தொழிலாளர்களுடன் மல்லுக்கட்டும் ‘பெல்
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத மிகுமின் நிறுவனம்(Bharat Heavy Electrical Limited – BHEL) புதுதில்லியை தலைமையிடமாகக்கொணடு 1953ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்தியா முழுவதிலும் 17 இடங்களில் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தில் மின்னுருவாக்கு நிலையங்களுக்குத் தேவையான பாய்லர், டர்பைன், டர்போ ஜெனரேட்டர்கள், நிலைமின்னியல் தூசு வடிகட்டிகள் போன்ற கருவிகளும், சிமென்ட், எண்ணெய் தூய்மைப்படுத்தும் நிலையங்கள் போன்ற தொழில்துறை நிறுவனங்களுக்குத் தேவையான துணைக்கருவிகளையும் இந்நிறுவனம் உருவாக்கி வழங்குகிறது. இந்தியா மட்டுமிட்டுமின்றி, பன்னாட்டு இயக்கங்களுக்கான தனிப்பிரிவு கொண்டும் செயல்படுகிறது. மேலும், தமிழகத்தைப் பொறுத்தவரையில் திருச்சி, சென்னை, இராணிப்பேட்டை ஆகிய இடங்களில் செயல்பட்டுவருகிறது.
பெல் நிறுவனத்தின் எந்த கிளைகளிலும் இல்லாத அளவிற்கு அதிக வெல்டர்களைக் கொண்டது திருச்சிக்கிளை. இந்தியாவிலேயே இங்குதான் உயர் அழுத்தத்தில் வேலை செய்யும் வெல்டர்கள் அதிகம் உள்ளனர். எனவே, இங்கு மட்டுமே ஐ.பி.ஆர் டெஸ்ட் (IBR – Indian Boiler Regulations) முடித்த வெல்டர்கள் அதிகம் உள்ளனர். (ஐ.பி.ஆர் டெஸ்ட் என்பது உயர் அழுத்தத்தில் வேலை செய்வதற்காக முடிக்கவேண்டிய டெஸ்ட், வெல்டராக பெல்லில் பணிக்கு சேர்வோர் ஒருவருடத்திற்குள்ளாகவே இந்த டெஸ்ட்டை செய்து விடமுடியும்.. இதற்காக ஒரு வாரம் முன்னதாகவே பெல்லில் பயிற்சி அளிக்கப்படும். பின்னர், ஐ.பி.ஆர் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் பிராக்டிக்கல் மற்றும் வைவா நடைபெறும்.
அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே உயர் அழுத்த வெல்டிங் வேலைக்கு செல்ல தேர்வு செய்யப்படுவர். ஒரு முறை முடித்த டெஸ்ட்டுக்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்படும். அதன் பிறகு மீண்டும் பிராக்டிக்கல் மற்றும் வைவாவில் பங்கேற்று தேர்ச்சி பெற வேண்டும்).
2007ம் ஆண்டுக்கு முன்பு ஐ.டி அப்ரெண்டிஸ் முடித்துவிட்டு பணியில் சேர்ந்தவர்கள் 12ஆண்டுகளுக்கு பிறகு ஏ5 என்ற கிரேடு வந்த பிறகு தான் ஐ.பி.ஆர் டெஸ்ட்க்கு சென்றனர். ஏனெனில், அப்போது அதிக அழுத்தம் கொண்ட வேலைகள் திருச்சி பெல் நிறுவனத்தில் குறைவாகவே இருந்தது.
ஆனால், தற்போது உலக அளவிலேயே உயர் அழுத்தம் கொண்ட வெல்டிங் வேலைகள் இங்கு தான் அதிகமாக செய்யப்படுகிறது.
எனவே, வெல்டராக பணிக்கு சேர்ந்த சில நாட்களிலேயே ஐ.பி.ஆர் டெஸ்ட்டை முடித்து ஒரு வருடத்திற்குள்ளாகவே உயர் அழுத்த வெல்டிங் வேலைக்கு வந்து விடுகின்றனர். இதனால், மற்ற எந்த பெல் நிறுவனங்களிலும் இல்லாதபடி திருச்சியில் மட்டும் பணிஉயர்வு, தினப்படி உள்ளிட்ட சலுகைகள் மாறுபடும். உதாரணமாக. திருச்சி வெல்டர்கள் உயர் அழுத்தத்தில் வேலை செய்வதினால், இரத்த அணுக்களில் பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு சில சமயங்களில் புற்றுநோய்க்குக்கூட வாய்ப்புகள் உண்டு. இவர்களுக்கு மட்டும் பதவிஉயர்வு மற்ற அனைத்து ஊழியர்களைக்காட்டிலும் விரைவாக வந்து விடும்.
