கலந்துரையாடினோம். “நான் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர். எனது கணவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். அப்போதிலிருந்து சில ஆண்டுகளாக காய்கறிகள் வியாபாரம் செய்து வந்தேன். இதில் போதிய வருமானம் இல்லை. கூடுதலாக உழைக்க வேண்டிய தேவை. மாலை நேரத்தில் மாட்டுக்கறி சுக்கா, சில்லி சிக்கன் ஆகியவற்றை விற்பணை செய்ய தொடங்கினேன். தினமும் அரூர் டவுனுக்குச் சென்றுதான் மாட்டுக்கறி வாங்கியாகனும். மற்ற பேருந்துகளில் பிரச்சினை இல்லை. நான் ரோட்டு ஓரத்திலே கடை வைத்துள்ளதால் என்னை நன்றாக மனதில் வைத்துக் கொண்டார்கள் போல. இதற்கு முன்னர் ஒருமுறை இதே பஸ்ஸில் ஏறிய போது, ‘தூக்குவாளியில் மாட்டுக்கறி வச்சிருக்கியா”னு எல்லார் முன்னாடியும் கேட்டு அசிங்கப்படுத்தியிருக்காரு. அதனால, இந்த பஸ்ல மட்டும் ஏறவே மாட்டேன். வேற பஸ்லதான் போயிட்டு வருவேன். சம்பவத்தன்னைக்கு வேற வழியில்ல. இந்த பஸ்லதான் ஏறியாகனும். அப்பவும் நான் கடைசி சீட்ல அதுவும் ஓரமாத்ததான் உட்கார்ந்திருந்தேன்.

- Advertisement -

- Advertisement -

காட்டுப்பக்கம் போகும்போது கண்டக்டர் என்னிடம் வந்தார். நான் எனக்கும் தூக்குவாளியில் உள்ள கறிக்கும் சேர்த்து முப்பது ரூபாய் கொடுத்தேன். என் பணத்தை வாங்காமல் ‘உனக்கு எத்தனை முறை சொல்றது மாட்டுக்கறியை வைத்துக்கொண்டு ஏறக்கூடாது என்று, கீழே இறங்கு என்று கூறி விசில் அடித்து பஸ்’சை நிறுத்தி விட்டார்.

4 bismi svs
பாஞ்சாலை
பாஞ்சாலை

சார் இந்த ஒருமுறை மட்டும் மன்னித்து விடுங்கள், என்னை ஊரில் இறக்கி விடுங்கள் என்று கெஞ்சினேன். நான் வைத்திருந்த தூக்குவாளியையும் என் சேலையில் மறைத்தேன். அப்போது கோபமாக கெட்ட வார்த்தையில் திட்டி அங்கேயே பஸ்சை நிறுத்திவிட்டனர். நடுக்காட்டில் இறக்கி விட்டால் என்னால் நடக்க முடியாது. அடுத்து எட்டிப்பட்டி பஸ் ஸ்டாப் இருக்கிறேதே அங்கேயாவது விடுங்கள் என்று கெஞ்சினேன். ஆனால், அவர் கேட்கவில்லை.

“வேறு வழியில்லாமல் கறியை எடுத்துக் கொண்டு இறங்கினேன். அந்த நடு காட்டில், எனக்கு அவமானமாகவும் அசிங்கமாகவும் இருந்தது. வேதனையோடவே அடுத்த பஸ்டாப்புக்கு நடக்க முடியாமல் நடந்தேன். உச்சி வெயில் காலையில் இருந்து சாப்பிடாததால் மயக்கம் வருவது போல் இருந்தது, அங்கேயே கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டேன். அப்போது எங்கள் ஊர் வழியாக செல்லக்கூடிய வடிவேலன் என்ற தனியார் பஸ் வந்தது. நான் நடந்து போவதைப் பார்த்துவிட்டு பஸ்-சை நிறுத்தி ஏன் நடந்து போகிறீர்கள் என்று கேட்டார்கள். அப்போது நான் நடந்ததை சொன்னேன். அவர்களும் வருத்தப்பட்டு என்னிடம் காசு எதுவும் வாங்காமல் ஏற்றிக்கொண்டு வந்து எங்கள் ஊரில் இறக்கி விட்டார்கள்.” என்கிறார், வேதனையோடு.

வழக்கறிஞர் வடிவலன்
வழக்கறிஞர் வடிவலன்

விசிக சமத்துவ வழக்கறிஞர் சங்க மாநிலத் துணைச் செயலாளர் வடிவேலனிடம் பேசினோம். ”தர்மபுரி மாவட்டத்தில் குறிப்பாக அரூர் வட்டப் பகுதியில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக சாதிய வன்கொடுமை நடந்து வருகிறது. இந்த பின்னணியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. நடத்துனர் ரகு என்பவர், அந்த பெண்மணி செய்து வருகிற தொழிலையும் மாட்டுக்கறி விற்பனையையும் சொல்லி பஸ்ஸில் ஏற விடாமல் தடுத்து அவமானப்படுத்தி இருக்கிறார். அப்படி என்ன அரசுக்கு விரோதமான பொருளை கொண்டு சென்றார்களா? தினந்தோறும் அரசி மற்றும் மதுபாட்டில்களை கடத்தி வருபவர்களை பஸ்சில் இருந்து இறக்க முடியாத இவர்கள் , மாட்டிறைச்சியை கொண்டு சென்றவர்கள் மீது மட்டும் வன்மம் இருப்பது ஏன் ? இவர்கள் மீது அரூர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அரசு சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.” என்கிறார்.

– மணிகண்டன்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.