பக்கவாதத்தை விளைவிக்கும் காரணிகளில் மாற்ற முடியாதவைகளான வயது, பாலினம், மரபணு சம்பந்தபட்ட நோய் பற்றி சென்ற வாரம் பார்த்தோம். நம்மால் மாற்றக் கூடிய காரணிகள் பற்றி பார்ப்போம்.
நமது வாழ்வியல் முறைகளே 30 சதவிகிதம் பக்கவாத நோய் வருவதற்கு காரணமாக அமைகிறது என்று சென்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
என்னிடம் பக்கவாத நோய்க்கு சிகிச்சை பெற வருபவர்களில் பலர், ‘என்னுடைய தந்தைக்கு (அல்லது தாத்தாவிற்கு) சர்க்கரை வியாதி, இரத்தக் கொதிப்பு, குடிப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் என எதுவும் இல்லை. அப்படி இருந்தும் எனக்கு எப்படி பக்கவாத நோய் வந்தது?’ என்று கேட்பார்கள்.
இன்னும் சிலர், ‘என்னுடைய கணவர் தீவிர உழைப்பாளி. எப்போதும் வயலில் இறங்கி வேலை செய்து கொண்டு தான் இருப்பார். அப்படி இருந்தும் எப்படி பக்கவாத நோய் வந்தது?’ என்று கேட்பார்கள். ‘எந்த கெட்டப் பழக்கமும் இல்லாதவர்களுக்கு கூட பக்கவாத நோய் வரும்’ என்ற பதிலை நான் சொன்னபோது பலர் அதிர்ச்சியடைந்தார்கள். உண்மையும் அது தான்!.
இந்த புவியில் ஜனனித்தது முதல் நாம் ஒவ்வொரு நாளும் முதுமையை நோக்கி செல்கிறோம். எப்படி நம்முடைய தோல் சுருங்குகிறதோ, முடி நரைக்கிறதோ அதைப்போலவே நமது இரத்தக் குழாய்களிலும் ஒரு சில மாற்றங்கள் தினமும் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.
Dr. அ.வேணி MD., DM (NEURO)
மூளை நரம்பியல் நிபுணர்
நாம் தினமும் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்வது வரை நமக்காகவும், நம் குடும்பத்திற்காகவும் , உணவு, உடை, உறைவிடம் போன்ற அத்தியாவசிய தேவைகளை அடைவதற்காகவும் மற்றும் நமது குழந்தைகளின் எதிர்காலம், படிப்பு போன்றவற்றிற்காகவும் அன்றாடம் பல போராட்டங்களை எதிர்கொள்கிறோம்.
நம்மில் எத்தனை பேர் நமது உடலின் இயல்பு அறிந்து, இயற்கையோடு இயைந்து இயல்பான வாழ்வு வாழ்கிறோம்? நாம் நோயின்றி ஆரோக்கியமான வாழ்வு வாழ அன்றாடம் கவனிக்க வேண்டிய செயல்களை பற்றிய எண்ணம் கொண்டுள்ளோமா?…
அதாவது நாம் உண்ணும் உணவு, உறங்கும் உறக்கத்தின் அளவு, உடல் எடை, உடற்பயிற்சி, உள்ள அமைதி, மன அழுத்தம், பரபரப்பான வாழ்க்கை ஆகியவற்றை தான், நான் நம் வாழ்வியல் முறை என்று கூறுகிறேன். இந்த வாழ்வியல் முறை தான் இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதையும், பக்கவாத நோய் ஒருவருக்கு எந்த வயதில் இரத்தக் குழாய் அடைத்து வரும் என்பதையும் நிர்ணயிக்கிறது.
இது மட்டுமல்லாமல், சராசரி மனிதனுக்கு இருக்கின்ற பல்வேறு நோய்களும் பக்கவாதத்தை விளைவிக்க கூடியவையே!.
அதில் மிகவும் முக்கியமானது இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, மாரடைப்பு, இதயத்தின் இயக்க கோளாறுகள், இதயத்தில் ஏற்படுகிற சில பிறவி கோளாறுகள், இதயத்தில் வால்வுகளில் வரும் கோளாறுகள், அதிகமான கொழுப்பின் அளவு, இணைப்புத்திசு சம்பந்தப்பட்ட வியாதிகள் ஆகும். குடிப்பழக்கம், புகைப்பழக்கம், பல்வேறு மருந்துகளின் போதைப்பழக்கம் ஆகியவையும் பக்கவாத நோயை உருவாக்கும் காரணிகளாகும்.
பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி இருப்பதனால் பக்கவாத நோய் பெண்களை அதிகம் பாதிப்பதில்லை. ஆனால், ஒரு பெண் கருவுற்றிருக்கும் போதும், குழந்தை பிறந்த 42 நாட்களுக்குள்ளும் பக்கவாத நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மாதவிடாய் சுழற்சி நின்ற பிறகு பெண்களுக்கு பக்கவாத நோயின் தாக்கங்கள் ஆண்களைவிட அதிகமாகவும், மிகவும் மோசமாகவும் வரக்கூடும். இப்படி பக்கவாத நோய் வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.