வீழ்ந்த பொருளாதாரம் திணறும் மக்கள்..! மீண்டெழுமா இலங்கை?

-ஆதவன்

0

வானத்தில் பறவைப் பார்வையில் பார்த்தால், எங்கும் பச்சை பசேல் எனப் பசுமை நிறைந்த ஒரு சின்ன நிலப்பரப்பு கடலில் மிதந்து கொண்டிருக்கும் அந்தத் தீவுக்கு மரகதத் தீவு என்று பெயர். ஆம். இலங்கைக்குக் கடந்த நூற்றாண்டில் வழங்கப்பட்ட சிறப்பு பெயர்.

ஆயத்த ஆடைகள், தேயிலை ஏற்றுமதியாலும், வெளிநாட்டினர் வருகையால் சுற்றுலாத்துறையின் மூலம் கிடைக்கும் வருவாயிலும் செழித்திருந்த இலங்கை, விடுதலைப்புலிகளோடு நடந்த உள்நாட்டுப் போரில் புலிகளை அழிக்க இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் ஆயுத உதவி பெற்றது. உள்நாட்டுப் போரில் கவனம் செலுத்தியதால் நாட்டின் வளர்ச்சியில் அதன் பாராமுகம், இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானது என குறிப்பிடுகின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

2019ஆம் ஆண்டின் 2-ஆம் காலாண்டில் (ஏப்ரல்-ஜுன்) இலங்கையின் ஜிடிபி மதிப்பு 1.1% இருந்த நிலையில் 2020-ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாகப் பொருளாதாரம் பாதாளத்துக்குச் சென்று மைனஸ் 16.3% என வரலாறு காணாத கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. சுற்றுலாத்துறை முடக்கம், தேயிலை மற்றும் ஆடைகள் ஏற்றுமதி சரிவால் அந்நியச் செலாவணி கையிருப்பும் குறைந்து போனது. இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியைப் பார்த்த பன்னாட்டு நிறுவனங்களும் தங்கள் மூலதனத்தைச் சுருட்டிக் கொண்டு வெளியேறத் தொடங்கின.

2021, நவம்பர் நிலவரப்படி இலங்கை அரசிடம் 160 கோடி அமெரிக்க டாலர்தான் அந்நியச் செலாவணி கையிருப்பாக அடுத்த 12 மாதங்களுக்கு இருக்கிறது. ஆனால், வெளிநாட்டு கடன் மற்றும் உள்நாட்டு கடனாக இலங்கை அரசும், தனியார் துறையும் 730 கோடி டாலர் செலுத்த வேண்டும். இதில் 500 கோடி டாலர் சர்வதேசக் கடன் பத்திரங்களாக இருக்கின்றன. இந்தக் கடனை 2022, ஜனவரிக்குள் செலுத்த வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது.

- Advertisement -

இலங்கையின் ரூ.100/- பணமதிப்பு இந்திய ரூபாயில் ரூ.50/- மட்டுமே. பணத்தின் மதிப்பு குறைந்ததால், ஒரு கிலோ பருப்பின் விலை ரூ.250, சர்க்கரை கிலோ ரூ.215, உருளைக் கிழங்கு கிலோ ரூ.300, பெரிய வெங்காயம் கிலோ ரூ.400 உளுந்து கிலோ ரூ.2,000 என இன்றியமையாமை உணவுப் பொருட்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்து கொண்டே வருகிறது.

கேஸ் அடுப்பில் சமைத்தவர்கள் மண்ணெண் ணெய் அடுப்புக்கும், மண்ணெண்ணெய் அடுப்பில் சமைத்த மக்கள் விறகு அடுப்புக்கும் மாறிவிட்டார்கள். 3 வேளை சாப்பிட்ட மக்கள் 2 வேளைக்கும், 2 வேளை சாப்பிட்ட மக்கள் ஒருவேளைக்கும் மாறிவருகிறார்கள். ரேஷனில் உணவுப் பொருட்களை வாங்கவும், மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகளில் பொருட்களை வாங்கவும் மக்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள்.

பற்றாக்குறை உணவு உற்பத்தியைச் சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிலைக்கு இலங்கை அரசு சென்றுவிட்டது. இலங்கையில் உணவுப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, விலைவாசி மக்கள் வாங்கமுடியாத அள விற்கு எகிறிவிட்டது.

“மக்கள் அனைவருக்கும் உணவுப் பொருட்களை அரசே ஏற்பாடு செய்ய இயலாது; ஆகையால், வீட்டுத் தோட்ட முறைக்கு மக்கள் மாற வேண்டும்; முடிந்த அளவிற்கு வெளியிலிருந்து பொருட்கள் வாங்குவதைக் கைவிட்டு, உணவுத் தேவையைத் தாமாகவே நிறைவு செய்துகொள்ள வேண்டும்’’ என்று இலங்கை அரசு மக்களுக்கு அறிவுரையும் கூறியுள்ளது.

இலங்கைக்கு இருக்கும் மிகப்பெரிய அளவிலான வெளிநாட்டு கடனில் பெரும்பகுதி சீனாவுக்குச் செலுத்த வேண்டியவை. சீனாவுக்கு மட்டும் இலங்கை 650 கோடி டாலர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. “கடனுக்காகவும், பொருளாதார மீட்சிக்காகவும் சீனாவை அதிகம் சார்ந்திருக்கும் இலங்கையின் இந்தச் செயல், இலங்கையைச் சீனாவினுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடும்“ என்று அந்நாட்டின் எதிர்க்கட்சிகளும் பொருளாதார வல்லுநர்களும் எச்சரிக்கின்றனர்.

