முதல் 4½ மணி நேர சிகிச்சை

0

பக்கவாத நோய்க்கான மருத்துவ முறைகளில், முதல் 24 மணி நேரத்தில் செய்யப்படும் வைத்தியமுறைகள் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.

பக்கவாத நோயின் அறிகுறிகளுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, நினைவுடன் இல்லாத நேரத்தில் உடன் வருபவர்களிடம் என்ன அறிகுறிகள் தென்பட்டன?
எத்தனை மணிக்கு முதல் அறிகுறி தோன்றியது? அவர் அத்தருணத்தில் என்ன வேலை செய்து கொண்டிருந்தார்? அவருக்கு வேறு ஏதாவது வியாதிகள் உள்ளதா? அவர் எதற்கேனும் மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருக்கிறாரா? ஆம் என்றால் என்ன வகையான மாத்திரைகள்உட்கொள்கிறார்? அவற்றை தொடர்ந்து எடுத்துக் கொண்டுள்ளாரா? பரம்பரையில் யாருக்கேனும் பக்கவாத நோயின் தாக்கம் இருந்ததா? புகை, மது மற்றும் போதைப் பழக்கம் ஏதேனும் உள்ளதா? என்ற தகவல்களை பெற்றுக் கொண்டு, நோயாளியானவர் பல பரிசோதனைகளுக்கு ஆட்படுத்தப்படுகிறார்.
அவருக்கு எந்தவிதமான பக்கவாத நோய் என்பதை முதலில் கண்டறிகிறோம். அதாவது இரத்தக் குழாய் அடைப்பினால் ஏற்பட்டதா அல்லது இரத்தக் குழாய் கசிவினால் ஏற்பட்டதா என்பதை CT/MRI SCAN மூலம் உறுதி செய்கிறோம்.

இரத்தக் குழாய் அடைப்பினால் ஏற்பட்ட பக்கவாத நோயாளியை முதல் 4½ மணி நேரத்தில் அழைத்து வந்தால் மட்டுமே, இரத்தக் குழாய் அடைப்பை கரைக்கும் மருந்தான RTPA (RECOMBINANT TISSUE PLASMINOGEN ACTIVATOR)என்ற மருந்தை இரத்தக் குழாய் வழியாக செலுத்தலாம்.

இது உடலில் இரத்தக் குழாய்க்குள் இரத்தக் கட்டு எங்கு இருந்தாலும் கரைத்து இரத்த ஓட்டத்தை மீண்டும் சீராக செல்லுமாறு செய்கிறது. எனவே தான் இந்த முதல் 4½ மணி நேரத்தை பொன்னான நேரம் என்று அழைக்கிறோம். எவ்வளவு விரைவாக இந்த மருந்தை கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு நன்மை பயக்கும்.

இந்த மருந்தை செலுத்துவதற்கு அந்த நோயாளிக்கு போதுமான உடல் தகுதி உள்ளதா இல்லையா என்பதை முதலில் முடிவு செய்கிறோம். இதற்கு அந்த நோயாளிக்கு மூளையில் இரத்தக் கசிவு இருக்கக் கூடாது, இதற்கு மூன்று மாதங்களுக்குள் அறுவை சிகிச்சை ஏதும் செய்திருக்கக் கூடாது, இரத்தம் உறைதலைத் தடுக்கும் மருந்துகள் எதையும் எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது, இன்னும் பல கேள்விகள் கேட்கப்பட்டு, சில வகையான இரத்த பரிசோதனைகள் செய்து அதன் பிறகே தகுதி நிர்ணயம் செய்யப்பட்டு அந்த நபருக்கு RTPA என்னும் மருந்தை செலுத்தலாமா அல்லது வேண்டாமா என்னும் முடிவை மூளை நரம்பியல் நிபுணர் எடுக்கிறார்.

இம்மருந்தினால் ஏற்படும் பின்விளைவுகள் தெள்ளத் தெளிவாக வரையறை செய்யப்பட்ட பிறகு தான் நோயாளிக்குச் செலுத்தப்படுகிறது.
நோயாளியின் இரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு மற்றும் இரத்தம் உறைதலின் காலஅளவு ஆகியவற்றை பார்த்து விட்டே நோயாளிக்கு செலுத்தப்படுகிறது.

இம்மருந்தை நோயாளிக்கு செலுத்தி 24 மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு Scan எடுக்கப்படுகிறது. நோயாளியின் தன்மைக்கு ஏற்றவாறு வேறு சில மருந்துகளும் அளிக்கப்படுகின்றன.

பொதுவாக பக்கவாத நோய் வந்துவிட்டால் நோயாளியின் இரத்த அழுத்தம் வெகுவாக அதிகரிக்கிறது. எனவே ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் இரத்தத்தின் அழுத்தத்தை பரிசோதித்து பார்த்து மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. முதல் 3 நாட்களுக்கு பக்கவாத நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து வைத்தியம் செய்யப்படுகிறது.

நான் மேற்கூறிய அனைத்தும் எல்லா நோயாளிகளுக்கும் பொருந்தும் என கூற முடியாது. பக்கவாத நோயின் தன்மை அடைத்த இரத்தக் குழாயின் சுற்றளவைப் பொறுத்தும், மூளையின் எந்தப்பகுதி பாதித்துள்ளது என்பதைப் பொறுத்தும் வேறுபடுகின்றன. சிறிய இரத்தக் குழாய் அடைப்பதினால் வரும் பக்கவாத நோய் பல நேரங்களில் சீக்கிரம் சரியாகி விடுகிறது.

இதுவரை நாம் முதல் 4½ மணி நேரத்தில் நோயாளி மருத்துவமனைக்கு வந்துவிட்டால் செய்யும் வைத்திய முறை பற்றி பார்த்தோம். அதற்கு மேல் வந்தால் என்ன வைத்தியமுறை செய்யப்படும் என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.