மேலும், இவர்களுக்கு ஹீட்டிங் அலவன்ஸ்ஸாக மாதம் ரூ.400 வழங்கப்பட்டு வருகிறது. திருச்சி பெல் சட்டப்படி 5 வருடங்களுக்கு ஒரு முறை படியில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
ஆனால், திருச்சி வெல்டர் மாதப்படியில் 12வருடம் ஆகியும் இதுவரையில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை மற்றும் ஐ.பி.ஆர் டெஸ்ட் முடித்தவர்களுக்கு பிரமோஷனும் முறையாக கிடைக்கவில்லை. மேலும், கடந்த 2011ம் ஆண்டு பெல்லில் அனைத்து துறையைச் சார்ந்தவர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்ட பொழுது, வெல்டர்ஸ்க்கு ஒரு வருடத்திற்கு முன்கூட்டியே வழங்கப்படும் பிரமோஷன் வழங்கப்படவில்லை.
அப்போது, பெல் வெல்டர்ஸ் சங்கத்தின் சார்பில் 11 நாள்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டு, சீனியர்ஸ்க்கு பதவி உயர்வு என்றும் மற்றவர்களுக்கு 6 மாத செட்டில்மெண்ட் எனவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதுவும் இன்றளவும் நடைமுறைபடுத்தவில்லை.
எனவே, தற்போது பெல் வெல்டர்ஸ் சங்கத்தின் முக்கிய கோரிக்கையான, ஐ.பி.ஆர் டெஸ்ட் முடித்து பணி செய்வோருக்கு பதவிஉயர்வு, வெல்டிங் மாதப்படியை, இரவுபடிக்கு நிகராக கொடுப்பது, கம்பெனியின் சட்டத்தில் இருக்கும் படி, உயர்அழுத்தத்தில் வேலை செய்வோரின் படி அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படுதல், P91. P92 உள்ளிட்ட மெட்டீரியல்களில் வேலை செய்யும் போது சுமார் 300 முதல் 350 டிகிரி வெப்பம் வெளியாகிறது.
ஆனால், அதற்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் தருவதில்லை உள்ளிட்டவைகளை மையப்படுத்தி ஐ.பி.ஆர் டெஸ்ட்க்கு போகாமல், நிறுவனத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் கடந்த 6 மாத காலமாக பெல்லில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போதும், நிர்வாகம் பணியாததால், ஜுன் 21 முதல் வேலைநிறுத்தப் போராட்டம் என அறிவித்தனர்.
இதனால், கடுப்பான நிர்வாகம், இந்த சங்கத்தின் முக்கியப்பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள் உள்பட 13பேரை வடஇந்தியாவிற்கு பணியிடமாற்றம் செய்தது. எனவே, இந்த சங்கத்தில் இருந்து கடந்த 14ம் தேதி மதுரை நீதிமன்றத்தில் பெட்டிசன் கொடுத்து வழக்கு 16ம் தேதி விசாரணைக்கு வந்தது. அதில், ஐ.பி.ஆர் வெல்டர்கள் எல்லாம் புதுப்பித்தல் செய்து பணியைத்தொடரவேண்டும் எனவும், பணிமாற்றத்திற்கான உத்தரவை தடைவிதித்தும் தீர்ப்பளித்தது. இந்நிலையில், இச்சங்கத்தின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு, வெல்டர்களின் வாழ்வாதாரம் காக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இது குறித்து பெல் வெல்டர்ஸ் சங்கத்தின் சேர்மன் சய்யது டாஜுதீன் மதானி கூறியதாவது, எங்கள் சங்கத்தில் மொத்தம் 950 பேர் உள்ளோம். எந்த ஒரு அரசியல் சார்பற்றும், அதிக நபர்களை உறுப்பினராகவும் கொண்ட சங்கம் எங்களுடையது. திருச்சி பெல் நிறுவனத்தின் முதுகெலும்பாக இருப்பவர்கள் வெல்டர்ஸ் தான். ஆனால் அவர்களின் அடிப்படையே இங்கு பாதிப்படுகிறது.
அதை பற்றி நிர்வாகம் கண்டு கொள்ளவே இல்லை. அவர்கள் மட்டும் கேளிக்கை சலுகை முதற்கொண்டு அனைத்தையும் அனுபவிக்கின்றனர். ஆனால், வெல்டர்ஸ்க்கு தரவேண்டிய சலுகையைக்கூட தரமறுக்கின்றனர். எனவேதான் கடந்த முறை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மற்ற சங்கத்தினை சேர்ந்தவர்களும் வந்தனர். ஏனெனில் எது நியாயம் என்று அவர்களுக்கு தெரிந்துள்ளது.
எனவே, நியாயத்தை புரிந்து கொண்டு, வெல்டர்ஸின் உணர்வுக்கும் மதிப்பளித்து நிர்வாகம் செயல்படவேண்டும் என்றார்.