பார்கின்ஸன்’ஸ் என்னும் நடுக்குவாதம்

0

மனிதர்களை பக்கவாதம், நடுக்குவாதம், முகவாதம், முடக்குவாதம் என்னும் பல வகையான வாதங்கள் தாக்குகின்றன. கடந்த 30 வாரங்களாக பக்கவாத நோய் பற்றி பார்த்தோம். இந்த வாரம் முதல் பார்கின்ஸன்’ஸ் என்னும் நடுக்குவாத நோய் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

நடுக்குவாத நோய் ஒரு இலட்சத்தில் 40 முதல் 50 பேரை பாதிக்கக்கூடியது. இதைப் பற்றிய போதுமான விழிப்புணர்வு நம் சமுதாயத்தில் இல்லை. ஒரு அலைப்பேசியோ அல்லது ஒரு ஆடையையோ வாங்கும் போது பல்வேறு வகையான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுதான் அதை நாம் வாங்குகிறோம். ஆனால் நமது உடல் உறுப்புகளின் தன்மைப் பற்றிய தெளிவு நம்மில் உள்ளதா? என சிந்தியுங்கள்.

ஒரு விழாவிலோ அல்லது தேநீர் கடையிலோ நான்கு பேர் சேர்ந்து அமர்ந்திருக்கும் போது, அரசியல் பற்றியோ கிரிக்கெட் பற்றியோ, பல்வேறு விதமான விவாதங்கள் நடைபெறுவதை நம்மில் பலர் கேட்டிருப்போம், ஏன் பேசியும் இருப்போம்.

இப்படி பேசும் போது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்னனென்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி எத்தனை முறை பேசி இருப்பீர்கள் என்று யோசியுங்கள்.

என்றேனும் ஒரு நாள் உடல் உபாதைகளை பற்றியும் அதற்காக நான் இந்த மருத்துவரிடம் சென்றேன், அவர் மாத்திரைகளை சாப்பிடச் சொன்னார், ஒரு மாதம் கழித்து வரச் சொன்னார் என கவலையுடன் சிலர் பேசிக்கொண்டிருப்பர். இன்னும் சிலர் ஒரு படி மேல் சென்று வாழ்ந்தது போதும் என்று நினைக்கிறேன், மற்றவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் போய் விடலாம், என்று சர்வசாதாரணமாக கூறுவர்.

மரணமும் ஜனனமும் நம் கையில் இல்லை, வாழ்கின்ற காலத்தில் நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மட்டுமே நம் கையில் உள்ளது என்பதை மறப்பதினால் தான், இப்படிப்பட்ட தேவையற்ற எண்ணங்கள் மனதில் வந்து செல்கின்றன. பிறக்கும் போதே பார்வைத் திறன் இல்லாதவர்கள் கூட சாதித்த வரலாறு இப்பூவுலகில் உள்ளது.

ஆனால் அனைத்து உறுப்புகளையும் சரிவரப் பெற்ற மனிதர்கள் தான், அதை எப்படி பாதுகாப்பது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்வதில்லை.

மனிதன் விரும்பினால் சாதிக்க முடியாத செயல்களே இத்தரணியில் இல்லை என்பது உறுதி. ஆனால், விருப்பம் நிறைவேற நேர்மையான வழியில் மனப்பதட்டமில்லாமல் முறையான வாழ்வியல் பாதைகளை அமைத்து செயல்களை ஆற்றினோமேயானால் வெற்றி நிச்சயம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், நம்மில் எத்தனை பேர் நான் ஆரோக்கியமாகவும், ஆனந்தமாகவும், நூறு வயதைத் தாண்டி இப்புவியில் வாழ்வேன் என்ற விருப்பம் கொண்டுள்ளோம்.

அழியக்கூடிய பொருள்கள் மீது ஆசை வைத்து, ஆருயிரை பாதுகாக்கும் உடல் மீது நாட்டம் இல்லாமல் இருக்கிறோம். இதுவே மனித இனத்திற்கு ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் மூலக்காரணம். இதை உணரும் நேரமிது. நமது உடல் உறுப்புகளை பற்றிய அறிவு கொண்டு, நமது உடலை நேசிப்போமேயானால் யாரும் மருத்துவமனையை நாடி யாசிக்கத் தேவையில்லை.

நமது வாழ்வியல் முறை, என்று இயற்கையை விட்டு விலகியதோ அன்றிலிருந்து நமது வாழ்க்கை நோய்களின் பிடியில் சிக்கிக் கொண்டது. நேயர்களே நமது உடல் உறுப்புகளை இயக்கும் மூலவர் நமது மூளை. நமது கை, கால், அங்க அசைவுகள் மூளையிலிருந்து உருவாகிறது.
மூளைதான் நமது உடலின் ஆசானாக இருந்தபோதிலும், ஒரு பகுதி செய்யும் வேலையை இன்னொரு பகுதி கண்காணிக்கிறது.

காண்காணிப்பில் குறை ஏற்பட்டால் எப்படி தவறுகள் நடக்கிறதோ, அதேபோல் மூளையின் ஒரு பகுதியை கண்காணிப்பதில் குறை ஏற்படும் போது, வரும் வியாதியே பார்கின்ஸன்’ஸ் என்ற நடுக்குவாத நோய்.

என்ன நேயர்களே புரிந்து கொள்ள சிரமமாக இருக்கிறதா?

இதைப் பற்றி அடுத்தவாரம்
விரிவாகப் பார்ப்போம்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.