ஹம்பன்தோட்டா துறைமுக மேம்பாட்டுக்காகச் சீனாவிடம் பெற்ற 1400 கோடி டாலர் கடனை அடைக்க 2017-ஆம் ஆண்டிலிருந்து 99 ஆண்டுகளுக்கு அந்தத் துறைமுகத்தைச் சீனாவிற்குக் குத்தகைக்கு விட்டுள்ளது இலங்கை அரசு. இது மட்டுமின்றி, ஹம்பன்தோட்டா விமான நிலையம், தெற்கு விரைவுச் சாலை, அனல்மின் நிலையம், கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட பல திட்டங்களின் மூலமும் இலங்கையில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இலங்கையின் ஹம்பன்தோட்டா துறை முகம் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளிலும் சீனாவின் ஆதிக்கம் வலுத்து வருவது இந்தியாவுக்குப் பெரும் ஆபத்தாகும்.

4 bismi svs

குறிப்பாக ஹம்பன்தோட்டா துறைமுகம், கிழக்கு-மேற்கு சர்வதேசக் கடற்பகுதியில் இருக்கிறது. அந்தத் துறைமுகத்தைச் சீனாவிடம் இலங்கை ஒப்படைத்தால், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா ராணுவத்தைக் குவிக்க நேரிடும், இது இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும். ஏற்கெனவே தென் சீனக் கடல் பகுதியில் சீனா பிரச்சினை செய்து வரும் நிலையில் அது போன்றதொரு நிலை இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் உருவாகும்.

இலங்கையில் அதிகமாக முதலீடு செய்துள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று, சமூகக் கட்டமைப்பான கல்வி, மருத்துவமனை, வீடுகள் கட்டுதல், தூய்மையான குடிநீர், கழிவறை, தொழில்துறை மேம்பாடு ஆகியவற்றுக்கு இலங்கையில் அதிக முதலீட்டை இந்தியா அளித்து வருகிறது.

இந்திய அரசு வழியாக ரயில்வே, கட்டுமானம், பாதுகாப்பு உபகரணங்கள், தீவிரவாத எதிர்ப்பு, சோலார் திட்டம் உள்ளிட்டவை மூலம் 200 கோடி டாலர் அளவுக்கு நிதியுதவியை இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளது.

இந்தியாவிலிருந்து பருத்தி ஆடைகள், ஆயத்த ஆடைகள் மட்டுமின்றி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், காலணி, கணினி உதிரிபாகங்கள், இரும்பு, உருக்கு போன்றவையும் ஏற்றுமதியாகின்றன. இலங்கை பொருளாதாரப் பிரச்சினையில் சிக்கும்போது அது இந்தியப் பொருளாதாரத்தையும் பாதிக்கும். அன்னியச் செலவாணி பற்றாக்குறையால் உணவுப்பொருள் இறக்குமதி செய்ய முடியாமல் தவிக்கும் இலங்கைக்கு 6700 கோடி ரூபாய் கடன் வழங்கத் தற்போது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலை குறித்து அங்குள்ள ஆசிரியர் ஒருவர் கூறுகையில், “இலங்கையின் பொருளாதார நிலைமை மோசமாகி வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். முன்பு ரூ.10 ஆயிரம் கொண்டு சென்றால் 15 நாட்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிவருவேன். இன்று 5 நாட்களுக்குக்கூடப் பொருட்களை வாங்க முடியவில்லை. வருமானம் உயரவில்லை, ஆனால், விலைவாசி உயர்ந்துவிட்டது.

ஒரு மஞ்சள் பொடி பாக்கெட் விலை ரூ.300 விற்கிறது, தேங்காய் ஒன்று 100 ரூபாய் விற்கிறது, தக்காளி விலை கிலோ 300 ரூபாய்க்கு விற்கிறது. எந்தப் பொருள் எடுத்தாலும் விலை உயர்ந்துவிட்டது. சமையல் கேஸில் கலப்படம் செய்து சிலிண்டர்கள் வெடிப்பதாக வந்த செய்தியால் சிலிண்டர் நிறுத்தப்பட்டது. இதனால் மண்ணெண்ணெய் அடுப்பில்தான் சமைக்கிறோம்.

மண்ணெண்ணெய்க்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் காலை 5 மணிக்கு வரிசையில் நின்றால்தான் வாங்க முடிகிறது. இப்படியே சென்றால் இலங்கையின் நிலைமை சோமாலியா, எத்தியோப்பியா போன்ற பஞ்சம் ஏற்படும் நாடாக மாறிவிடும் போல் இருக்கிறது.

கூலி வேலைக்குச் செல்பவர் கள் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. குழந்தைகளுக்குச் சரிவர உணவு கொடுக்க முடியா மல் உழைக்கும் மக்கள் மற்றும் அன்றாட கூலிகள் பெருமளவில் துன்பப்படுகிறார்கள். அனைத்து வளங்களும் எங்கள் நாட்டில் இருந்தபோதிலும் ஏன் இந்தச் சிரமம் எனத் தெரியவில்லை”எனத் தெரிவித்தார்.

பன்னாட்டு பெருநிறுவனங் களின் வேட்டைக்காடாக அது மாற்றப்பட்டு விட்டது. சீனா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின்  உதவியோடு நடத்தி முடிக்கப்பட்ட இன அழிப்புக்குப் பின், ஆயுதம் கொடுத்து உதவிய நாடுகளின் அழுத்தத்திற்குப் பணிந்து நாட்டைத் திறந்து விட்டதன் விளைவைத்தான் இன்று இலங்கை சந்தித்துக் கொண்டு இருக்கின்றது” என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இலங்கைப் பொருளாதாரச் சீரழிவிலிருந்து மீளுமா? வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தமுடியாமல் திவாலாகுமா? என்ற கேள்வி களுக்குக் காலம் பதில் சொல்லும்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.