கூட்டணிகளுக்காக இல்லம் தேடிச் செல்லும் அதிமுக – வேதனையில் இரத்தத்தின் இரத்தங்கள் ! 

2

பாமக, தேமுதிக கூட்டணிகளுக்காக இல்லம் தேடிச் சென்ற அதிமுக வேதனையில் இரத்தத்தின் இரத்தங்கள் !  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) யிலிருந்து அதிமுக விலகியது முதல் தேமுதிக கூட்டணிக்காக விஜயகாந்த் இல்லம் வரை சென்றது வரையிலான நிகழ்வுகளில் சராசரி அடிமட்ட அதிமுகவின் இரத்தத்தின் இரத்தமான உடன்பிறப்புகள் என்னும் தொண்டர்கள் வாய்விட்டுச் சொல்லமுடியாத வேதனையிலும் மனஉளைச்சலிலும் உள்ளனர் என்பதை விவரிக்கின்றது இந்தச் செய்திக் கட்டுரை.

திமுக அரசு விரைவில் கவிழும் -  எடப்பாடி பழனிசாமி 
திமுக அரசு விரைவில் கவிழும் –  எடப்பாடி பழனிசாமி
ரோஸ்மில்

சில மாதங்களுக்கு முன்பு தில்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டம் கூட்டப்பட்டது. அக் கூட்டத்தில் தலைமை அமைச்சர் மோடிக்குப் பக்கத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமரவைக்கப்பட்டு, அதிமுக தேசிய அளவில் கவனம் பெற்றது. தமிழ்நாட்டு, பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பாஜகவோடு கூட்டணி சேர்ந்து தோல்வியைச் சந்தித்திருந்தாலும், பாஜக எடப்பாடிக்குக் கொடுத்த மரியாதையை எண்ணி மகிழாத அதிமுக கொண்டர்கள் கிடையாது என்று அடித்துச் சொல்லலாம். ஒரே நாடு, ஒரே தேர்தல் 2024ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும் என்று பாஜக காட்டிய ஆசையில் அதிமுக “2024இல் பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் முதல் அமைச்சர் எடப்பாடி” என்ற முழக்கத்தை முன்வைத்துக் கொண்டாட்ட மனநிலையில் இருந்தது. கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 5 மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிப்பு செப்டம்பரில் அறிவிக்கப்பட்டபோது, பாஜக காட்டிய ஆசை வலையில் நாம் வீழ்ந்துவிட்டோம் என்று உணர்ந்த அதிமுக தலைமை, 2 கோடி அதிமுக தொண்டர்கள் பாஜக கூட்டணியை விரும்பவில்லை என்று NDA கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிமுக அறிவித்தது. இப்படியான திடீர் முடிவை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வந்தனர் என்பது உண்மையே.

நரேந்திர மோடி - எடப்பாடி பழனிசாமி
நரேந்திர மோடி – எடப்பாடி பழனிசாமி
- Advertisement -

- Advertisement -

கடந்த ஜனவரி மாதம் தொடங்கி வரும் நாடாளுமன்றத்திற்கு இந்திய அளவில் கட்சிகள் தங்களின் கூட்டணியை அமைக்கத் தொடங்கின. தமிழ்நாட்டில் திமுக 2016, 2019ஆகிய தேர்தல்களில் அமைத்த வலுவான கூட்டணியைத் தொடர்ந்தது. அதிமுக பொதுச்செயலாளர் “அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று கூறியிருந்தார். இதுவரை எந்தக் கட்சியும் அதிமுகவோடு கூட்டணியை இறுதி செய்யாத நிலையே தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அதிமுக கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறதா? அல்லது தனித்துப் போட்டியிடப் போகின்றதா? என்ற கேள்விகளுக்கு இதுவரை விடை கிடைக்காமல் அதிமுக தொண்டர்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த அதிமுக தொண்டர் ஒருவர் நம்மிடம் பேசும்போது,“அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து விலகியது தவறான முடிவோ என்றே எண்ணத் தோன்றுகின்றது. காரணம் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் பல கூட்டணி முறிவுக்குப்பின்னர் அதிமுகவுக்கு வரத் தயங்குகிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சி தேசிய அளவில் நாங்கள் NDAவில்தான் இருக்கிறோம் என்றார்கள். பாஜக எங்களுக்குத் துரோகம் செய்துவிட்டது என்று கூறிப் பாஜக கூட்டணியிலிருந்து விலகிய டாக்டர் கிருஷ்ணசாமியின் அதிமுக பக்கம் சாய்வார் என்று எதிர்பார்த்தால் அவர் எந்தப் பக்கமும் சேராமல் இருக்கிறார். அதிமுகவிடம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வாங்கிய தமிழ்மாநிலக் காங்கிரஸ் கட்சியின் வாசன், அப் பதவியிலிருந்து இராஜினாமா செய்யாமல் பாஜகவோடு கூட்டணி என்று அறிவித்துவிட்டார். வாசனின் துரோகத்தைத் தோலுரித்துக் காட்டும் தைரியமான மனநிலையில் அதிமுக இல்லாமல் போனது மிகவும் மனத்திற்கு வருத்தமாக உள்ளது.

