அண்ணியுடன் கள்ளத் தொடர்பு : இளைஞர் வெட்டிக் கொலை!
அண்ணியுடன் கள்ளத் தொடர்பு : இளைஞர் வெட்டிக் கொலை!
கள்ளத் தொடர்பு பிரச்சனை காரணமாக திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் அவரது உறவினரால் நள்ளிரவில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மஜீதியா தெருவைச் சேர்ந்தவர் அப்துல் கனி (36). இவர் திருமணமாகி, சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்.
மலேசியாவில் பணிபுரிந்து வந்த அப்துல் கனி, கரோனா ஊரடங்கு காரணமாக அண்மையில் சொந்த ஊருக்கு திரும்பிவந்துவிட்டார். இந்நிலையில் அவருக்கும் அவரது அண்ணிக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவருக்கும் அதே தெருவில் வசிக்கும் அவரது உறவினரான அஷ்ரப் அலி (40) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, டிசம்பர் 27-ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறிய அப்துல் கனி அங்குமிங்கும் சுற்றி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் அப்துல் கனி தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்திறங்கிய அஷ்ரப் அலி, அரிவாளால் கழுத்தில் வெட்டியதில் படுகாயமடைந்த அப்துல் கனி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அங்கிருந்து தப்பியோடிய அஷ்ரப் அலியை அப்பகுதியில் இருந்தவர்கள் துரத்திச் சென்று, மடக்கிப் பிடித்தனர். இதுபற்றி தகவலறிந்த தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு, அப்துல் கனியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச் சம்பவம் தொடர்பாக அஷ்ரப் அலியை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அஷ்ரப் அலியும் மலேசியாவில் வேலை பார்த்து வந்துள்ளார். கரோனா ஊரடங்கு காரணமாக அவரும் அண்மையில்தான் சொந்த ஊர் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.