தேமுதிகவோடு கூட்டணி பேசக் குழு அமைக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி அறிவித்துள்ளார். எதற்குக் குழு அமைப்பது தெரியவில்லை. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருதுநகர், கடலூர் ஆகிய தொகுதிகளோடு மாநிலங்களவை உறுப்பினர் கேட்கிறார்கள். கேட்டதைக் கொடுக்கிறோம் அல்லது மாநிலங்களவை உறுப்பினர் இல்லை 4 தொகுதிதான் என்பதைப் பேச எதற்குக் குழு அதிமுகவின் தொண்டர்களாகிய எங்களுக்கு எதுவும் புரியவில்லை. மாவட்டத் தலைவர்களைக் கேட்டால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் கூட்டணி எல்லாம் அமைந்துவிடும் என்று சொல்லி அமைதிப்படுத்தி அனுப்புகிறார்கள்” என்று அதிமுகவின் வெற்றி நாடாளுமன்றத் தேர்தலில் சாத்தியப்படாதோ என்ற மனநிலையில் தொண்டர்கள் உள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ளமுடிந்தது.

4 bismi svs
டாக்டர் ராமதாஸ் - சி.வி. சண்முகம்
டாக்டர் ராமதாஸ் – சி.வி. சண்முகம்

அதிமுக பொறுப்பாளர் ஒருவர் நம்மிடையே பேசும்போது,“புரட்சித்தலைவி அம்மா இருந்தபோது அதிமுக இருந்த கம்பீரம் இப்போது காணாமல் போய்விட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பில் தமிழ்நாட்டில் அதிமுக 4 இடங்களைப் பெறும் என்றும் மற்றொரு கருத்துக்கணிப்பு 0 இடங்களைத்தான் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. தேசிய அளவிலான கருத்துக்கணிப்பில் NDA கூட்டணி, INDIA கூட்டணி என்றும் ADMK என்று போடாமல் Others என்று போட்டு எங்களை அவமானப்படுத்துகிறார்கள். பாஜக வாசல் கதவையும் ஜன்னலையும் கூட்டணிக்காகத் திறந்து வைத்துக் காத்திருக்கிறது என்றால் அதிமுக தன்னிலையிலிருந்து இறங்கி வந்து, பாமக கூட்டணிக்காகத் தைலாபுரம் தோட்டம் சென்று சி.வி.சண்முகம் கதவைத் தட்டி, கூட்டணிக்கு வாருங்கள் என்று கையேந்தி நிற்கிறார். பண்ணையார் பாணியில் மருத்துவர் ஐயாவும் அன்புமணியும் பார்த்துச் சொல்கிறோம்…. விரட்டாத குறையாக வெளியே அனுப்புகிறார்கள். தலையைச் சொரிந்துகொண்டு சி.வி.சண்முகம் பரிதாபமாக நிற்பதைப் பார்த்தால் தொண்டர்களாகிய எங்களின் கண்கண் கோபாத்தால் சிவக்கின்றன.

அதிமுக - தேமுதிக பேச்சு வார்த்தை 2024
அதிமுக – தேமுதிக பேச்சு வார்த்தை 2024

இந்த அவமானம் போதாது என்று, தேமுதிகவோடு கூட்டணி அமைக்கச் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்குச் சென்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவைச் சந்தித்துப் பொன்னாடை போர்த்தியுள்ளனர் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி,வேலுமணி,அன்பழகன், பெஞ்சமின் ஆகியோர் படையெடுத்துச் சென்று கூட்டணிக்கான அச்சாரத்தைப் போட்டுள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இராயபுரத்தில் நம் தலைமைக் கழகம் இருக்கிறது. அவர்களை அங்கே வரச்சொல்லிக் கூட்டணி பேசியிருக்கலாம். மரியாதையாக இருந்திருக்கும்.

ஜெயக்குமார் - அதிமுக
ஜெயக்குமார் – அதிமுக

அதிமுக தொண்டர்கள் அவமானத்தால் கூனிக்குறுகியுள்ளனர் என்பதை எங்கள் தலைமை எப்போது உணரும் என்பது புரியவில்லை. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,‘விடுதலைச் சிறுத்தைகள்’ நம்மோடு வரும் என்று கீறல் விழுந்து ரிக்கார்டு போலவும், குடுகுடுப்பைக்காரன் போலவும் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதைவிடவும் ஜெயகுமார் தன் மகனுக்கு எப்படியாவது ‘சீட்’ வாங்கிவிடவேண்டும் என்ற குறியில் இருந்தால் கட்சி எப்படி வெற்றிபெறும். திமுகவும் பாஜகவும் நேரடி போட்டி என்றே ஊடகங்கள் செய்திகளைக் கட்டமைக்கின்றன. போட்டியில் அதிமுக எங்கே என்று பூதக்கண்ணாடி வைத்துத் தேட வேண்டிய நிலையில்தான் தொண்டர்கள் உள்ளோம்” என்று தன் மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.

அதிமுக, திமுக – பாஜக கட்சிகளை எதிர்கொண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது என்பதைவிட, அதிமுக என்னும் பலமான தொண்டர்களின் கட்சி இன்னும் வெளிப்படை தன்மையோடு தங்களின் செயல்பாடுகளை அமைத்துக்கொண்டு, தொண்டர்களை மனஉறுதி கொள்ள முதல்கட்டமாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அப்படிச் செய்தால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கௌரவமாகத் தோற்றாலும், 2026 சட்டமன்றத் தேர்தலில், வெற்றியை நோக்கி நடைபோட உதவிகரமாக இருக்கும். இந்த உண்மையை அதிமுக தலைமை உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதே முதன்மையாக இருக்கவேண்டும்.

-ஆதவன்

5 national kavi
2 Comments
  1. ரெ.நல்லமுத்து says

    இன்றைய அரசியல் நிலவரம் குறித்து மிகவும் தெளிவாகவும், விளக்கமாகவும், நடுநிலையோடு செய்தி வந்துள்ளது. வாழ்த்துக்கள்

  2. Pattu says

    இன்றைய நடு நிலை செய்திக்கு வாழ்த்துகள்

Leave A Reply

Your email address will not be published.